search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக சொல்ல முடியாது- எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. பதில்
    X

    தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதாக சொல்ல முடியாது- எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க. பதில்

    • தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம்-ஒழுங்கு பிரச்சினை 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி ஆட்சி.
    • தூத்துக்குடி அருகே அரசுப்பள்ளி முன் ஆசிரியை படுகொலை 2019 ஆகஸ்ட் 8-ல் நடந்தது.

    சென்னை:

    தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிவாலயத்தில் நிருபர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கள்ளக்குறிச்சி சம்பந்தமாக சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டதை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை விட்டுள்ளார்.

    முதலில் அவர் தான் எடுத்த நடவடிக்கை குறித்து தன்னையே பரிசீலித்து கொள்ள வேண்டும். 2018 -ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்திலே நெடுஞ்சாலை துறையிலே 4800 கோடிக்கு ஊழல் செய்ததற்காக வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க. சார்பில் நான்தான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தேன்.

    அந்த வழக்கில் நாங்கள் சி.பி.ஐ. விசாரணை கோரவில்லை. ஆனால் நீதிமன்றமே இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

    இவ்வளவு பேசுகிற எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் கள்ளக்குறிச்சி வழக்கை எதிர்த்து உச்சநீதிமன்றத்துக்கு தமிழக அரசு, ஸ்டாலின் போகக்கூடாது என்று மனசாட்சியை அடகு வைத்து விட்டு அறிக்கை விட்டுள்ளார்.

    அவர்தான் முதன் முதலில் உச்சநீதிமன்றத்தை நாடி அவர் மீது சி.பி.ஐ. வழக்கு நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடர்ந்து தடை பெற்றார். அந்த வழக்கு நடைபெற்றது.

    வழக்கு 2022-க்கு பிறகு விசாரணைக்கு வருகிறபோது தி.மு.க. சார்பில் அந்த வழக்கை தொடர்ந்த நானே சி.பி.ஐ. விசாரணை தேவையில்லை என்று கேட்டதற்கு, ஆட்சேபனை இல்லை என்று நாங்கள் சொன்னோம். காரணம் என்னவென்றால், சி.பி.ஐ. வேண்டும் என்று நாங்கள் எந்த காலத்திலும் கேட்டது கிடையாது. அதற்கு பல காரணங்கள் உண்டு.

    2016-ம் ஆண்டு தமிழ் நாட்டிலே, திருப்பூர் அருகே தேர்தல் நேரத்தில் 570 கோடி ரூபாய் கண்டெய்னர் லாரிகள் பிடிபட்டது. அப்போது அ.தி.மு.க. தான் ஆட்சியில் இருந்தது. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். அந்த 570 கோடி ரூபாய் கட்டு கட்டான நோட்டுகள் தேர்தல் அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

    அது எங்கிருந்து வந்தது? கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூரில் நடுரோட்டில் கைப்பற்றுகிறார்கள். இது சம்பந்தமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். அந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று 2017-2018ல் உத்தரவு போடப்பட்டது. இன்றைக்கு நான் கேட்கி றேன். சி.பி.ஐ. இதுவரையில் அந்த வழக்கு பற்றி ஏதேனும் வழக்கை துலக்கி இருக்கிறதா? விசாரணை நடத்தி இருக்கிறதா? என்பதை கேட்டு நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். ஏனென்றால் சி.பி.ஐ. எப்படிப்பட்ட விசாரணையை செய்யும் என்பதற்கு இதை விட எடுத்துக்காட்டு தேவை இல்லை.

    இதுவரை அந்த ரூ.570 கோடி பணம் யாருக்கு சொந்தம்? யாருடைய பணம் என்று கண்டுபிடித்து நாட்டு மக்களுக்கு சி.பி.ஐ. சொன்னதா? சொல்லவில்லை. அதைப்பற்றி எங்களுக்கு கவலையில்லை.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி கேட்பது போல, உச்சநீதிமன்றத்துக்கு நாங்கள் போக வேண்டியது அவசியம் இல்லை என்றாலும் கூட கள்ளக்குறிச்சி சம்பவத்திலே, உடனடியாக முதலமைச்சர் துரிதமாக நடவடிக்கை எடுத்து ஏறத்தாழ 57 மருத்துவர்களை அங்கு அனுப்பினார். கலெக்டர் மாற்றப்பட்டார். எஸ்.பி. சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

    சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் உடனடியாக கைது செய்யப்பட்டார்கள். இதில் எல்லாவிதமான நடவடிக்கையும் அரசு மேற்கொண்டது.

    ஆனால் எடப்பாடி பழனிசாமி யோக்கியர் போல, அப்பீல் போக கூடாது, சி.பி.ஐ. விசாரணைக்கு சென்றார். நான் கேட்கிறேன், இவர் தானே முதன் முதலில் ஒடினார். சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று இன்றைக்கு பேசுகிறார்.

    இவருடைய ஆட்சியில் ஒரு வழக்கறிஞர் கொலை செய்யப்பட்டார் என்ற சம்பவத்தை வைத்துக்கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்கிறார். இவர்கள் ஆட்சியில் நடக்கவில்லையா?

    இதே சென்னையில் ஒரு மத்திய அமைச்சராக இருந்த தலித் எழில்மலையின் மருமகன் கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் 2 நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வந்தது. அது யாருடைய ஆட்சியில் நடந்தது. ஆகவே தனிப்பட்ட கொலைகள் நடப்பதற்கும் சட்டம்-ஒழுங்குக்கும் சம்பந்தம் இல்லை என்பதை முதலமைச்சராக இருந்த எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.

    இப்போது ஓசூரில் வழக்கறிஞர் வெட்டப்பட்டது தனிப்பட்ட விவகாரம், காதல் விவகாரம். உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். தஞ்சாவூரில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதை எடப்பாடி குறிப்பிடுகிறார். அதுவும் தனிப்பட்ட தகராறு.

    அதாவது சட்டம்- ஒழுங்கு என்பது என்ன என்பதை முதலில் எடப்பாடி புரிந்து கொள்ள வேண்டும்.

    தூத்துக்குடியில் நடைபெற்றது சட்டம்-ஒழுங்கு பிரச்சனை 13 பேரை சுட்டுக்கொன்றது எடப்பாடி ஆட்சி. அப்போது டி.வி.யில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என்று சொன்னவர்தான் இந்த எடப்பாடி பழனிசாமி.

    அதேபோல் அம்மா, அம்மா என்று மூச்சுக்கு 32 தடவை சொல்கிற இவரது தலைவி, அம்மா கடைசி காலத்தில் வாழ்ந்தது கொட நாட்டில்தான்.

    முதலமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா ஏறத்தாழ 3 ஆண்டு காலம் கொடநாட்டில் இருந்துதான் அரசாங்கத்தை நடத்தினார். இது எல்லோருக்கும் தெரியும். அந்த அம்மையார் வாழ்ந்த கொடநாடு வீட்டில் காவலாளி பொன்பகதூர் கொலை செய்யப்பட்டார். 5 கொலை அங்கு நடந்து உள்ளது.

    பலகோடி ரூபாய் கொள்ளையடித்து கொண்டு போனார்கள். இது எடப்பாடி பழனிசாமி ஆட்சியில்தான் நடந்தது. இவரால் இதை தடுக்க முடிந்ததா?

    இதெல்லாம் சட்டம்-ஒழுங்கு கெட்டதுக்கு அடையாளம் ஆகும். ஆனால் தனிப்பட்ட முறையில் நடக்கும் கொலை எல்லாம் சட்டம்-ஒழுங்கு என்று பேசுவது நியாயம் அல்ல.

    எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் எத்தனை ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு என்னிடம் சான்று உள்ளது.

    கும்பகோணத்தில் தனியார் பள்ளி ஆசிரியை குத்தி கொலை. இது 2018, நவம்பர் 2-ந்தேதி நடந்தது.

    பெரம்பலூர் அருகே பட்டப்பகலில் ஆசிரியை வழிமறித்து கத்தியால் குத்தி கொலை. இது 2018 ஆகஸ்ட் 14-ல் நடந்தது.

    ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் ஆசிரியை படுகாலை , கணவன் கைது. இது 2020 டிசம்பர் 23-ல் நடந்தது.

    கோவையில் கல்லூரி ஆசிரியை கழுத்தை அறுத்து தீ வைத்து எரித்து கொலை 2017-ஜூலை 8-ல் நடந்தது.

    சென்னையில் கள்ளக்காதல் விவகாரம் காரை ஏற்றி கொலை செய்தது ஏன்? கைதான காதலன் பரபரப்பான வாக்குமூலம் 2017, மே-9ல் நடந்தது.

    தூத்துக்குடி அருகே அரசுப்பள்ளி முன் ஆசிரியை படுகொலை 2019 ஆகஸ்ட் 8-ல் நடந்தது.

    இப்படி எடப்பாடி ஆட்சியில் இவ்வளவு ஆசிரியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல்தான் தஞ்சையில் நேற்று நடந்துள்ளது. இதை வைத்து கொண்டு சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது என்று பேசுவது எந்த வகையில் நியாயம்.

    எடப்பாடி ஆட்சியில் மட்டும் 1672 கொலைகள் நடந்துள்ளன. ஆனால் தி.மு.க. ஆட்சியில் 792 கொலைகள் நடந்துள்ளது. இன்றைக்கு கொலைகள், குற்றங்கள் குறைந்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×