search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மதுரை மழை பாதிப்பு... காணொலி மூலம் துணை முதலமைச்சர் ஆலோசனை
    X

    மதுரை மழை பாதிப்பு... காணொலி மூலம் துணை முதலமைச்சர் ஆலோசனை

    • பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
    • தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவான 'டானா' புயல் காரணமாக கடந்த சில நாட்களாக காற்றின் மாறுபாட்டால் தென் மாவட்டங்களில் மிதமான முதல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பிற்பகலில் மதுரை மாநகரை கருமேகங்கள் சூழ்ந்தன. குளிர்ந்த காற்று வீச அதனை தொடர்ந்து மதுரை மாநகர் முழுவதும் கனமழை பெய்தது. நேற்று மாலை தொடங்கிய கனமழை இரவு வரை பெய்துள்ளது.

    குறிப்பாக மதுரை மாநகரில் நேற்று வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்துள்ளது. 1955-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது ஒரே நாளில் மட்டும் 11 சென்டிமீட்டர் மழை மதுரை மாநகரில் பதிவாகி உள்ளது. குறிப்பாக நேற்று மாலை ஒரு மணி நேரத்தில் மதுரை மாநகரில் மட்டும் 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. குறைந்த மணி நேரத்தில் அதிகனமழை பெய்ததால் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தும், வீடுகளில் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், மதுரையில் கனமழை பாதிப்பு குறித்து காணொலிக் காட்சி வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

    அப்போது, தொடர்ந்து மழை பெய்தாலும், அதனை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    தாழ்வான பகுதியில் உள்ள பொதுமக்களை, தேவை இருப்பின் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு அழைத்துச் செல்ல அறிவுறுத்தினார்.

    சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து செயல்பட்டு மழைத்தொடர்பாக மதுரை மக்கள் முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு தீர்வு காணுமாறு ஆலோசனை வழங்கினார்.

    Next Story
    ×