search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான்: இபிஎஸ்-க்கு உதயநிதி பதிலடி
    X

    கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான்: இபிஎஸ்-க்கு உதயநிதி பதிலடி

    • 'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது.
    • நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதலமைச்சரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    அரசுத்திட்டங்களுக்கு முத்தமிழறிஞர் கலைஞருடைய பெயரை ஏன் வைக்கிறீர்கள் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்டிருந்தார்.

    அதற்கான பதிலை திருமண நிகழ்ச்சி ஒன்றில் நான் கூறியிருந்தேன். அதிலும் சமாதானம் அடையாத எதிர்க்கட்சித் தலைவர், ஏதேதோ கேள்விகளை மீண்டும் அடுக்கியுள்ளார்.

    குறிப்பாக, மக்கள் பணத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்துக்கு முத்தமிழறிஞர் கலைஞர் பெயரை ஏன் சூட்ட வேண்டும் என்கிறார். 94 வயது வரை தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்த கலைஞரின், பெயரை அரசுத் திட்டங்களுக்கு சூட்டுவதில் என்ன தவறு இருக்கிறது.

    கடந்த காலங்களில், அதிமுக ஆட்சியில், அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், அம்மா உப்பு என்றெல்லாம் அரசுத்திட்டங்களுக்கு பெயர்களை சூட்டியது யார்?

    கை ரிக்ஷாவை ஒழித்தது முதல் கம்ப்யூட்டர் கல்வியை தந்தது வரை நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய நம் கலைஞர் பெயரை அரசுத் திட்டங்களுக்குச் சூட்டுவதும், சிலைகள் எழுப்புவதும் கலைஞருக்கு நாம் செலுத்துகிற நன்றியின் வெளிப்பாடு.

    'நன்றி' என்றால் என்னவென்றே தெரியாத எதிர்க்கட்சித் தலைவருக்கு இது புரியாது. யார் காலைப் பிடித்து முதலமைச்சர் ஆனாரோ, அவரின் காலையே வாரிவிட்ட அவர், நன்றி உணர்ச்சி பற்றி தெரியாத காரணத்தால் இப்படியெல்லாம் பேசுகிறார்.

    அவர் வேண்டுமானால், தான் ஊர்ந்து போன டேபிள் - சேருக்கு சிலை வைத்துக் கொள்ளட்டும். நாம் நம்மை ஆளாக்கிய கலைஞருக்கு சிலை வைப்போம்.

    அடுத்தது, அப்பா, மகனை பாராட்டுகிறார்; மகன், அப்பாவை புகழ்கிறார் என்று எதிர்க்கட்சித்தலைவர் வேதனைப்பட்டுள்ளார். அமைச்சர்கள் நாங்கள் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசையும், முதலமைச்சரையும் இன்றைக்கு உலகமே புகழ்கிறது. போற்றுகிறது!

    நம் முதலமைச்சர் என்னை மட்டுமல்ல, எந்தத் துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும், அந்தத்துறையின் அமைச்சரின் செயல்பாட்டினை பாராட்டி ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.

    'தன்னை புகழ யாருமே இல்லையே' என்ற விரக்தியும், 'தான் பாராட்ட அ.தி.மு.க.வில் ஆளேதும் இல்லையே' என்ற ஏமாற்றமுமே எதிர்க்கட்சித்தலைவர் வார்த்தைகளில் வெளிப்படுகிறது.

    'நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்' என்று என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான்.

    சமூக நீதிக்கொள்கையால் பண்படுத்தப்பட்டு, திராவிட இயக்கத் தலைவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட பயிர்கள் நாங்கள். எங்களைப் பார்த்தால், ஆரியத்தின் அடிவருடிகளுக்கும், அகற்றி வீசப்பட்ட களைகளுக்கும் ஆத்திரம் வருவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

    'எதற்கெடுத்தாலும் நான் அனுபவமிக்கவன் - நான் கடந்து வந்த பாதை யாருக்கும் காணக் கிடைக்காது' என்று தனக்குத்தானே Experience Certificate கொடுத்துக் கொள்ளும் எதிர்க்கட்சித் தலைவரே,

    நீங்கள் படித்து முடித்து வீட்டில் பத்திரமாக வைத்துள்ள புத்தகங்களின் பட்டியலை எப்போது சொல்வீர்கள்?

    நீங்கள் சொன்ன அந்த 'சேக்கிழ' ராமாயணத்தை எப்போது தருவீர்கள்?

    உங்கள் கட்சிப் பெயரில் உள்ள 'திராவிடம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறிய அறிஞர்களை கண்டுபிடித்துவிட்டீர்களா?

    இதற்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு எங்களை விமர்சிக்க வாருங்கள். உங்கள் வெற்று வார்த்தைகளும், வீண் சவடால்களும் மக்கள் நலனுக்கான எங்கள் பயணத்தை ஒரு போதும் தடுத்திடாது! என்று தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×