search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்- கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை
    X

    மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட சின்ன உடைப்பு கிராம மக்கள்.

    சின்ன உடைப்பு கிராம மக்கள் மீண்டும் போராட்டம்- கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை

    • கடந்த 20-ந் தேதி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு விதித்தனர்.
    • வருகிற 11-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது.

    மதுரை:

    மதுரை விமான நிலையம் 633.17 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டு, சின்ன உடைப்பு, பரம்புபட்டி உள்ளிட்ட கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் மட்டும் விரிவாக்கத்திற்காக 146 நபர்களின் வீடுகள் மற்றும் நிலங்கள் என 189 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உள்ளதாக கடந்த 2009-ம் ஆண்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதற்கான பணிகளை செய்து வந்த நிலையில் அந்த ஆண்டு அப்போதைய நில மதிப்பீடு கணக்கிடப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு நில உரிமையாளர்களுக்கு இழப்பீடு நிதி வழங்கப்பட்ட தாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    தற்போது ஊருக்கு வெளியே விமான நிலைய சுற்றுச்சுவர் எழுப்பும் பணிகள் நிறைவடைந்த நிலையில் சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்க உள்ளது. இதற்கிடையில் அந்த கிராம மக்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தொகை போதுமானதாக இல்லை எனவும், 2009 கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்ட நிதியை, 2013 நில எடுப்பு சட்டப்படி கணக்கிட்டு வழங்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர்.

    மேலும் வீடுகளை இழந்த தங்களுக்கு அரசு 3 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்து அதில் மீள் குடியேற்றம்-குடியிருப்புகள் அனைத்து வசதிகளுடன் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து அதுவரை தங்கள் வீடுகளை காலி செய்ய மாட்டோம் என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த 13-ந் தேதி சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கடந்த 20-ந் தேதி நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை உத்தரவு விதித்தனர். மேலும் நிலம் கையகப்படுத்துதல் சட்ட பிரிவின்படி நோட்டீஸ் வழங்க வேண்டும். அதனைப் பின்பற்றி நிலங்களை கையகப்படுத்தலாம். அதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது என தெரிவிக்கப்பட்டது.

    தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்ததால் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

    மேலும் வருகிற 11-ந் தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கு விசாரணை வர உள்ளது. இந்த நிலையில் தங்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி சின்ன உடைப்பு கிராம மக்கள் இன்று மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இதில் பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    Next Story
    ×