search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டீன் ஏஜ் காதலில் முத்தமிடுவது இயல்பானதுதான்- ஐகோர்ட்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    டீன் ஏஜ் காதலில் முத்தமிடுவது இயல்பானதுதான்- ஐகோர்ட்

    • மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது.
    • வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது.

    மதுரை:

    தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், "இந்த வழக்கில் மனுதாரர் 20 வயதானவர். இவரும் 19 வயது இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் சந்தித்தபோது இரவு வெகு நேரம் பேசியுள்ளனர். அப்போது மனுதாரர் இளம்பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததாகவும், பின்னர் அவரை திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகவும் கூறி மனுதாரர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை அப்படியே எடுத்துக் கொண்டாலும், வளரிளம் (டீன் ஏஜ்) பருவத்தில் காதலிக்கும், இருவர் கட்டிப்பிடிப்பது அல்லது முத்தமிடுவது இயல்பானதாகவே பார்க்கப்படுகிறது. இந்த விவகாரம் எந்த விதத்திலும், இந்திய தண்டனை சட்டம் 354-ஏ(1) உட்பிரிவின் கீழ் குற்றமாக அமையாது. எனவே மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது.

    ஆகவே மனுதாரர் மீது நடவடிக்கைகளை தொடர்வது, சட்ட துஷ்பிரயோகமாக அமையும். இந்த வழக்கில் ஏற்கனவே இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டாம் என காவல் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டும், காவல்துறையினர் விசாரணையை முடித்து ஸ்ரீவைகுண்டம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளனர்.

    இந்த வழக்கையும், வழக்கு தொடர்பான நடவடிக்கைகளையும் ரத்து செய்ய நீதிமன்றம் விரும்புகிறது. ஆகவே மனுதாரர் மீது பதியப்பட்ட வழக்கையும், கீழமை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    Next Story
    ×