search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் பயணம்- பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்
    X

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் பயணம்- பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

    • சிவகாசி அருகே பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
    • திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக வந்து, மக்களை சந்திக்கிறார்.

    2 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விருதுநகர் செல்கிறார். இதற்காக சென்னையில் இருந்து காலையில் விமானத்தில் புறப்பட்டு, 10.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வருகிறார்.

    அங்கு அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து காரில் விருதுநகர் புறப்படும் முதலமைச்சருக்கு, பகல் 11 மணி அளவில் சத்திரரெட்டியபட்டி விலக்கில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் 60 ஆயிரம் பேர் திரண்டு, தி.மு.க. கொடியுடன் வரவேற்கிறார்கள்.

    இதையடுத்து சிவகாசி அருகே கன்னிச்சேரிபுதூருக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பட்டாசு ஆலையை பார்வையிட்டு, பட்டாசு தொழிலாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.

    அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிகிறார். பின்னர் ஆர்.ஆர்.நகர் வரும் அவர், ராம்கோ விடுதியில் மதிய உணவு சாப்பிடுகிறார்.

    அதனைத்தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு விருதுநகரில் வாகன பேரணி (ரோடு ஷோ) நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. திறந்த வாகனத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரணியாக வந்து, மக்களை சந்திக்கிறார்.

    மாலை 6 மணி அளவில், விருதுநகர் மருத்துவ கல்லூரி அருகே உள்ள கந்தசாமி மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடன் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பேசுகிறார். பின்னர் ஆர்.ஆர். நகரில் உள்ள ராம்கோ விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.

    நாளை காலை 9 மணிக்கு, ரூ.77 கோடியில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். இதையடுத்து விருதுநகர் அருகே பட்டம்புதூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று 35 ஆயிரம் பேருக்கு அரசின் பல்வேறு துறைகளின் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதற்காக அங்கு கோட்டை முகப்பு போன்று நுழைவுவாயிலுடன் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    Next Story
    ×