search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை- தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்
    X

    10 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை- தயார் நிலையில் பேரிடர் மீட்பு படைகள்

    • தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • 125 ஜே.சி.பிக்களும், 75 படகுகளும், 250 ஜெனரேட்டர்களும், 281 மரம் அறுக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதுவரை சராசரி மழையளவை விட 6 சதவீத அதிக மழைப்பொழிவை தமிழ்நாடு பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களாக ராமநாதபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம் மற்றும் ராமநாதபுரம் வட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது. ராமேஸ்வரத்தில் 43.8 செ.மீட்டரும், தங்கச்சிமடத்தில் 33.8 செ.மீட்டரும், பாம்பன் பகுதியில் 28 செ.மீட்டரும், மண்டபம் பகுதியில் 27 செ.மீட்டரும் பதிவாகியுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் கனமழையினை எதிர்கொள்ள சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக ராமநாதபுரம் மாவட்டத்தில் 80 ஜே.சி.பிக்களும், 47 மோட்டார் பம்புகளும், 111 படகுகளும், 63 மரம் அறுக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் 125 ஜே.சி.பிக்களும், 75 படகுகளும், 250 ஜெனரேட்டர்களும், 281 மரம் அறுக்கும் எந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

    கனமழையின் காரணமாக பாம்பன் மற்றும் மண்டபம் பகுதிகளில் மொத்தம் 4 நிவாரண முகாம்களில் 190 நபர்கள் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைக்க ராமநாதபுரம் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள வள்ளலார் அங்கு விரைந்துள்ளார்.

    கனமழை பெய்யக்கூடும் என்ற தகவலை எதிர்கொண்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள போதுமான உபகரணங்கள் தயாராக உள்ளன.

    மேலும் மண்டல அளவிலான மீட்பு மற்றும் நிவாரண குழுக்கள் அமைக்கப்பட்டு நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலடுக்கு சுழற்சி காரணமாக 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். இதனை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும் தயார் நிலையில் உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×