search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    காரில் சென்ற இளைஞனை சுட்டுக் கொன்ற போலீஸ்.. மக்கள் கொந்தளிப்பு: பிரான்சில் வெடித்த போராட்டம்
    X

    காரில் சென்ற இளைஞனை சுட்டுக் கொன்ற போலீஸ்.. மக்கள் கொந்தளிப்பு: பிரான்சில் வெடித்த போராட்டம்

    • நான்டெர்ரே பகுதியில், மக்கள் மிகுந்த கோபத்துடன், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
    • போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர்.

    பிரான்சில் போக்குவரத்து போலீசார் கூறியும் காரை நிறுத்த தவறிய 17 வயது இளைஞனை போலீசார் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தலைநகர் பாரிசின் மெற்கு பகுதியில் உள்ள நான்டெர்ரே நகரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. போலீசாரின் இந்த செயலைக் கண்டித்து போராட்டம் வெடித்துள்ளது.

    இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில், கார் ஓட்டுநரை நோக்கி போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் குறிபார்ப்பது தெரிகிறது. துப்பாக்கி சூடு சத்தம் கேட்கிறது. அதன் பின்னர் அந்த கார் மோதி நிற்பதை வீடியோவில் காண முடிகிறது.

    உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த இளைஞனுக்கு அவசர கால சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், மார்பில் புல்லட் பாய்ந்திருந்ததால் சிறிது நேரத்தில் பலியானான். விசாரணையில் அவன் பெயர் நேல் எம் என தெரியவந்தது. அவனை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரியை பிடித்து விசாரித்து வருகின்றனர். அவர் மீது கொலை குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

    போலீஸ்காரர்களை காயப்படுத்தும் நோக்கத்துடன் நேல் எம் தனது காரை அவர்களை நோக்கி ஓட்டிச் சென்றதாக போலீஸ் தரப்பில் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், இணையத்தில் பரவி வரும் காட்சிகள், அதற்கு நேர்மாறாக உள்ளன. அதில், இரண்டு அதிகாரிகள் வாகனத்தை நிறுத்த முயற்சிப்பதையும், ஒருவர் தனது ஆயுதத்தால் ஜன்னல் வழியாக டிரைவரை நோக்கிச் சுடுவதையும் காண முடிகிறது.

    வீடியோவில் உள்ள ஒருவர் "உன் தலையில் சுடப்போகிறோம்" என்று கூறுவதைக் கேட்க முடிவதாகவும், ஆனால் அதை யார் கூறுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    துப்பாக்கி சூடு நடந்தபோது மேலும் இருவர் காரில் இருந்திருக்கின்றனர். அதில் ஒருவர் தப்பி ஓட, மற்றொருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

    இந்த செய்தியும், வீடியோ காட்சிகளும் வெளியானதும், நான்டெர்ரே பகுதியில், மக்கள் மிகுந்த கோபத்துடன், போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். கார்கள் மற்றும் குப்பைத் தொட்டிகளை எரித்தனர். பேருந்து நிழற்குடைகளை அழித்தனர். ஒரு சிலர் காவல் நிலையம் அருகே பட்டாசு வெடித்தனர்.

    போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்தினர். அவர்களில் சிலர், இரவு முழுவதும் தடுப்புகளை உருவாக்கினர். சட்டம் ஒழுங்கை கருத்தில் கொண்டு 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×