search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவத்துறையின் தரம் உயர்வுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளே சாட்சி: இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி
    X

    மருத்துவத்துறையின் தரம் உயர்வுக்கு மத்திய அரசு வழங்கிய விருதுகளே சாட்சி: இபிஎஸ்-க்கு அமைச்சர் பதிலடி

    • ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.
    • அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, மக்களின் உயிர் காக்கும் துறையா? அல்லது மக்களின் உயிரைப் பறிக்கும் துறையா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இதற்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆட்சி, மருத்துவ துறையில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி சாதனை படைத்து வருவது மக்களுக்கு புரிகிறது.

    சிலருக்கு புரிய வேண்டும் என்பதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை சாதனை பட்டியலை மீண்டும் நினைவு கூர்கிறேன். மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48, கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம், இதயம் காப்போம் திட்டம், சிறுநீரகம் பாதுகாப்பு திட்டம், பாதம் பாதுகாப்போம் திட்டம், தொழிலாளர் தேடி மருத்துவம், மக்களைத்தேடி ஆய்வக திட்டம், நடப்போம் நலம் பெறுவோம் திட்டம், கண்ணொளி காப்போம் திட்டம்.

    மேலும், மருத்துவ கட்டமைப்புகள், மருத்துவ உபகரணங்கள், மருத்துவ பணி நியமனங்கள் என்று சொன்னால் பட்டியல் நீளும். மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் பாராட்டும், விருதும் வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது உலக அளவில் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிந்திருப்பாரா? அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட மக்கள் இன்னல்களை பட்டியலிட்டால் ஆயிரம் பக்கம் கொண்ட தனிப் புத்தகமே போடலாம்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் மருத்துவத்துறை சேவை, தரம் உயர்ந்துள்ளது என்பதற்கு மத்திய அரசு வாரி வழங்கி உள்ள விருதுகளே சாட்சி. தேசிய தர உறுதி நிர்ணய திட்ட விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 614, இதில், தி.மு.க. ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 545.

    அதேபோல் மகப்பேறு துறை, கர்ப்பிணிகளுக்கான அறுவை அரங்கின் தரம் உயர்த்தும் திட்ட சான்றிதழ். இதில், தமிழகம் இதுவரை பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 84, தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு பெற்ற விருதுகளின் எண்ணிக்கை 55. இவைதான், மக்கள் விரோத ஆட்சிக்கும், மக்கள் நலன் விரும்பும் ஆட்சிக்கும் உள்ள வேறுபாடு.

    தற்போது, அரசு ஆஸ்பத்திரிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது. அரசியலுக்காக ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் அரசு மருத்துவ சேவையை குறை கூறி குளிர்காய நினைக்காதீர்கள். எதிர்க்கட்சி தலைவர் என்பதை உணராமல் அரசியல் காழ்ப்புணர்ச்சியை மட்டுமே மனதில் கொண்டு அறிக்கை வெளியிடுவதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி, எரிச்சல்சாமியாக மக்களுக்கு காட்சியளிக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×