search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்- துணை முதலமைச்சர்
    X

    சென்னையில் எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் எதிர்கொள்ள தயார்- துணை முதலமைச்சர்

    • சென்னையில் கடந்த முறை 5 நாட்கள் வரையில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கிய தண்ணீரையும் உடனடியாக அகற்றினோம்.
    • சென்னையில் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் மழை வெள்ளத்தை சரி செய்வதற்கு எப்போதுமே துணையாக இருக்கிறீர்கள்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தின்போது சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்களை பாராட்டும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.

    இந்த நிலையில் அவர்களை மேலும் ஊக்கப் படுத்தும் வகையில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று அவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.

    இந்த உதவிகள் வழங்கும் விழாவுக்கு சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேகர்பாபு ஏற்பாடு செய்திருந்தார்.

    வேப்பேரியில் உள்ள தனியார் பள்ளியில் இன்று காலை நடந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி செவிலியர்கள், குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்கள் 1280 பேருக்கு போர்வை, லுங்கி, சேலை, பால்பவுடர், பிஸ்கெட், அரிசி உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பைகளை வழங்கினார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    சென்னையில் கடந்த முறை 5 நாட்கள் வரையில் தொடர்ந்து பெய்த மழையால் தேங்கிய தண்ணீரையும் உடனடியாக அகற்றினோம். இந்த முறை சென்னையில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யப் போகிறது என்கிற எச்சரிக்கையை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மழைநீரை வெளியேற்ற துரித நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    4 மாதங்களாக தொடர்ச்சியாக ஆய்வு செய்து மழை வெள்ள பாதிப்பை சரி செய்வதற்கான ஆலோசனைகளை அவர் வழங்கினார்.

    எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் 3 மணி நேரத்தில் அது வெளியேறி விடும் வகையில் அதிகாரி கள் துரிதமாக செயல்பட வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன்படி அனைத்து துறை அதிகாரிகளும் செயல்பட்டனர். மாநகராட்சி தூய்மை பணியாளர்களும், மாநகராட்சி ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றியதால் மழைநீரை சீக்கிரமாக வெளியேற்ற முடிந்தது.

    குழந்தை ஒன்றை ஒரு அம்மா காலையில் நன்கு குளிப்பாட்டி வெளியில் விளையாட அனுப்புவார் . அந்த குழந்தை மாலையில் திரும்பும்போது உடல் முழுக்க மண்ணோடு வரும். அப்போது தாய்க்கு கோபம் ஏற்பட்டாலும் குழந்தையை சுத்தப்படுத்தி சரி செய்வார். அந்த குழந்தைதான் சென்னை. தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் தான் அம்மா. இது முடிவல்ல ஆரம்பம்தான்.

    சென்னையில் தூய்மை பணியாளர்களாகிய நீங்கள் மழை வெள்ளத்தை சரி செய்வதற்கு எப்போதுமே துணையாக இருக்கிறீர்கள். எவ்வளவு பெரிய மழை பெய்தாலும் அதனை எதிர்கொள்ள நாங்கள் தயாராகவே உள்ளோம். வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க நாங்கள் இருக்கிறோம்.

    இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

    அமைச்சர்கள் கே.என். நேரு, சேகர்பாபு, தயாநிதிமாறன் எம்.பி, மேயர் பிரியா, பரந்தாமன் எம்.எல்.ஏ. உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×