search icon
என் மலர்tooltip icon

    உலகம் (World)

    இலங்கையில் நடக்கும் போராட்டம்
    X
    இலங்கையில் நடக்கும் போராட்டம்

    இலங்கையில் 17 புதிய மந்திரிகள் பதவியேற்பு..

    புதிய மந்திரிசபையில் ராஜபக்சே குடும்பத்தினர் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவர் மட்டுமே தற்போது இலங்கை அரசில் நீடித்து வருகின்றனர்.
    கொழும்பு :

    இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு சந்தித்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி, அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை என இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியுள்ளது.

    நாள்தோறும் பலமணி நேர மின்வெட்டு, மருந்துகள் இல்லாமல் முடங்கிய ஆஸ்பத்திரிகள், பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் வினியோக மையங்களில் நாட்கணக்கில் காத்திருக்கும் மக்கள் என இலங்கையின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

    இலங்கையின் இந்த பொருளாதார நெருக்கடி, அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் அரசிலும் எதிரொலித்தது. இந்த சிக்கலில் இருந்து நாட்டை மீட்க முடியாத அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    அதேநேரம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு ஒற்றுமை அரசை அமைக்க வசதியாக, இந்த மாத தொடக்கத்தில் ராஜபக்சே மந்திரிசபை கூண்டோடு ராஜினாமா செய்தது. நிதி மந்திரி பசில் ராஜபக்சேயின் பதவி பறிக்கப்பட்டது.

    பின்னர் 3 மந்திரிகள் நியமிக்கப்பட்டனர். மேலும் புதிய நிதி மந்திரியாக அலி சப்ரி நியமிக்கப்பட்டார். ஆனால் ஒரே நாளில் பதவி விலகிய அவர், பின்னர் மீண்டும் பதவியை ஏற்றுக்கொண்டார்.

    இதைத்தொடர்ந்து ஒற்றுமை அரசில் பங்கேற்க வருமாறு அனைத்துக்கட்சிகளுக்கும் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். ஆனால் இதை புறக்கணித்த எதிர்க்கட்சிகள், அதிபர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இதனால் புதிய மந்திரி சபை அமைவதில் இழுபறி நீடித்து வந்தது.

    இந்த நிலையில் சுமார் 2 வாரங்களுக்குப்பிறகு 17 புதிய மந்திரிகளை நேற்று கோத்தபய ராஜபக்சே நியமித்தார். அவர்களும் உடனடியாக பதவியேற்றுக்கொண்டனர்.

    இந்த புதிய மந்திரிசபையில் ராஜபக்சே குடும்பத்தினர் யாருக்கும் இடம் அளிக்கப்படவில்லை. இதன் மூலம் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவர் மட்டுமே தற்போது இலங்கை அரசில் நீடித்து வருகின்றனர்.

    இதைப்போல மூத்த உறுப்பினர்களுக்கு பதிலாக இளைய எம்.பி.க்களுக்கு மந்திரி பதவிகளை வழங்க கோத்தபய விரும்பினார். அதன்படியே பல புதுமுக எம்.பி.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்பட்டு உள்ளது.

    நாட்டில் நீடித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு இந்த புதிய மந்திரிசபை என்ன தீர்வுகளை பரிந்துரைக்க உள்ளது என்பது போகப்போக தெரியும்.

    இதற்கிடையே கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் இலங்கை மக்கள், புதிய மந்திரிசபைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ராஜபக்சே உடனடியாக பதவி விலக வேண்டும் என்பதை தீவிரமாக வலியுறுத்தி வருகின்றனர்.

    அவர்கள் அன்றாடம் அனுபவித்து வரும் துன்பங்களை மேலும் அதிகரிக்கும் வகையில் நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் அதிகரித்து உள்ளது.

    அந்தவகையில் பெட்ரோல் விலை 10 சதவீதம் அதிகரித்து லிட்டர் ஒன்றுக்கு ரூ.338 ஆகவும், டீசல் விலை 35 சதவீதம் அதிகரித்து ரூ.289 ஆகவும் விற்கப்படுகிறது. இது பிற பொருட்களின் விலையிலும் எதிரொலிக்கும் என்பதால் மக்களின் துயர் நீங்குவதற்கான வாய்ப்புகள் தற்போதைக்கு இல்லை என்றே தெரிகிறது. இதற்கிடையே இலங்கை மத்திய வங்கியின் கவர்னர் பதவியில் இருந்து விலகிய அஜித் நிவார்ட் கப்ரால் வெளிநாடு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் வருகிற 2-ந்தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் கொழும்பு மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

    இலங்கையில் 17 கேபினட் மந்திரிகள் பதவியேற்ற சில மணி நேரங்களில் 21 இணை மந்திரிகளும் பதவியேற்றனர். அவர்களுக்கு கோத்தபய ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

    புதிய மந்திரிகளில் முக்கியமாக ராணுவ இணை மந்திரியாக ஜி.எல்.பெய்ரீஸ் பதவியேற்றுக்கொண்டார்.
    Next Story
    ×