search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    வடகொரியா விடுவித்த மூன்று அமெரிக்கர்களையும் நேரில் சென்று வரவேற்ற ட்ரம்ப்
    X

    வடகொரியா விடுவித்த மூன்று அமெரிக்கர்களையும் நேரில் சென்று வரவேற்ற ட்ரம்ப்

    நல்லெண்ண அடிப்படையில் வடகொரிய சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மூன்று அமெரிக்கர்களும் இன்று தாயகம் வந்தடைந்ததை அடுத்து அவர்களை அதிபர் ட்ரம்ப் நேரில் சென்று வரவேற்றுள்ளார். #Trump #NorthKorea
    வாஷிங்டன் :

    அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் நேருக்குநேர் சந்தித்துப் பேச ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அமெரிக்காவை சேர்ந்த மூன்று பேரை வடகொரியா அதிகாரிகள் கைது செய்து வைத்துள்ளதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

    அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ அறிவிக்கப்படாத திடீர் பயணமாக நேற்று வடகொரியா தலைநகர் பியாங்யாங் சென்றார்.

    வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன்-னை டிரம்ப் சந்தித்துப் பேசப்போகும் இடம் மற்றும் தேதி இந்த சந்திப்பின்போது உறுதிசெய்யப்பட்டது. மேலும், வடகொரியா கைது செய்துள்ள மூன்று அமெரிக்கர்களை விடுவிப்பது தொடர்பாகவும் மைக் பாம்ப்பியோ பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதன் தொடர்ச்சியாக, அந்த மூன்று அமெரிக்கர்களும் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுடன் மைக் பாம்ப்பியோ வாஷிங்டன் நகருக்கு புறப்பட்ட தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.


    இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வாஷிங்டன் நகரில் உள்ள ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்துசேரும் மைக் பாம்ப்பியோவை நேரில் சென்று வரவேற்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார்

    இந்நிலையில், இன்று வாஷிங்டன் நகர் ஆண்டுரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்தடைந்த அவர்கள் மூவரையும் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா ட்ரம்ப் ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர். “எங்களை தாயகம் அழைத்து வர உதவிபுரிந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்ப்பியோ மற்றும் அமெரிக்க மக்களுக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்” என அவர்கள் மூவரும் தெரிவித்தனர்.

    அடுத்ததாக அவர்கள் மூவரும் அமெரிக்க ராணுவ மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு அங்கு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். இந்த வரவேற்பு நிகழ்சியில் விடுதலை செய்யப்பட்ட மூவரின் குடும்பத்தினர் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Trump #NorthKorea
    Next Story
    ×