search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12,317 இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
    • 2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் ஆசனூர் அடுத்த அரேப்பாளையம் மைராடா வளாகத்தில் திராவிட கழகத்தலைவர் கி.வீரமணியின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு பழங்குடி மக்களுக்கான இலவச மருத்துவ முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், வீட்டுவசத்தித்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    பெரியார் மருத்துவர் அணி, திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் திருச்சி அஸ்வமித்ரா புற்றுநோய் மருத்துவமனை ஆகியவை ஒருங்கிணைந்து கி.வீரமணியின் 92-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தாளவாடி ஆசனூர் பகுதியில் மருத்துவ முகாம் தொடங்கப்பட்டது.

    இப்பகுதியில் 118 கிராமங்கள் உள்ளன. இதில் 47 கிராமங்களில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் கடந்த முறை வந்த போது இப்பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இப்போது அந்த கோரிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக தாளவாடி பகுதியில் அரசு மருத்துவமனையில் ஒரு பிணவறை வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    மலைப்பகுதியில் மாதத்திற்கு 2 அல்லது 3 இறப்பு ஏற்படுகிறது. அந்த உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஆண்டு ஒன்றுக்கு 30 முதல் 35 உடல்கள் சத்தியமங்கலம் கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது.

    எனவே தாளவாடியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிணவறை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்று நானும் அமைச்சர் முத்துசாமியும் ஸ்டேஷன் நகரில் ஒரு துணை சுகாதார நிலையம், தாளவாடியில் ஒரு பிணவறை கட்டிடம், உக்கரம் நகரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், புஞ்சை புளியம்பட்டியில் ஒரு செவிலியர் குடியிருப்பு, நம்பியூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், திங்களூரில் ஒரு பொது சுகாதார கட்டிடம், பவானியில் மண் தொழிலாளர் பகுதியில் கட்டப்பட்ட துணை சுகாதார நிலையம் என ரூ.3 கோடியே 31 லட்சம் மதிப்பிலான 7 கட்டிடங்களை திறந்து வைத்துள்ளோம்.

    தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி இந்த மூன்றரை ஆண்டுகளில் மட்டும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 1333 கட்டிடங்கள் புதிய கட்டித் தரப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையை பொறுத்தவரை 8 ஆயிரத்து 713 துணை சுகாதார நிலையங்கள், 2 ஆயிரத்து 286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஒரு அறிக்கை வெயிட்டுள்ளார். அதில் 2023-ம் ஆண்டு தவறான சிகிச்சையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். எலி மருந்துக்கு பதிலாக மாற்ற ஊசி போடப்பட்டது என கூறும் அவரிடம் போய் சொல்லுங்கள் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 12 ஆயிரத்து 317 பேர் இதய நோயாளிகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

    2021-ம் ஆண்டு மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் மருத்து பெட்டகத்தை பொதுமக்களுக்கு கொடுத்து தொடங்கி வைத்தார். இன்றுடன் அந்த திட்டத்தில் 2 கோடி பொதுமக்கள் பயனடைந்துள்ளனர். வரும் 29-ம் தேதி விழுப்புரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் 2 கோடியாவது பயனாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×