search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    2026 சட்டசபை தேர்தல் திமுக நினைப்பது போல் சுலபமாக இருக்காது- தமிழிசை
    X

    2026 சட்டசபை தேர்தல் திமுக நினைப்பது போல் சுலபமாக இருக்காது- தமிழிசை

    • கவர்னர் பங்கேற்கும் சாதாரண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை.
    • முதலமைச்சர், துணை முதலமைச்சர் எங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

    * கவர்னரின் நிகழ்ச்சியை அமைச்சர்கள் தொடர்ச்சியாக புறக்கணித்து வருவது பற்றி?

    கவர்னர் பங்கேற்கும் சாதாரண நிகழ்ச்சி, அரசு நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சிகளை புறக்கணித்தால் பரவாயில்லை.

    பட்டமளிப்பு நிகழ்ச்சிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பது நல்லதல்ல. அரசியலையும் தாண்டி நடக்கும் நிகழ்வுகள் அது.

    அங்கே பட்டம் வாங்கும் மாணவர்களுக்கு நல்வழியை காட்டுவதற்கு உயர்கல்வித்துறை அமைச்சருக்கு என்று உரை அங்கு இருக்கும். அதையெல்லாம் புறந்தள்ளுவது சரியல்ல. இவர்கள் அரசியலையும் எல்லாவற்றையும் கலக்குகிறார்கள்.

    கல்வியையும் அரசியலையும் கலப்பது அரசியலில் ஒரு வாடிக்கையாக இருக்கிறது.

    புதிய கல்விக்கொள்கையாக இருக்கட்டும், பிரதமரின் புதிய கல்வி கொள்கையின் ஒரு பகுதியாக இருக்கட்டும், சமக்ர சிக்ஷா அபியான் விரிவுபடுத்தப்பட்ட கல்வி திட்டமாக இருக்கட்டும், மும்மொழி கொள்கையாக இருக்கட்டும், உயர்கல்வியில் துணைவேந்தர்களை நியமிப்பதாக இருக்கட்டும், கவர்னர் பட்டமளிப்பு விழாக்களில் கலந்துகொள்வதாக இருக்கட்டும் எல்லாவற்றையும் இவர்கள் அரசியலாக்கி கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.

    அடிப்படை கல்வியிலும் உயர் கல்வியிலும் இவர்கள் அரசியலை புகுத்துகிறார்கள்.

    எவ்வளவுதான் மாற்று சிந்தனை இருக்கலாம். கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் அதனை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் காண்பிக்கக்கூடாது என்பதுதான் எனது கருத்து.

    அரசாங்கத்தை பொருத்தவரை எதுவுமே சரியாக நடப்பதாக எனக்கு தெரியவில்லை.

    தென்சென்னை பகுதியில் குப்பை கிடங்கு எல்லாம் சரியாகி விட்டதாக சொன்னார்கள்.

    சில சதவீதம் கூட குப்பைகள் அகற்றப்படவில்லை. திடக்கழிவுகள் மேலாண்மை சரியாகவே பயன்படுத்தப்படவில்லை என்ற செய்தி கவலை அளிக்கிறது.

    முதலமைச்சர், துணை முதலமைச்சர் எங்களை தோற்கடிக்க ஆளே இல்லை என்பது போல பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

    முதலமைச்சர் சொல்கிறார், கூட்டணியில் விவாதம் தான் இருக்கிறதாம். விரிசல் இல்லையாம்.

    விரிசல்களை ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு விவாதங்கள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

    மதுரையில் தண்ணீர் தேங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் அமைச்சரை குற்றம் சொல்கிறார்.

    அண்ணன் திருமாவளவன் நாம் முதலமைச்சர் ஆகும் அளவிற்கு நமது செயல்பாட்டை அதிகப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்.

    காங்கிரஸ் ஆட்சியில் பங்கு கேட்கும் அளவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.

    எனவே 2026 சட்டசபை தேர்தல் திமுக நினைக்கும் அளவிற்கு அவ்வளவு சுலபமாக இருக்காது. எந்த ஆட்சி வந்தாலும் அது கூட்டணி ஆட்சியாகத்தான் இருக்கும் என்பது எனது கருத்து என்று அவர் கூறினார்.

    Next Story
    ×