search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ரஷிய வீரரிடம் விவாதம் செய்யும் பெண்
    X
    ரஷிய வீரரிடம் விவாதம் செய்யும் பெண்

    ரஷிய ராணுவ வீரரை தைரியமாக எதிர்கொண்ட உக்ரைன் பெண்- இணையத்தில் வைரலாகும் வீடியோ

    ஹெனிசெஸ்க் நகரில் ஊடுருவி உள்ள ஆயுதம் தாங்கிய ரஷிய வீரரிடம், தைரியமாக விவாதம் செய்த பெண்ணின் வீடியோ வைரலாகி உள்ளது.
    கீவ்:

    உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷிய படைகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அவர்களை மேற்கொண்டு முன்னேற விடாமல் உக்ரைன் படைகள் எதிர்தாக்குதல் நடத்திவருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நகரின் வடக்கு பகுதிக்குள் ரஷிய படைகள் நுழைந்து முன்னேறி வருகின்றன. 

    கீவ் நகருக்குள் ரஷ்ய ராணுவம் முன்னேறி வருவதை தடுக்க அந்நகரை இணைக்கும் பாலங்கள் மற்றும் சாலைகளை உக்ரைன் தகர்த்து வருகிறது. இந்த போர் காரணமாக தலைநகர் கீவில் உள்ள மக்கள் ரெயில்கள், கார்கள் மூலம் வெளியேறி வருகின்றனர்.

    இந்த நிலையில் கெர்சன் பிராந்தியம் ஹெனிசெஸ்க் நகரில் ஊடுருவி உள்ள ஆயுதம் தாங்கிய ரஷிய வீரரிடம், தைரியமாக விவாதம் செய்த பெண்ணின் வீடியோ வைரலாகி உள்ளது. 


    அந்த வீடியோவில், ஆயுதம் ஏந்திய ரஷிய வீரரைப் பார்த்து பேசும் அந்த பெண், "நீங்கள் யார்?" எனக் கேட்கிறார். அந்த வீரர் "எங்களுக்கு இங்கே வேலை இருக்கிறது. நீங்கள் அந்தப் பக்கம் செல்லுங்கள்" எனக் கூறுகிறார்.

    "பாசிசவாதிகளே... எங்கள் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை?" என்று மீண்டும் அந்தப் பெண் உக்கிரமாகப் பேசுகிறார். அதற்கு அந்த வீரர் நிதானமாக, "நமது பேச்சால் எந்தப் பயனும் இல்லை. நீங்கள் செல்லலாம்" எனக் கூறுகிறார். 

    ஆனால் அந்தப் பெண் சற்றும் சமாதானமடையவில்லை. ‘உங்கள் பாக்கெட்டில் கொஞ்சம் சூரியகாந்தி விதையைப் போட்டுக்கொள்ளுங்கள். நீங்கள் வீழ்த்தப்பட்டு  உக்ரைனில் புதைக்கப்படும் போது அந்த விதைகளாவது முளைத்து பூக்கள் மலரட்டும்’ என்று கூறிவிட்டு செல்கிறார். சூரியகாந்தி மலர், உக்ரைன் நாட்டின் தேசிய மலர் ஆகும்.

    ரஷிய படைகள் உக்ரைன் நாட்டை கதிகலங்க வைத்திருக்கும் நிலையில், அந்த பெண் ரஷிய வீரருடன் துணிச்சலாக வாதிடுவதை வழிப்போக்கர் ஒருவர் வீடியோ எடுத்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர, அது தற்போது உலகம் முழுவதும் வைரலாகிவிட்டது. அந்த பெண்ணின் துணிச்சலை பலரும் பாராட்டி கருத்து பதிவிட்டுள்ளனர்.
    Next Story
    ×