search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜப்பானில் கடும் புயல் தாக்குதலில் 9 பேர் பலி- 3 ஆயிரம் பேர் விமான நிலையத்தில் சிக்கி தவிப்பு
    X

    ஜப்பானில் கடும் புயல் தாக்குதலில் 9 பேர் பலி- 3 ஆயிரம் பேர் விமான நிலையத்தில் சிக்கி தவிப்பு

    ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட புயல் தாக்குதலில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்ததால் 3 ஆயிரம் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். #Japan #typhon
    டோக்கியோ:

    ஜப்பானில் மேற்கு கடற்கரை பகுதியில் ‘ஜெபி’ என பெயரிடப்பட்டுள்ள புயல் கடுமையாக தாக்கியது. இதனால் மணிக்கு 216 கி.மீ வேகத்தில் சூறாவளியுடன் கூடிய காற்று வீசியது. பலத்த மழையும் கொட்டியது.

    இதன்காரணமாக மத்திய இஷிகவா, ஒசாகா, நகோயா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. பலத்த காற்று காரணமாக மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன.

    மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் இருளில் தவித்தனர். காற்று பலமாக வீசியதால் ரோடுகளில் சென்று கொண்டிருந்த மற்றும் நிறுத்தப்பட்டிருந்த கார்கள் தலைகீழாக புரட்டி போடப்பட்டு கவிழ்ந்தன.

    ஒசாகா வளைகுடாவில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த ஒரு லாரி தூக்கி வீசப்பட்டது. கயோடோ ரெயில் நிலையத்தில் மேற்கூரை சரிந்தது.

    ஒசாகாவில் கான்சாய் என்ற தீவு செயற்கையாக உருவாக்கப்பட்டது. அங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. ஓடுதளம் செயல்படாததால் அந்த விமானநிலையம் மூடப்பட்டது. இதன் வழியாக தினமும் 400 விமானங்கள் இயக்கப்படுகின்றன. விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர்.



    விமான நிலையத்தில் இருந்து வெளியேறும் வழியில் உள்ள பாலம் உடைந்துவிட்டது. இதனால் அங்கிருந்து 3 ஆயிரம் பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். இதேபோன்று ஜப்பானில் உள்ள பல விமான நிலையங்களும் பாதிக்கப்பட்டு விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    புல்லட் ரெயில் சேவையும், பஸ் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. கடலில் ராட்சத அலைகள் எழும்புவதால் படகு மற்றும் கப்பல் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    நாட்டின் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மேலும் பலர் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படுகின்றனர். நிலைமையை சமாளிக்கும் பணியில் போலீசார் ராணுவம் மற்றும் தீயணைப்பு படையினர் அடங்கிய மீட்பு குழு ஈடுபட்டுள்ளது.



    பிரதமர் ஷின்சோ அபே அவசர கூட்டம் கூட்டி விரைவான மீட்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்தார். பொதுமக்களின் உயிரை காப்பாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபடும்படி அறிவுறுத்தினார்.

    இதற்கிடையே புயல் மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். 200 பேர் காயம் அடைந்துள்ளனர். ஜப்பானில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இத்தகைய கடும் புயல் தாக்கியுள்ளதாக வானிலை ஆய்வுமைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். #Japan #typhon
    Next Story
    ×