search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் தாமதம்- புயலுடன் ஆட்டத்தை தொடங்குகிறதா?
    X

    வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் தாமதம்- புயலுடன் ஆட்டத்தை தொடங்குகிறதா?

    • வழக்கமாக 2 சுழற்சிகள் ஒன்று சேர்ந்து தாழ்வுப் பகுதியாக வந்த நிகழ்வுகளில் நல்ல மழை கிடைத்திருக்கிறது.
    • 24-ந்தேதியோ அல்லது அதற்கு பிறகோ தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி, புயலாகவும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 15-ந்தேதி தொடங்கியதாக அறிவிக்கப்பட்டாலும், பருவமழை தீவிரம் அடையவில்லை. இந்த மாதம் முதல் வாரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி பருவமழை தீவிரம் அடையும் என சொல்லப்பட்டது. அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகுவதிலேயே தாமதம் ஆனது. 3 முறை தள்ளிப்போய், கடந்த 11-ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையமும், தனியார் வானிலை ஆய்வாளர்களும் தெரிவித்தனர்.

    ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காற்றழுத்த தாழ்வுப் பகுதியும் வலு இழந்து போனது. இதனால் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டு இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    இதற்கான காரணம் என்ன? வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போனது ஏன்? என்பது குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    வழக்கமாக 2 சுழற்சிகள் ஒன்று சேர்ந்து தாழ்வுப் பகுதியாக வந்த நிகழ்வுகளில் நல்ல மழை கிடைத்திருக்கிறது. ஆனால் கடந்த வாரத்தில் மியான்மரில் உருவான காற்று சுழற்சி வலு இழந்து, தென்மேற்கு வங்கக் கடலில் இருந்த காற்று சுழற்சியுடன் இணைந்து தாழ்வுப் பகுதியாக இலங்கையை நோக்கி தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் தென்மேற்கு வங்கக்கடலில் இருந்த காற்று சுழற்சி வலு குறைந்து, மியான்மரில் இருந்து வந்த காற்று சுழற்சி வலுபெற்று மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிக்கு நகர்ந்துவிட்டது. இதனால் எதிர்பார்த்த மழை கிடைக்காமல் போய்விட்டது. இருப்பினும், உள் மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்களில் மழை பெய்து இருப்பதை பார்க்க முடிகிறது.

    அடுத்ததாக இலங்கைக்கு தென் கிழக்கில் காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக 16-ந்தேதி (நாளை) வரை மழை இருக்கும். அதிலும் 15-ந்தேதி (அதாவது இன்று) காலை வட கடலோர மாவட்டங்களிலும், பிற்பகலில் 11 மணி முதல் 2 மணி வரை உள் மாவட்டங்களிலும், இரவில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளிலும் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பும் உள்ளது. அதன்பின்னர், ஓரிரு நாட்கள் இடைவெளிவிட்டு கிழக்கு காற்றினால் 20-ந்தேதியில் இருந்து மழை தொடங்கும். 24-ந்தேதியோ அல்லது அதற்கு பிறகோ தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகி, புயலாகவும் மாறுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த புயல் மழையை கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன்படி பார்க்கையில் புயலுடன், வடகிழக்கு பருவமழை ஆட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. இந்த தாமதத்தால், அடுத்தடுத்து வரக்கூடிய நிகழ்வுகளும் தள்ளிப்போகிறது.

    Next Story
    ×