search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    த.வெ.க. -  தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றா? - பத்தோடு பதினொன்றா?: விஜய் கையில்!
    X

    த.வெ.க. - தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்றா? - பத்தோடு பதினொன்றா?: விஜய் கையில்!

    • திமுக, அதிமுகவிற்கு மாற்றாக உருவாகிய மக்கள் நல கூட்டணியை மக்கள் நிராகரித்தார்கள்.
    • விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை விக்கிரவாண்டியில் நடக்கிறது.

    தமிழ்நாட்டு அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வந்த காங்கிரஸ் என்ற தேசிய கட்சியை ஓரம் கட்டிவிட்டு ஆட்சியைக் கைப்பற்றிய அண்ணா தலைமையிலான தி.மு.க.-வுக்கு அண்ணா-வையும் பெயரில் சேர்த்து தனது இறுதி மூச்சு வரை சிம்ம சொப்பனமாக எம்.ஜி.ஆர். திகழ்வார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து தி.மு.க.-வுக்கு கருணாநிதி - அ.தி.மு.க.-வுக்கு ஜெயலலிதா என கடந்த 57 ஆண்டுகளில் இந்த இரண்டு திராவிடக் கட்சிகளை தவிர்த்து எந்த கட்சியும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்ததில்லை.

    1993-ல் தி.மு.க.-வில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ, எல்.ஜி.கணேசன் உள்ளிட்டோர் ஒருங்கிணைந்து ம.தி.மு.க. என்ற புதிய அரசியல் கட்சியை தொடங்கினர்.

    ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக ஓங்கி ஒலித்த தொல்.திருமாவளவன், 1990-ல் விடுதலைச் சிறுத்தைகள் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.

    வன்னியர் சமுதாய மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட உரிமைகளுக்காக வன்னியர் சங்கம் என்று அமைப்பு தொடங்கப்பட்டதன் தொடர்ச்சியாக, 1989-ல் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டது.

    திமுக, அதிமுகவிற்கு மாற்று நான்தான் என்று 2006 ஆம் ஆண்டு விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சியை தொடங்கினார்.

    இப்படி திமுக அதிமுகவிற்கு மாற்று நாங்கள்தான் என உருவாகிய பல கட்சிகள் திமுக அல்லது அதிமுகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளாக மாறினவே தவிர தனித்த செல்வாக்கு கொண்ட கட்சியாக வளரவில்லை.

    2016 ஆம் ஆண்டு திமுக, அதிமுகவிற்கு மாற்றாக உருவாகிய மக்கள் நல கூட்டணியை மக்கள் நிராகரித்தார்கள் என்பது வரலாறு. இந்நிலையில், ஜெயலலிதா, கருணாநிதியும் இறப்பிற்கு பிறகு தமிழகத்தின் அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது. அந்த வெற்றிடத்தை நிரப்ப நாம் தமிழர், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் போட்டிப் போட்டாலும் அவர்களால் பெரிய அளவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

    இந்த சூழலில் தான் நடிகர் விஜயின் அரசியல் என்ட்ரி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துள்ள விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.

    பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்று பள்ளி மாணவர்களிடம் விஜய் பேசியது கவனம் பெற்றது. அண்ணா பிறந்தநாளில் அவரை வாழ்த்தி விஜய் பதிவிட்ட டுவீட் வைரலானது.

    ஒருபக்கம் தமிழர் நலன் சார்ந்த அரசியல் இன்னொரு பக்கம் பெரியார் அம்பேத்கரின் முற்போக்கு அரசியல் ஆகிய இரண்டையும் விஜய் ஒருசேர கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது.

    விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு நாளை (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது. இந்த மாநாட்டில் விஜய் உரையாற்ற இருக்கிறார். இன்னும் 24 மணிநேரத்திற்குள் விஜயின் அரசியல் கொள்கை என்ன என்பது குறித்து நமக்கு ஓரளவிற்கு தெரிந்து விடும்.

    தற்போது தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் உள்ளது. அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக உள்ளது. ஜெயலலிதா இறப்பிற்கு பிறகு அ.தி.மு.க.வின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது.

    இந்நிலையில் தி.மு.க., அ.தி.மு.க.விற்கு மாற்றாக விஜய் உருவெடுப்பாரா? 2026ல் ஆட்சியை பிடித்து தமிழக முதல்வர் நாற்காலியில் அமர்வாரா? என்பதெல்லாம் அவரின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்தே அமையும். ஆனால் அதற்கான முதல் படியை நாளை மாநாட்டில் விஜய் தொடங்குகிறார்.

    Next Story
    ×