search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 ஊதியம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து துரோகமிழைப்பதா?
    X

    கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 ஊதியம்: உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து துரோகமிழைப்பதா?

    • கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தேவையான கல்வித்தகுதி உள்ளது.
    • தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கான மாத ஊதியத்தை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்துவது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த நிலையில், அதை செயல்படுத்த இயலாது என்று அரசு அறிவித்துள்ளது. கவுரவ விரிவுரையாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்குவதற்குக் கூட அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது.

    தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 7314 கவுரவ விரிவுரையாளர்கள் மதிப்பூதியத்தின் அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். கல்லூரிகளின் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கு தேவையான தகுதியும், அனுபவமும் இருக்கும் போதிலும், அவர்களுக்கு மாதம் ரூ.25,000 மட்டுமே மதிப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு ஒரு பாடவேளைக்கு ரூ.1500 வீதம் மாதத்திற்கு அதிகபட்சமாக ரூ.50000 மதிப்பூதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு கடந்த 28.01.2019ஆம் நாள் ஆணையிட்டது. அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு ஆணையிட வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் தொடர்ந்த வழக்கில் அக்டோபர் 18-ஆம் நாள் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்றம், கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியத்தை ரூ.50,000 ஆக உயர்த்துவது குறித்து நவம்பர் 30-ஆம் தேதிக்குள் அரசு முடிவெடுத்து அறிவிக்க வேண்டும் என ஆணையிட்டது.

    ஆனால், சென்னை உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையை செயல்படுத்த மறுத்து விட்ட தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி ஆணையரகம், இப்போதுள்ள ரூ.25,000 ஊதியம் தான் தொடர்ந்து வழங்கப்படும் என்று கடந்த 29-ஆம் தேதி பிறப்பித்த ஆணையில் கூறியிருக்கிறது. அதற்காக கல்லூரிக் கல்வி ஆணையர் கூறியுள்ள காரணங்கள் அபத்தமானவை; ஏற்றிக்கொள்ள முடியாதவை. பல்கலைக்கழக மானியக்குழுவால் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளின்படி கவுரவ விரிவுரையாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதால் அவர்களுக்கு மானியக்குழு பரிந்துரைப்படி ரூ.50,000 ஊதியம் வழங்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

    கவுரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவிப் பேராசிரியர்களாக நியமனம் செய்வதற்கு தேவையான கல்வித்தகுதி உள்ளது. அந்தத் தகுதிகளுடன் பல்கலைக்கழக மானியக்குழு வரையறுத்த விதிகளின்படி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் உதவிப்பேராசியர்களாக நியமிக்கப்பட்டிருப்பார்கள். அதற்கு கவுரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படுவதை விட பல மடங்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். ஆனால், கவுரவ விரிவுரையாளர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு கூறியிருக்கிறதோ, அதைத் தான் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று கவுரவ விரிவுரையாளர்கள் கோருகின்றனர். சென்னை உயர்நீதிமன்றமும் அதைத் தான் தீர்ப்பில் கூறியிருக்கிறது. இல்லாத காரணங்களைக் கூறி சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்த தமிழக அரசு மறுப்பது கவுரவ விரிவுரையாளர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும்.

    பல்கலைக்கழக மானியக் குழுவின்படி கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு மறுப்பது இது இரண்டாவது முறையாகும். ஏற்கனவே, இதுகுறித்த வழக்கில் கடந்த 21.03.2024&ஆம் நாள் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம் ''கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் அளவுக்கு கல்வித்தகுதி பெற்ற கவுரவ விரிவுரையாளர்களை வேலைவாய்ப்பின்மையை பயன்படுத்திக் கொண்டு மிகக்குறைந்த ஊதியத்தில் அரசு பணியமர்த்தியுள்ளது. கவுரவ விரிவுரையாளர்களும் வேறு வழியின்றி கிடைக்கும் ஊதியத்தை ஏற்றுக் கொண்டு பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். உண்மையில் அவர்களுக்கு அரசு வழங்குவது மதிப்பூதியம் அல்ல.... அவமதிப்பூதியம்'' என்று கூறியதுடன், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது. ஆனால், அதை அரசு ஏற்கவில்லை.

    இந்தியாவிலேயே கவுரவ விரிவுரையாளர்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு தான். 15 ஆண்டுகளுக்கு முன் ரூ.10,000 என்ற ஊதியத்தில் பணியில் சேர்ந்த கவுரவ விரிவுரையாளர்களின் ஊதியம் படிப்படியாக உயர்த்தப்பட்டு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் ரூ.25,000 என்ற நிலையை எட்டியது. அதையும் ஆண்டுக்கு ஒரு மாதம் வழங்க மறுப்பதும், மாதக் கணக்கில் நிலுவை வைப்பதும் நியாயமல்ல. தமிழக அரசே கவுரவ விரிவுரையாளர்களின் உழைப்பைச் சுரண்டக் கூடாது. சமூக நீதியில் தமிழக அரசுக்கு உண்மையாகவே அக்கறை இருந்தால், பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைத்தவாறு கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.50,000 வீதம் 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    Next Story
    ×