என் மலர்
செய்திகள்
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்.
- சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை.
- திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விழுப்புரம் மாவட்டம் அரசூர் கூட்டு சாலை என்ற இடத்தில் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், காவல்துறையினரின் அத்துமீறலைக் கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் இருவேல்பட்டு கிராம மக்கள் மீது காவல்துறையினர் கடுமையாக அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் அவமானப்படுத்தும் வகையில் இழுத்துச் சென்று அப்புறப்படுத்தியுள்ளனர். வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த அப்பாவி இளைஞர்களையும் காவல்துறையினர் தீவிரவாதிகளைப் போல இழுத்துக் கொண்டு சென்றுள்ளனர். காவல்துறையின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.
உண்மையில் சாலைமறியல் செய்தவர்களை அகற்ற வேண்டும் என்பது காவல்துறையின் நோக்கம் இல்லை. மாறாக, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கடந்த சில வாரங்களுக்கு முன் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை பழிவாங்க வேண்டும்; தண்டிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் இந்த அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மக்கள் மீது ஆட்சியாளர்கள் கொண்டுள்ள வன்மத்தின் வெளிப்பாடு தான் இந்த தாக்குதலும், அவமதிப்பும் ஆகும்.
நவம்பர் -திசம்பர் மாதங்களில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட இருவேல்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள 18 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்களுக்கு உதவிகள் வழங்கப்படவில்லை என்று கூறி கடந்த திசம்பர் 3-ஆம் தேதி சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். அவர்களுடன் பேச்சு நடத்தச் சென்ற அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகள் மீது சேறு வீசப்பட்டது. அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத்தேவையில்லை என்று அமைச்சர் பொன்முடி அப்போதே கூறியிருந்தாலும் கூட அதிகாரிகள் பெயரில் புகார் அளிக்கப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியவர்களை கைது செய்ய காவல்துறையினர் முயன்றதாகவும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அதைக் கண்டித்து தான் மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசப்பட்டதை நியாயப்படுத்தவே முடியாது. ஆனால், தங்களை நியாயவாதிகள் என்று காட்டிக் கொள்வதற்காக, அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வெளியில் அறிவித்து விட்டு, அதிகாரிகளின் பெயரில் புகார் கொடுத்து அவர்களை கைது செய்ய முயன்றதும், அதற்காக அந்த ஊர் மக்களுக்கு தொல்லை தரப்பட்டதும் தான் பிரச்சினைகளுக்கு காரணம் ஆகும்.
சாலை மறியலில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்துவதில் கூட தவறு இல்லை. ஆனால், கலைந்து சென்ற மக்களை பயங்கரவாதிகளைப் பிடிப்பதைப் போல காவல்துறையினர் வேட்டையாடியதை மன்னிக்க முடியாது. திமுகவை ஆட்சியில் அமர்த்தியவர்கள் மக்கள் தான். அவர்கள் தங்களுக்கான நீதியைக் கேட்டு போராடும் போது அமைச்சர் அவமதிக்கப்பட்டார் என்பதற்காக பல வாரங்கள் கழித்து அவர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால் ஆட்சியாளர்களின் மனதில் பழிவாங்கும் உணர்வு எந்த அளவுக்கு ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும். இத்தகைய நிகழ்வுகளைப் பார்க்கும் போது தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா, போலீஸ் ஆட்சியா? என்ற ஐயம் தான் எழுகிறது. இவற்றுக்கெல்லாம் மக்கள் பாடம் புகட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றார்.
- விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
- மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
கூடலூர்:
தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் நீர்பாசன தேவையை பூர்த்தி செய்து வரும் முல்லைப்பெரியாறு அணையை கட்டியவர் கர்னல் ஜான்பென்னிகுவிக். அவரது பிறந்தநாளான ஜனவரி 15-ந்தேதியை அரசு விழாவாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி பென்னிகுவிக் மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் அதற்கான முன்னேற்பாடுகளை கலெக்டர் ஷஜீவனா தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
தேனி மாவட்டம் பாலார் பட்டி கிராமத்தில் வருடம் தோறும் பென்னிகுவிக் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் பொங்கல் திருநாளன்று ஊர் பொங்கல் வைத்து கொண்டாடுவது கடந்த 25 ஆண்டு காலமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையை தன் சொந்த முயற்சியில் கட்டித் தந்து 5 மாவட்டங்களுக்கு விவசாய மற்றும் குடிநீர் வாழ்வாதாரம் அளித்த பென்னிகுவிக்கிற்கு நன்றி செலுத்தும் வகையில் அவரது 184-வது பிறந்தநாள் விழா பொங்கலிட்டு கொண்டாடப்பட்டது.
பாலார் பட்டி கிராமத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தேவராட்டம், சிலம்பாட்டம் ஆடி காளை மாடுகளுடன் பென்னிகுவிக் உருவப்படத்தை சுமந்துகொண்டு பொங்கல் பானையுடன் ஊர்வலமாக வந்தனர்.
அவர்களுடன் மலேசியாவில் இருந்து சுற்றுலா வந்த பெண்களும் இணைந்து பொங்கல் பானை சுமந்து ஊர்வலமாக வந்தனர்.
அதனைத் தொடர்ந்து ஊரின் மையத்தில் உள்ள பென்னிகுவிக் நினைவு அரங்கம் முன்பு அனைவரும் ஒன்றாக பொங்கலிட்டு பென்னிகுவிக் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் தீபாராதனை காட்டி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மலேசியாவில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகளும் கிராம பெண்களுடன் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். இந்த கிராமத்து மக்கள் தொடர்ந்து 26 ஆண்டுகளாக பென்னிகுவிக் பிறந்தநாளில் பொங்கல் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி பென்னிகுவிக்கிற்கு பொங்கல் விழா விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஒற்றுமையுடன் கூடி பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதில் பங்கேற்ற மலேசிய தமிழர்கள் தாங்கள் இந்த அளவிற்கு மிகச் சிறப்பாக ஒரு பொங்கல் கொண்டாட்டத்தை கண்டதில்லை என்றும் பென்னிகுவிக் பற்றி தங்களுக்கு தெரியாத நிலையில் தற்போது முல்லைப் பெரியாறு மற்றும் அதன் வரலாறு குறித்து அறிந்து பிரமிப்பு அடைவதாக தெரிவித்தனர்.
கிராமத்து மக்களுடைய தேவராட்டம் தங்களை கவர்ந்ததாகவும் தாங்கள் பழகி ஆட விரும்புவதாகவும் கூறினர். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தங்கள் குடும்பத்துடன் வந்து பங்கேற்பதாக கூறி பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
பென்னிகுவிக் மணிமண்டபத்தில் நடந்த பொங்கல் விழாவில் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கலெக்டர் ஷஜீவனா தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் தாட்சாயணி, உத்தமபாளையம் நகர்மன்ற தலைவர் பத்மாவதிலோகன்துரை, பி.ஆர்.ஓ. நல்லதம்பி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர். இதேபோல் பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.
- பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த வாரம் சவரனுக்கு ரூ.800 வரை உயர்ந்தது. இதனை தொடர்ந்து வார தொடக்க நாளான திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,720-க்கும், நேற்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ. 58,640-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை சவரனுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 58,720-க்கும் கிராமுக்கு 10 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,340-க்கும் விற்பனையாகிறது.
நேற்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்த வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 101 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,640
13-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,720
12-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
11-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,520
10-01-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 58,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-01-2025- ஒரு கிராம் ரூ. 100
13-01-2025- ஒரு கிராம் ரூ. 102
12-01-2025- ஒரு கிராம் ரூ. 101
11-01-2025- ஒரு கிராம் ரூ. 101
10-01-2025- ஒரு கிராம் ரூ. 101
- 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
- கூடுதல் பெட்டிகள் இணைப்பால் தென் மாவட்டட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை:
தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் சென்று திரும்பும் விதமாக குறைந்தபட்ச மணி நேரங்களில் செல்லும் வகையில் ரெயில் இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரெயில்வே நிர்வாகம் சார்பில் கடந்த ஆண்டு நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரெயில் அறிமுகப்படுத்தப்பட்டது.
டிக்கெட்டின் விலை அதிகமாக இருந்தாலும், பயணிகள் இடையே இந்த ரெயில் மிகுந்த வரவேற்பை பெற்றது. தற்போது இந்த வந்தே பாரத் ரெயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ரெயில் நெல்லையில் இருந்து தினமும் காலை 6.05 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்படும் மதுரைக்கு 7.50-க்கும், 9.45 மணிக்கு திருச்சிக்கும் செல்கிறது. தொடர்ந்து மதியம் 1.55 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடைகிறது.
இந்த ரெயில் மறுமார்க்கத்தில் மதியம் 2.45 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 6.35 மணிக்கு திருச்சி, இரவு 8.20 மணிக்கு மதுரை வழியாக இரவு 10.30 மணிக்கு நெல்லை வந்தடைகிறது. இந்த ரெயிலில் 7 ஏசி சேர் கார் பெட்டிகளும், ஒரு எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டியும் என மொத்தம் 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து, 6 நாட்கள் இயக்கப்படும் இந்த ரெயில் மொத்தம் உள்ள 650 கிலோமீட்டர் தூரத்தை 7 மணி நேரம் மற்றும் 50 நிமிடங்களில் சென்றடைகிறது.
இந்நிலையில் இந்த ரெயிலில் டிக்கெட்டுகள் சீக்கிரம் தீர்ந்து விடுவதால் கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்க வேண்டும் என்று பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து நெல்லை-சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரெயிலை 16 பெட்டிகளாக மாற்றி கடந்த 11-ந்தேதி முதல் இயக்க தென்னக ரெயில்வே திட்டமிட்டு அறிவிப்பை வெளியிட்டது.
பயணிகளின் வசதியை மேம்படுத்தும் விதமாக அறிவிக்கப்பட்ட நிலையில், 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் தேதியானது மாற்றி அமைக்கப்பட்டு இன்று முதல் இயங்கும் என தென்னக ரெயில்வே அறிவித்தது. அதேநேரம் 11-ந்தேதி முதல் முன்பதிவு தொடங்கியது.
தொடர்ந்து இன்று காலை நெல்லை-சென்னை (வண்டி எண்:20666) தனது இயக்கத்தை நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து 16 பெட்டிகளுடன் காலை 6.19 மணிக்கு புறப்பட்டது. வழக்கமாக 6.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், இன்று 16 பெட்டிகளுடன் முதல் முறையாக இயக்கப்பட்டதால் 14 நிமிடங்கள் தாமதமாக இயக்கத்தை தொடங்கியது.
தற்போது பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காலகட்டத்தில் வந்தே பாரத் ரெயில் 16 பெட்டிகளுடன் இயக்கப்பட்டதால் ஏற்கனவே காத்திருப்பு பட்டியலில் இருந்த பயணிகளுக்கு இடம் கிடைத்தது. இதனால் மகிழ்ச்சியுடன் பயணம் செய்தனர்.
டிக்கெட் விலை அதிகமாக இருந்தாலும், இந்த விடுமுறை நாளில் சென்னைக்கு ரெயிலில் பயணித்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதால் மகிழ்ச்சியுடன் செல்வதாக பயணிகள் தெரிவித்தனர். இன்று முதல் இயக்கப்பட்ட இந்த ரெயிலில்14 சேர் கார் பெட்டிகளும், 2 எக்ஸிகியூட்டிவ் சேர் கார் பெட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளன.
நாளை முதல் வருகிற 20-ந் தேதி வரை 16 பெட்டிகளும் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன. இன்று காலை நிலவரப்படி மேற்கண்ட நாட்களில் காத்திருப்பு பட்டியலில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் உள்ளனர்.
கூடுதல் பெட்டிகள் இணைப்பால் தென் மாவட்டட பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர்.
- தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.
குன்னூர்:
தமிழகம் முழுவதும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக குன்னூர் டென்ட்ஹில் பகுதியில் பொதுமக்கள் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது.
இதை முன்னிட்டு புனித தீர்த்த குடங்களுடன் தாரை-தப்பட்டை முழங்க, ஆடல் பாடலுடன் ஊர்வலம் தொடங்கியது. பாலகிளாவா, நீதிமன்றம், லெவல் கிராஸ், மவுண்ட் ரோடு வழியாக அணிவகுத்த ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலில் முடிவடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பின்னர் டென்ட்ஹில் பகுதியில் கரகாட்டம், ஒயிலாட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் தந்தி மாரியம்மன் திருவீதி ஊர்வலம் நடத்தப்பட்டது. பின்னர் வாண வேடிக்கையுடன் விழா நிறைவு பெற்றது.
முன்னதாக லண்டனில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள் சாமி ஊர்வலத்தில் பங்கேற்று உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தனர். இதுகுறித்து லண்டனை சேர்ந்த சார்லஸ் கூறியதாவது:-
கடந்த 15 நாட்களாக தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களை பார்வையிட்டு தற்போது குன்னூர் வந்து உள்ளோம். இங்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகை, ஊர்வலத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்து, அவர்களுடன் ஆடிப்பாடி மகிழ்ந்தோம்.
எங்களுக்கு பொதுமக்கள் மாலை அணிவித்து கவுரவித்தனர். பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்து அறிந்து வியந்து போனோம். இந்த நாள் எங்கள் வாழ்வில் மறக்க முடியாதது. தமிழ் கலாச்சாரமும், தமிழ் மக்களின் அன்பும் சர்க்கரைப் பொங்கல் போல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
குன்னூர் நகரமன்ற தி.மு.க. உறுப்பினர் சையதுமன்சூர் மற்றும் இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
- கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தலைவர் தொடர்பாக கலந்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
- தலைவர் பதவியை குறிவைத்து மேலும் ஒன்றிரண்டு பேர் காய் நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர்கள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவார்கள். தற்போது மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை கடந்த 2021-ம் ஆண்டு மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். அண்ணாமலையின் பதவி காலம் நிறைவடைகிறது.
தற்போது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. கிளை நிர்வாகிகள், மண்டல் நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் தேர்தல்கள் முடிந்துவிட்டன. மாவட்ட தலைவர்கள் பட்டியல் இன்று அல்லது நாளைக்குள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்ததாக புதிய மாநில தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தல் பொறுப்பாளரும் மத்திய மந்திரியுமான கிஷன் ரெட்டி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை)சென்னை வருகிறார்.
அப்போது கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் புதிய தலைவர் தொடர்பாக கலந்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டிய நிலை இருப்பதால் வலிமையான தலைமை வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர். கட்சியின் விதிமுறைப்படி இரண்டு முறை ஒருவருக்கு மாநில தலைவர் பதவி வழங்கலாம். அந்த வகையில் அண்ணாமலைக்கு மீண்டும் தலைவர் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணி அமைப்பது தொடர்பாக விமர்சனத்துக்குள்ளானாலும் அவரது தலைமையின் கீழ் கட்சி வளர்ச்சி அடைந்து இருப்பதை கட்சி மேலிடம் உணர்ந்துள்ளது.
இதற்கிடையில் தலைவர் பதவியை குறிவைத்து மேலும் ஒன்றிரண்டு பேர் காய் நகர்த்தி வருவதாக கட்சி வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
ஆனால் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் தி.மு.க.வை எதிர்கொள்ள வலிமையான தலைமை தேவை என்ற அடிப்படையில் டெல்லி மேலிடம் ஆலோசனை செய்து வருகிறது. சென்னை வரும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி முதல் மூன்று பேர் பெயர் பட்டியலை தேர்வு செய்து டெல்லி மேல் இடத்திற்கு அனுப்ப உள்ளார்.
அதைத் தொடர்ந்து இந்த வார இறுதிக்குள் புதிய மாநில தலைவர் யார் என்பதை டெல்லி மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
- டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும்போது விமானங்கள் பாதிக்கப்படலாம்.
- டெல்லியில் காலையில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.
குறிப்பாக தலைநகர் டெல்லியில் அதிக அளவிலான பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை கடும் பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அடர்த்தியான மூடுபனியுடன் காணப்படும் டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமாக உள்ளது.
பல இடங்களில் தெரிவுநிலை பூஜ்ஜியமாகக் குறைந்தது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 அடிக்கு முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். அதேபோல் ரெயில் மற்றும் விமான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டன.
விமானச் செயல்பாடுகள் சீராக இருக்கும் என்றும் ஆனால் விமானப் பயணிகளை தங்கள் விமானங்களைப் பற்றி தொடர்ந்து அறிந்துகொள்ளும்படி விமான நிலையம் கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் மற்றும் புறப்படும்போது விமானங்கள் பாதிக்கப்படலாம். புதுப்பிக்கப்பட்ட விமானத் தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தைத் தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் வருந்துகிறோம் என்று டெல்லி விமான நிலையம் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளது.
நேற்று நிலவிய பனிமூட்டம் காரணமாக ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நேற்று காலை 6:30 மணி வரை குறைந்தது 39 ரெயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
டெல்லியில் காலையில் 9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. காலையில் அடர்த்தியான மூடுபனியும் பின்னர் பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சினிமா செட்டிங் போல் அமைக்கப்பட்டு இருந்த பெரிய கூண்டுகளில் இருந்து சேவல் திறந்து விடப்பட்டன.
- சேவல்கள் சண்டையிடும் போது கத்தி வெட்டுப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
ஆந்திராவில் சங்கராந்தியையொட்டி தடையை மீறி ஆண்டுதோறும் பாரம்பரியமான சேவல் சண்டை நடத்தப்படுகிறது.
நேற்று சங்கராந்தி பண்டிகை என்பதால் ஆந்திராவில் ஆட்டுக்கிடா சண்டை, பட்டம் விடுதல், சேவல் சண்டை கோலாகலமாக நடந்தது.
தடையை மீறி பாரம்பரிய சேவல் சண்டை ஆங்காங்கே நடந்தது. கிருஷ்ணா மாவட்டத்தில் எட்புகல்லு, உப்பலூர், காங்கிபாடு, அம்பாபுரம் உள்ளிட்ட இடங்களில் சேவல் சண்டை நடந்தது. சேவல் சண்டை பிரம்மாண்ட திரைகள் மற்றும் எல்.இ.டி. டி.வி.கள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்தனர்.
சினிமா செட்டிங் போல் அமைக்கப்பட்டு இருந்த பெரிய கூண்டுகளில் இருந்து சேவல் திறந்து விடப்பட்டன.
ஆக்ரோஷமாக கூண்டுகளில் இருந்து வெளியே வந்த சேவல்கள் நீயா நானா என போட்டி போட்டு அந்தரத்தில் குதித்து சண்டையிட்டன. சேவல்களின் கால்களில் கூர்மையான கத்திகள் கட்டப்பட்டு இருந்தன.
இதனால் சேவல்கள் சண்டையிடும் போது கத்தி வெட்டுப்பட்டு சில சேவல்கள் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தன.
சேவல் சண்டையை பார்க்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து இருந்ததால் கூட்டம் அலைமோதியது.
சண்டையிடும் சேவல்கள் மீது லட்சக்கணக்கில் போட்டி போட்டு பந்தயம் கட்டினர். இதனால் நேற்று ஒரே நாளில் கிருஷ்ணா மாவட்டத்தில் மட்டும் ரூ.400 கோடிக்கு மேல் சேவல் பந்தயம் நடந்ததாக கூறப்படுகிறது.
- 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
- யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
பொள்ளாச்சி:
சுற்றுலாத்தலங்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தமிழக சுற்றுலாத்துறை, தனியார் அமைப்புடன் இணைந்து பலூன் திருவிழாவை நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு சென்னை, மதுரை, பொள்ளாச்சி ஆகிய இடங்களில் பலூன் திருவிழா நடக்கிறது. சென்னையில் கடந்த வாரம் பலூன் திருவிழா நடைபெற்றது.
பொங்கல் பண்டிகையையொட்டி பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் 10-வது ஆண்டாக நேற்று பலூன் திருவிழா தொடங்கியது.
3 நாட்கள் நடக்கும் இந்த பலூன் திருவிழாவில், பிரான்ஸ், பிரேசில், வியட்நாம் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் யானை, புலி, கரடி உள்ளிட்ட வடிவங்களில் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பலூன்கள் பறந்ததை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 6-ம் எண் கொண்ட யானை வடிவிலான ராட்சத பலூன் வானில் பறக்கவிடப்பட்டது.
இந்த பலூனில் வெளிநாட்டை சேர்ந்த ஆண், பெண் பைலட்டுகள் இருந்தனர். அவர்களுடன் 2 பெண் குழந்தைகளும் பலூனில் பயணம் செய்தனர்.
ஆச்சிப்பட்டி மைதானத்தில் இருந்து 3 கி.மீ தூரத்தில் இந்த பலூனை தரையிறக்க திட்டமிட்டு இருந்தனர். ஆனால், காற்றின் வேகத்தால் பலூன் திசைமாறி வானில் சுற்றி கொண்டிருந்தது.
பின்னர் திசை மாறிய பலூன் 30 கி.மீ தூரம் தாண்டி உள்ள கேரள மாநிலம் கன்னிமாரி முல்லந்தட்டு என்ற பகுதியில் உள்ள வயல்வெளியில் தரையிறங்கியது. அதிர்ஷ்டவசமாக பலூனில் இருந்தவர்கள் எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு கூடி விட்டனர். இதற்கிடையே வயலில் பலூன் இறங்கியதை அறிந்ததும் விழா ஏற்பாட்டாளர்கள் விரைந்து சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன், வயல் வெளியில் விழுந்த ராட்சத பலூனில் இருந்த ஆண், பெண் பைலட்டுகள், 2 பெண் குழந்தைகளையும் பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
- மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்;
சென்னை:
தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் நேற்று தமிழகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதோடு, தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனையொட்டி மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன் என்று கூறியுள்ளார்.
மதங்களைச் சாரா மனிதம் பாடியவர்; வேள்வியிற்சிறந்தது அன்பென்றோதியவர்; யாப்பின் அருங்கல மாலுமியானவர்; மூப்பின் தடமில்லா இளமைச் சொல்லால் உலகுக்கே வழிகாட்டும் அய்யன் வள்ளுவரை வணங்கிப் பணிகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) January 15, 2025
- 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன.
- 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டை இன்று காலை அமைச்சர் மூர்த்தி, ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். வீரர்கள் உறுதி மொழி ஏற்று மாடுகளை பிடிக்கச் சென்றனர். முதலாவதாக கோவில் மாடு அவிழ்த்து விடப்பட்டது.
அதன்பின் ஒவ்வொரு காளைகளாக வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்தன. மொத்தம் 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படுகின்றன. 900 வீரர்கள் காளைகளை அடக்க உள்ளனர். இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டினர் என ஆயிரக்கணக்கானோர் வந்துள்ளனர்.
இந்த நிலையில், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7 வீரர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 3 பேர் மது அருந்தியதாகவும், 3 பேர் எடை குறைவு என்ற காரணத்தாலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.