search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குன்னூரில் தொடரும் கனமழை: 30 வீடுகள் இடிந்து சேதம்- இருளில் மூழ்கிய 25 கிராமங்கள்
    X

    குன்னூரில் தொடரும் கனமழை: 30 வீடுகள் இடிந்து சேதம்- இருளில் மூழ்கிய 25 கிராமங்கள்

    • வானில் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
    • குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இரவில் மட்டும் கனமழை பெய்து வருவதால் பொதுமக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் நிலை நீடிக்கிறது.

    நேற்று காலையில் இருந்து மாலை 6 மணிவரை பெரிய அளவில் மழை இல்லை. சாரல் மழை மட்டுமே பெய்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக குன்னூரில் மட்டும் 11 செ.மீ. கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குன்னூரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளநீர் கரைபுரண்டோடியது. மேலும் வானில் மேகமூட்டத்துடன் குளிர் காற்றும் தொடர்ந்து வீசுவதால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.

    இதற்கிடையே நேற்று இரவு 10 மணிமுதல் இன்று காலைவரை குன்னூர் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டு ஒட்டுமொத்த பகுதிகளும் இருளில் மூழ்கியதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    குன்னூர் அருகே உள்ள சின்னாளக்கொம்பை, குரங்குமேடு ஆகிய பகுதியிலுள்ள வீடுகள் கனமழையால் சேதம் அடைந்தன. மேலும் மழைவெள்ளமும் வீட்டுக்குள் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பாதிப்படைந்தனர்.

    இதேபோல மேல் பாரதிநகர், கெரடாலீஸ், மகாலிங்க காலனி, காந்திபுரம், சித்தி விநாயகர் கோவில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகள் முழுமையாகவும், பகுதியாகவும் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. மேலும் பெரும்பாலான பகுதிகளில் தடுப்புச்சுவர் இடிந்ததால் அங்குள்ள குடியிருப்புகள் அந்தரத்தில் தொங்குகின்றன. அங்கு குடியிருந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். குன்னூர் பெட்போர்டு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ஒட்டி ராட்சத தடுப்புசுவர் திடீரென சரிந்து விழுந்ததில், அங்குள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலையோரங்களில் மண்சரிவு மற்றும் மரங்கள் வேரோடு சாய்வதால் ஏற்படும் பாதிப்புகளை வருவாய், நெடுஞ்சாலை மற்றும் போலீசார் அகற்றி வருகின்றனர்.மேலும் மழையால் பாதிக்கப்பட்டுள்ள குன்னூர் சித்தி விநாயகர் கோயில் தெருவை சேர்ந்த குழந்தைகள் உட்பட 9 பேர் வெஸ்லி சர்ச்சில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    குன்னூர் மேல்பாரதி நகர் பகுதியில் பாதிக்கப்பட்ட 8 பேர் அங்குள்ள சமுதாய கூடத்தில் தங்கவைக்கப் பட்டு உள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு உள்ள அனைவருக்கும் உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், குன்னூர் தாலுகாவில் பொதுமக்களுக்காக 150 தற்காலிக நிவாரண முகாம்கள் தயாராக உள்ளதாகவும் தாசில்தார் கனிசுந்தரம் தெரிவித்து உள்ளார்.

    குன்னூர் பகுதியில் தொடர்ந்து மேகமூடத்துடன் சாரல்மழை நீடித்து வருவதால் வாகனஓட்டிகள் பாதுகாப்பாக செல்ல வேண்டுமென போலீசாரும் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    குன்னூர் சுற்றுவட்டார பகுதியில் 24 மணி நேரத்தில் பெய்த மழைஅளவு விவரம் வருமாறு (மில்லி மீட்டரில்):- கேத்தி-21 மி.மீ., பரளியார்-30 மி.மீ., குன்னூர் ரூரல்-45 மி.மீ., எடப்பள்ளி-55 மி.மீ, பில்லிமலை-4.2 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    Next Story
    ×