search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விஜய் அரசியல் மாநாட்டை உற்றுநோக்கும் கட்சிகள்
    X

    விஜய் அரசியல் மாநாட்டை உற்றுநோக்கும் கட்சிகள்

    • ஆளும்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி விஜய்யின் அரசியல் மாநாட்டில் நடப்பதை காண காத்திருக்கிறார்கள்.
    • விஜய் கட்சி மாநாட்டிற்கு சில கட்சிகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன.

    சென்னை:

    தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியையும் தொடங்கி உள்ளார். இந்த கட்சியின் முதல் மாநாடு 27-ந் தேதி விக்கிரவாண்டியில் நடக்கிறது. விறுவிறுப்பான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து திரளும் தொண்டர்கள் என தமிழக வெற்றிக்கழகம் அரசியல் களத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறது.

    இந்த அரசியல் மாநாட்டில் தான் விஜய் தனது கட்சியின் கொள்கை குறித்து பேச இருக்கிறார். தான் அறிமுகப்படுத்திய மஞ்சள், சிவப்பு நிறத்துடன் நட்சத்திரங்கள், யானை குறியீடுடன் கூடிய கொடி குறித்த விளக்கத்தையும் இந்த மாநாட்டில் தான் விஜய் பேச இருக்கிறார். 2026-ம் ஆண்டு தனது அரசியல் பாதை என்ன? கூட்டணியா, தனித்தா? என்பது குறித்தெல்லாம் இந்த மாநாட்டில் தான் விஜய் தெளிவுபடுத்த இருக்கிறார்.

    ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையும் இன்றைக்கு விக்கிரவாண்டி நோக்கியே திரும்பி நிற்கிறது. அனைத்து அரசியல் கட்சிகளும் விஜய்யின் அரசியல் நடவடிக்கையை உற்று நோக்கியே வருகிறார்கள்.

    மாநாட்டுக்கு எவ்வளவு பேர் வருவார்கள், மாநாட்டின் எழுச்சி எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தெல்லாம் கட்சிகள் ஒரு கணக்கு போட்டு தான் வைத்திருக்கின்றன.

    விஜய்யும் ஒரு அரசியல் கணக்கு போட்டு வைத்திருக்கிறார், அந்த கணக்கு என்ன? என்பது இந்த மாநாட்டில் தான் தெரியும். ஆளும்கட்சியும் சரி, எதிர்க்கட்சியும் சரி விஜய்யின் அரசியல் மாநாட்டில் நடப்பதை காண காத்திருக்கிறார்கள்.

    அரசியலில் எந்த விஷயமும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போட்டியாகத்தான் எடுத்துக்கொள்ளப்படும். விஜய் கட்சியை சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று ஆளுங்கட்சி அமைச்சர் கூட சமீபத்தில் தங்கள் கட்சி நிகழ்ச்சியில் பேசியிருக்கிறார்.

    விஜய் கட்சி மாநாட்டிற்கு சில கட்சிகள் நேரடியாக ஆதரவு தெரிவித்துள்ளன. விஜய்யின் மக்கள் செல்வாக்கை நிரூபிக்கும் மாநாடு என்பதால் இந்த மாநாடு குறித்த செய்திகள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. முக்கிய பிரமுகர்கள் இந்த மாநாட்டில் விஜய் கட்சியில் இணைய இருக்கிறார்கள். அவர்கள் யார்? யார்? என்பது மாநாடு நடக்கும்போது தான் தெரியும். பிரபல நடிகர்களும் இணைய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

    பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மாநாட்டுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து, பார்த்து விஜய் செய்து வருகிறார். எந்த கட்சியும் முன்னெடுக்காத வகையில் மகளிருக்கு தனி பாதுகாப்பு வசதி, அனைத்து தரப்பினருக்கும் எந்த சிக்கலும் வராத வகையில் சட்ட ஆலோசனை குழு, வாகனங்கள் வழிகாட்டும் குழு என 27 குழுக்களை அமைத்து இருக்கிறார். அந்த குழுக்களை ஒருங்கிணைக்க ஒட்டுமொத்த ஒரு ஒருங்கிணைப்பு குழுவையும் அமைத்து வருகிறார்.

    உடல் நலம், பாதுகாப்பு கருதி கர்ப்பிணி பெண்கள், சிறுவர்கள் மாநாட்டுக்கு வர வேண்டாம் என்று விஜய் விடுத்த வேண்டுகோளும் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. மாநாட்டுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இப்போதே விக்கிரவாண்டி திருவிழாக்கோலம் பூண்டு இருக்கிறது. தமிழகம் முழுவதும் மாநாட்டு பணிக்காக வந்திருக்கும் தொண்டர்கள் தங்கள் வீட்டு விஷேசம்போல் அணி திரண்டு தீயாய் மாநாட்டு வேலைகளை பார்த்து வருகின்றனர்.

    தங்களை வழி நடத்தும் தளபதிக்காக மாநாடு நடைபெறும் 27-ந் தேதியை தீபாவளிபோல் கொண்டாட காத்திருக்கின்றனர், தமிழக வெற்றிக்கழகத்தினர். விக்கிரவாண்டியில் குவிந்து வரும் தொண்டர்கள், விறுவிறுப்பான மாநாட்டு பணிகள், அரசியலில் விஜய் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழக அரசியல் களத்தை சூடேற்றி வருகிறது.

    Next Story
    ×