search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி பறக்க வேண்டும் - இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு
    X

    சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடி பறக்க வேண்டும் - இஸ்லாமிய அமைப்பு அறிவிப்பு

    சீனாவில் உள்ள அனைத்து மசூதிகளிலும் தேசிய கொடியை பறக்கவிட வேண்டும் என இங்குள்ள இஸ்லாமிய அமைப்புகளின் தலைமை சங்கம் அறிவித்துள்ளது.
    பீஜிங்:

    சுமார் 140 கோடி மக்கள்தொகை கொண்ட சீனாவில் சுமார் 2 கோடி முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் சுமார் ஒரு கோடி பேர் உய்குர் இனத்தை சேர்ந்தவர்கள்.

    சீனாவின் சிங்ஜியாங் மாகாணத்தில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஆதரவை பெற்ற கிழக்கு துருக்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கத்தினர், உய்குர் தீவிரவாதிகள் ஆகியோர் சீனப் படையினரை எதிர்த்து போரிட்டு வருகின்றனர்.

    அதிகமாக உய்குர் முஸ்லிம்கள் வாழும் சிங்ஜியாங் பகுதியில் சீன ஹான் இனத்தவரின் குடியேற்றம் பெருகி வருவதை கண்டித்து இவர்கள் போராடி வருகின்றனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் எல்லையோரம் பதுங்கியிருக்கும் இவர்கள் அவ்வப்போது சீனாவின் சிங்ஜியாங் பகுதியில் பயங்ரவாத தாக்குதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள டியனன்மென் சதுக்கத்தின் மீது இவர்கள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 5 பேர் பலியாகினர். சீனாவின் பிரபல ரெயில் நிலையங்களுக்குள் கத்தி மற்றும் உடைவாட்களுடன் புகுந்த இவர்கள் ஏராளமான பொதுமக்களையும் வெட்டி சாய்த்துள்ளனர்.


    இந்நிலையில், முஸ்லிம் மக்களிடையே தேச பக்தியை அதிகரிக்கும் முயற்சியாக நாடு முழுவதும் உள்ள மசூதிகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்ந்த அலுவலகங்களில் சீன நாட்டு தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என இங்குள்ள பிரதான முஸ்லிம் அமைப்பு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக, சீனாவின் தலைமை இஸ்லாமிய அமைப்புக்கு சொந்தமான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், மசூதிகளில் தேசிய கொடிகளை ஏற்றி வைப்பதுடன், நாட்டின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் கலாசாரம் சார்ந்த பாரம்பரியங்களை பற்றியும் முஸ்லிம் மக்கள் கற்றறிந்து கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    சீனாவில் சுமார் 35 ஆயிரம் மசூதிகள் உள்ள நிலையில், நாட்டின் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் தனிப்பட்ட மதமாக இல்லாமல் ஒன்றிணைந்த சோஷலிச சமுதாயமாக முஸ்லிம் மக்கள் உருமாற இந்த அறிவிப்பு நல்ல பலனை அளிக்கும் என இங்குள்ள அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். #mosquesinChina
    Next Story
    ×