search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள் உள்பட 1,537பேர் கொல்லப்பட்டனர்
    X

    காயம் அடைந்த குழந்தைகள் ஹாசாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காட்சி.

    இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள் உள்பட 1,537பேர் கொல்லப்பட்டனர்

    • இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    • 3.34 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    ஜெருசலேம்:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் கடந்த 7-ந்தேதி ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

    இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 பேர் பலியாகியிருக்கின்றனர். இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள், 276 பெண்கள் உள்பட 1537 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். 6,612 பேர் காயமடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 31 பேர் பலியாகினர். 600பேர் காயமடைந்தனர்.

    ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 220 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். தாக்குதலில் 3,200பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

    3.34 லட்சம் பாலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. முகாம்களில் 2.2 லட்சம் பேர் உள்ளனர். சிரியாவின் தலைநகர் டகாகஸ் மற்றும் வடக்கு நகரான அலெப்போலில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நடத்தியதில் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் சேதடைந்தன.

    இஸ்ரேலில் நடந்துவரும் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் 25பேர் கொல்லப்பட்டதாகவும், 17பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோன்று பிரெஞ்சு குடிமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது.

    Next Story
    ×