search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் முகாம்
    X

    விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் முகாம்

    • பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
    • சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார்.

    விருதுநகர்:

    தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை ஏற்கனவே தொடங்கி விட்ட தி.மு.க. 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றுவதை இலக்காக கொண்டு செயலாற்றி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று கள ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிட்டு முதல் கள ஆய்வை கோவையில் கடந்த 5-ந்தேதி தொடங்கினார். அரசு விழாக்களுடன் கட்சி நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

    2 நாட்கள் கோவையில் முகாமிட்டு பல்வேறு நலப் பணிகளை அவர் தொடங்கி வைத்தார். அப்போது கோவை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்து பேசினார். சட்டமன்ற தேர்தலில் ஒற்றுமையாக இருந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்ட தோடு, ஆலோசகளையும் வழங்கினார்.

    தி.மு.க. அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்த்து அவர்களின் வாக்குகளை பெறுவதற்கான வழி முறைகளை தற்போது முதலே தொடங்கவேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். அரசு விழாக்கள் மட்டுமின்றி தங்களையும் சந்தித்து பேசியதால் தி.மு.க. நிர்வாகிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

    இதைத்தொடர்ந்து கள ஆய்வின் இரண்டாம் கட்டமாக நாளை மறுநாள் (9-ந்தேதி) முதலஅமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்டம் வருகை தருகிறார். இரண்டு நாட்கள் விருதுநகரில் முகாமிட்டு இருக்கும் அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது.

    அதாவது 9-ந்தேதி காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகை தரும் அவர் காலை 10 மணிக்கு விருதுநகர் வந்தடைகிறார். வழியில் மாவட்ட எல்லையில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமையில் சுமார் 30 ஆயிரம் பேர் திரண்டு பிரமாண்ட வரவேற்பு அளிக்கிறார்கள்.

    பின்னர் அங்கிருந்து ஆர்.ஆர்.நகர் விருந்தினர் மாளிகைக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிது நேர ஓய்வுக்கு பிறகு விருதுநகர் வருகிறார். அங்கு ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகளுடனான சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் விருதுநகர், சாத்தூர், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நகர, ஒன்றிய நிர்வாகிகள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி பல்வேறு அறிவுரைகளை வழங்குகிறார்.

    குறிப்பாக வாக்கு சதவீதம் குறைவாக உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்றுவது குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசிக்கிறார். இதையடுத்து அருகிலுள்ள பட்டாசு தொழிற்சாலைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்த இருப்பதாகவும், பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து இரவு விருதுநகரில் தங்கும் அவர் மறுநாள் (10-ந்தேதி) அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். காலை 10 மணிக்கு விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ரூ.77.11 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய கலெக்டர் அலுவலக வளாக கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். 6 தளங்களுடன் கூடிய இந்த கட்டிடம் 2 லட்சத்து 6 ஆயிரத்து 756 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து அங்கிருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள பட்டம்புதூர் பகுதியில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில் 25 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா மற்றும் 15 ஆயிரம் பேருக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

    பின்னர் அங்கிருந்து மதுரைக்கு காரில் புறப்படும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். விருதுநகர் மாவட்டத்திற்கு மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தேர்தலுக்கு முன்னோட்டமாகவும், தங்களை உற்சாகப்படுத்தவும் வரும் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் தயாராகி வருகிறார்கள்.

    Next Story
    ×