search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புனித யூதா ததேயு ஆலய 47-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
    X

    புனித யூதா ததேயு ஆலய 47-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

    • கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.
    • இரண்டாம் நாளான நாளை (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெறுகிறது.

    சென்னை வாணுவம்பேட்டையில் உள்ள புனித யூதா ததேயு ஆலய 47-வது ஆண்டு விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    இயேசுவின் 12 சீடர்களில் முக்கியமானவராக கருதப்பட்டவர், இயேசுவின் உருவ ஒற்றுமை கொண்டவரான புனித யூதா ததேயு. இவருக்கு சென்னை ஆதம்பாக்கத்தை அடுத்த வாணுவம்பேட்டையில் தனி திருத்தலம் அமைந்துள்ளது. அனைத்து வேண்டுதல்களும் இங்கே நிறைவேறுவதால், எல்லா மதத்தினரும் இந்த திருத்தலத்தை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.

    பிரசித்தி பெற்ற யூதா ததேயு திருத்தலத்தின் 47-வது ஆண்டு விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இன்று மாலை கொடியேற்ற திருவிழாவும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது.

    அருட்தந்தை பா.எஸ்.தாக்கியூஸ் தலைமையில் நடந்த இந்த வழிபாட்டில் பாதிரியார்கள் இம்மானுவேல், மைக்கேல் அலெக்சாண்டர், எட்வின் லாரன்ஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இரண்டாம் நாளான நாளை (சனிக்கிழமை) நற்கருணை பெருவிழா நடைபெற உள்ளது. குரோம்பேட்டை புனித அமல அன்னை ஆலயத்தின் முன்னாள் ஆயரின் பொது பதில் குரு பங்குத்தந்தை ஞா.பாக்ய ரெஜின் தலைமை தாங்குகிறார். இதில் பாதிரியார்கள் ஜேம்ஸ், இ.ஜேம்ஸ் தம்புராஜ், சி.ல.பிரதீப், அ.டேவிட் மதிவாணன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

    தொடர்ந்து, 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை பல்கலைக்கழக பேராசிரியரும், பங்கு தந்தையுமான ஜேம்ஸ் பொன்னையா தலைமையில் பங்கு குடும்பப் பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபமும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலி மற்றும் திருத்தேர் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

    இந்த நிகழ்ச்சியில் புனித பத்திரிசியார் ஆலய பங்கு தந்தை கு.ரா.பால் ஜான் உள்ளிட்டோரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.

    28-ந்தேதி திருக்கொடி இறக்கம் மற்றும் நன்றி பெருவிழா நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை மற்றும் புனிதரின் நவநாள் ஜெபம், இரவு 7 மணிக்கு நன்றி ஆராதனையும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர திருப்பலியும் நடைபெறுகிறது.

    இதில் அருட்தந்தைகள் ரவி ஜோசப், விக்டர் வினோத், பிரான்சிஸ் கிளாட்வின் உள்ளிட்டர் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருத்தலத்தின் பாதிரியார்கள் அந்தோணி ராஜ், அந்தோணிசாமி மற்றும் கன்னியாஸ்திரிகள் ஆகியோர் முன்னின்று நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×