search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • டொக்சூரி புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

    பீஜிங்:

    பசிபிக் பெருங்கடலில் டொக்சூரி என்று பெயரிடப்பட்ட புயல் உருவானது. சூப்பர் சூறாவளி புயலாக வலுவடைந்து பிலிப்பைன்சை நெருங்கிய போது அதன் தீவிரத்தை சற்று இழந்தது. பின்னர் பிலிப்பைன்சை கடுமையாக தாக்கியது.

    ஆனால் கனமழை மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். அதன் பின் தைவானை தாக்கிய டொக்சூரி புயல், தென் கிழக்கு சீனாவை நோக்கி நகர்ந்தது. இதில் புஜியான் மற்றும் குவாங்ஷோ மாகாணங்களை சூறாவளி புயல் தாக்கியது.

    சுமார் 175 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. அதனால் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்து விழுந்தன. பலத்த மழையால் பல இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    புஜியான், குவாங்ஷோ மாகாணத்தை சேர்ந்த சுமார் 7 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் சுமார் 10 லட்சம் பேர் அவதியடைந்துள்ளனர்.

    புயல் வலுவிழந்ததை அடுத்து மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டொக்சூரி புயல் காரணமாக தலைநகர் பீஜிங் மற்றும் அதைச் சுற்றியுள்ள மாகாணங்களில் சிவப்பு எச்சரிக்கையை அந்நாட்டின் வானிலை மையம் விடுத்துள்ளது.

    புஜியான் மாகாணத்தில் கரையை கடந்து புயல், நாட்டின் வடக்கு பகுதியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தலைநகர் பீஜிங் உள்ளிட்ட பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    தற்போது பீஜிங்கில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை 1-ந் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. பீஜிங்கில் பூங்காற்று ஏரிகள் மற்றும் ஆற்றங்கரை சாலைகள் மூடப்பட்டுள்ளன.

    தியான்ஜின், ஹெபே, ஷான்டாங் உள்ளிட்ட மாகாணங்களில் மழை பெய்து வருகிறது.

    சீனா, பிலிப்பைன்ஸ் தைவான் ஆகிய நாடுகளை புரட்டி போட்டுள்ளது டொக்சூரி. புயலில் சிக்கி 39 பேர் பலியாகி உள்ளனர்.

    • நுகர்வோரின் வாங்கும் திறன் எதிர்பார்த்ததை விட குறைந்திருக்கிறது
    • வியப்பூட்டும் விதமாக ஆணுறைகளின் விற்பனை குறையவில்லை

    உலகின் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றான சீன பொருளாதாரம் குறித்து ஒரு வியப்பான தகவல் வெளியாகியிருக்கிறது.

    சீனாவில் நுகர்வோரின் வாங்கும் திறன் எதிர்பார்த்ததை விட குறைவாக இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கூறி வந்தனர்.

    அதேபோல் சீனாவில் இருந்து கிடைக்கும் பொருளாதார தகவல்கள், கோவிட் தொற்று நோய்க்கு பிந்தைய வர்த்தக எழுச்சி, எதிர்பார்த்ததை போல் நீடிக்கவோ, அதிகரிக்கவோ இல்லை என்றும் மாறாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கின்றன. இதனால் நுகர்வோர்களின் வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று நிபுணர்கள் கோரி வருகின்றனர்.

    இந்நிலையில் நுகர்வோர் பொருட்களுக்கான வியாபாரங்களில் ஜாம்பவானான திகழும் யூனிலீவர் (Unilever), சீனாவில் ரியல் எஸ்டேட் மற்றும் ஏற்றுமதிகள் வீழ்ச்சியடைந்து வருவதால், நுகர்வோரின் வாங்கும் சக்தி, வரலாறு காணாத அளவிற்கு குறைந்துள்ளது என தெரிவித்தது.

    ஆனால் வியப்பூட்டும் விதமாக, ஆணுறைகளின் விற்பனை குறையவில்லை என்று டியூரெக்ஸ் (Durex) ஆணுறைகளை தயாரிக்கும் பிரிட்டன் நாட்டை தளமாக கொண்ட பன்னாட்டு நிறுவனமான ரெக்கிட் (Reckitt) தெரிவித்துள்ளது.

    ரெக்கிட் நிறுவனம் அதன் வருவாய் முடிவுகளை அறிவித்தபோது, அதன் சுகாதார பொருட்கள் விற்பனை பிரிவின் வர்த்தகத்தில் நிகர வருவாய் வளர்ச்சி 8.8% என அறிவித்தது.

    இதுகுறித்து அறிக்கை வெளியிட்ட அதன் தலைமை நிர்வாக அதிகாரி, நிகான்ட்ரோ டுரான்டே (Nicandro Durante) தெரிவித்திருப்பதாவது:-

    எங்கள் தயாரிப்புகளில், நெருக்கமான உறவுகளுக்கான ஆரோக்கிய (intimate wellness) பொருட்களின் விற்பனை சீராக உள்ளது. ஆணுறைகள், K-Y லூப்ரிகண்ட் உள்ளிட்ட பொருட்களால் இந்த வளர்ச்சி சாத்தியமாகியிருக்கிறது. ஆணுறை தயாரிப்புகளில் புது பொருட்களை உபயோகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். பாலியூரிதேன் கொண்டு தயாரிக்கப்படும் மிக மெல்லிய ஆணுறைகளை சீன சந்தைக்காக டைகாங்க் பகுதியில் உற்பத்தி செய்ய போகிறோம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பொருளாதாரம் ஆட்டம் கண்டாலும், சீனர்களின் ஆட்டம் குறையவில்லை என இதுகுறித்து கிண்டலாக மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    • டெங்குடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சென் அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்
    • அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது.

    குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென் என்ற பெண்ணுடன் திருமணம் செய்யாமல் குடும்பம் நடத்தியிருக்கிறார். இவர்களுக்கு குழந்தை பிறந்த சிறிது காலத்தில், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்தப் பெண் பிரிந்து சென்றுள்ளார். குழந்தையை டெங் வசம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், டெங் தனது கைக்குழந்தையின் முகத்தில் சுமார் 30 வினாடிகள், 30 முறை அறைந்து, அந்த செயலை படம்பிடித்து தனது காதலிக்கு அனுப்பியுள்ளார்.

    இணையத்தில் பகிரப்பட்ட அந்த வீடியோவில், வலியால் குழந்தை அழுதபோதும், முகம் சிவந்து வீங்கும் வரை டெங் அறைந்து கொண்டே இருக்கிறார். இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சியடைந்த பலர், தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    "ஒரு தாயாக, இந்த வீடியோவைப் பார்த்து நான் அழுதேன். இந்த மனிதன் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இது ஒரு மனிதன் செய்யும் காரியமே அல்ல" என்று சமூக ஊடக பயனர் ஒருவர் கூறினார்.

    "தந்தைக்கான உரிமையை அவரிடமிருந்து ரத்து செய்ய வேண்டும். இல்லையெனில் குழந்தை எதிர்காலத்தில் அதிகமாக இது போன்ற துன்புறுத்தல்களை சந்திக்க நேரிடும்" என்று மற்றொரு பயனர் கூறினார்.

    குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஜான்ஜியாங் நகராட்சி, திகிலூட்டும் இந்த வீடியோ குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.

    அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    டெங்கை விட்டு அக்குழந்தையின் தாயார் சென் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனியாக குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த டெங், இந்த வீடியோவை கண்டதும் சென் திரும்பி வருவார் என நம்பி இச்செயலில் ஈடுபட்டிருக்கிறார். இந்த துன்புறுத்தலின் விளைவாக தாக்கப்பட்ட அந்த குழந்தைக்கு நீண்டகால உடல் உபாதைகள் எதுவும் ஏற்படவில்லை. உள்ளாட்சி அமைப்பு அந்த குழந்தையை தற்போது கவனித்து வருகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கை கூறுகிறது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, குழந்தையின் தந்தை டெங்கை கைது செய்தனர்.

    • புதிய வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
    • கின் கேங் பீஜிங்கில் ரஷிய வெளியுறவுத்துறை துணை மந்திரியை சந்தித்தபிறகு பொதுவெளியில் வரவில்லை.

    பீஜிங்:

    சீனாவின் வெளியுறவுத்துறை மந்திரி கின் கேங் சுமார் ஒரு மாதகாலமாக பொதுவெளியில் தோன்றவில்லை. ஜூன் 25ம் தேதி பீஜிங்கில் ரஷியாவின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஆண்ட்ரே ருடெங்கோவை சந்தித்தபிறகு அவர் எங்கிருக்கிறார்? என்ற தகவல் தெரியாமல் இருந்தது. அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்றும், துறை ரீதியான விசாரணை நடத்தப்படுவதாகவும் தகவல் வெளியானது. அரசுத் தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.

    இந்நிலையில், கின் கேங் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளியுறவு மந்திரியாக வாங் யி நியமனம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

    கின் கேங் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனால் அவரது பதவிநீக்கம் தொடர்பான உத்தரவில் அதிபர் ஜி ஜின்பிங் கையெழுத்திட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வாங்கிற்கு பதிலாக கின் கேங் வெளியுறவு மந்திரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
    • உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது.

    பெய்ஜிங்:

    வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

    அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 4 பேர் இறந்தனர். இது பற்றி அறிந்ததும் 160-க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி படுகாயத்துடன் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த 10 பேரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் 6 பேர் உயிர் இழந்தனர்.

    இந்த விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.

    • தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
    • காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    பெய்ஜிங்:

    இத்தாலி, ஸ்பெயின், சீனா உள்ளிட்ட நாடுகளில் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பஅலை தாக்கி வருகிறது.

    இதன் காரணமாக இத்தாலியில் 114.8 டிகிரி வெயிலும், ஸ்பெயினின் தெற்கு பகுதியில் 111.2 டிகிரி வெயிலும் பொது மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

    இதில் உச்சகட்டமாக சீனாவில் வரலாறு காரணாத வகையில் 125.6 டிகிரி வெயில் போட்டு தாக்குகிறது. 100 டிகிரி அடித்தாலே பொதுமக்கள் வாடி வதங்கி விடுவார்கள். ஆனால் இதை விஞ்சும் வகையில் வெப்ப அலை அதிகமாக வீசுவதால் சீன மக்கள் தவித்து வருகின்றனர்.

    தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட சீனாவின் வடக்கு பகுதிகள் தான் வெப்ப அலையால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. 10 நாட்களுக்கு மேலாக இந்த பகுதிகளில் வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி விட்டனர். இன்னும் 5 நாட்களுக்கு கடுமையான வெப்பஅலை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளதால் காலை 11 மணியில் இருந்து மாலை 6 மணிவரை பொதுமக்கள் வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    சீனாவில் கடந்த 1961-ம் ஆண்டு கடும் வெப்ப அலை ஏற்பட்டது. அதன்பிறகு இப்போது அங்கு வெப்ப அலை பொதுமக்களை பாடாய் படுத்துகிறது. வெப்பத்தால் இரவு நேரம் கடும் புழுக்கமாக இருக்கிறது.இதனால் தூங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த வெப்ப அலைக்கு ஏராளமானோர் அம்மை, சிறுநீர் கடுப்பு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதையடுத்து அவர்கள் ஆஸ்பத்திரியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.நோயாளிகள், முதியவர்கள் வெப்ப அலையால் தாக்குபிடிக்க முடியாமல் தவிப்புக்குள்ளாகி வருகின்றனர்,

    இத்தாலியில் ரோம், சிசிலி உள்ளிட்ட 16 முக்கிய நகரங்களில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இத்தாலியில் 46 நகரங்களில் 120 டிகிரி வெயில் அடிக்கிறது.

    வெப்பஅலையால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கி கிடக்கும் சூழ்நிலை நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். ஸ்பெயினில் 112 டிகிரி வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் அனலால் காடுகளில்வேகமாக தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    • 41.5 கோடி பேர் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்
    • போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது- ஜி ஜின்பிங்

    சீனாவில் பல கட்சி அரசியல் அமைப்போ ஜனநாயகமோ இல்லை. அங்குள்ள பிரதான மற்றும் ஒரே கட்சி சீன கம்யூனிஸ்ட் கட்சி. இதற்கு உலகெங்கிலும் பல கோடி மக்கள் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இம்மாத துவக்கம் முதல் சுமார் 41.5 கோடி பேர் சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொடர்பை துண்டித்துள்ளனர்.

    இந்நிலையில் சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி அழிந்துவிடும் அபாயம் உள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

    உடைந்த சோவியத் ஒன்றிய நாடுகளில், பல வருடங்களுக்கு முன் 'நிற புரட்சி' எனப்படும் சர்வாதிகார அரசுகளுக்கு எதிராக ஜனநாயகம் கோரும் மக்கள் எழுச்சிகள் நடைபெற்றன.

    இதனை போன்று சீனாவில் நடத்த சில அயல்நாட்டு சக்திகள் முயற்சிப்பதாக மறைமுகமாக குறிப்பிட்டு ஒரு நாட்டின் உள்விவகாரங்களில் பிற நாடுகள் நுழைவதை சீனா விரும்பவில்லை என சமீபத்திய ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜின்பிங் தெரிவித்தார்.

    மேலும் அவர், போதிய கவனம் செலுத்தவில்லையென்றால் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுள் முடிவதை தடுக்க முடியாது என எச்சரித்துள்ளார்.

    2022-ம் ஆண்டு இளம் தொண்டர்களுக்கான பயிற்சி கூட்டத்தில் அவர் ஆற்றிய உரை ஒன்றும் தற்போது வெளிவந்திருக்கிறது.

    அதில் மார்க்ஸிஸ மற்றும் கம்யூனிஸ கொள்கைகள் நிலைநிறுத்தப்படாவிட்டால் 90-களின் ஆரம்பத்தில் சோவியத் ஒன்றியத்தில் ஏற்பட்டதை போன்று சீனாவிலும் கம்யூனிஸம் அழிந்து, சீனாவும் சுக்குநூறாகி விடும் அபாயம் உள்ளதாக கூறியிருக்கிறார்.

    திரள்திரளாக உறுப்பினர்கள் கம்யூனிஸ கொள்கையிலும் கட்சியிலும் இருந்து விலகியதால்தான் சோவியத் ஒன்றியம் உடைய தொடங்கியது குறிப்படத்தக்கது.

    அதேபோல் சீனாவிலும் நடக்கலாம் என கம்யூனிஸ்ட் கட்சி அச்சப்படுகிறது. நாடு முழுவதும் உள்நாட்டிலும், உலகெங்கிலும் பல நாடுகளுடனும் பொருளாதார மற்றும் சமூக சிக்கல்களை சீனா எதிர்கொண்டு வருகிறது.

    கட்சியின் கொள்கை முடிவுகளுக்கு மக்களிடையே வரவேற்பு இல்லாததே, கட்சியில் இருந்து விலகுவதற்கு முக்கிய காரணம் என அக்கட்சி கருதுகிறது.

    ஆனால் மக்களின் குரலுக்கும், கருத்து சுதந்திரத்திற்கும் எதிரான கம்யூனிஸ்ட் கட்சியின் கடுமையான நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான் உலகெங்கிலுமிருந்து லட்சக்கணக்கில் மக்கள் அக்கட்சியை விட்டு விலகி வருகின்றனர் என்றும் சீனாவில் தற்போது அதிகாரத்திலும் ஆட்சியிலும் பங்கேற்பதற்காகவே கட்சியில் உறுப்பினர்கள் உள்ளனரே தவிர கொள்கைகளுக்காக கட்சியில் இருக்குமாறு அதிபர் விடுத்த அழைப்பிற்கு போதிய வரவேற்பில்லை என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

    உலக வர்த்தகத்தின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் சக்தியான சீனாவின் ஒரே கட்சியில் இத்தகைய ஆபத்து உருவாகியிருப்பதை அரசியல் மற்றும் பொருளாதார வல்லுனர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • சீனாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2-வது காலாண்டில் 6.3 சதவீதமாக உள்ளது
    • 16 முதல் 24 வயதிலான இளைஞர்களின் வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் அதிகரிப்பு

    சீனாவின் இரண்டாவது காலண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்த அதிகாரபூர்வமான அறிக்கையை அந்நாடு வெளியிட்டிருக்கிறது. இதன்படி, உள்நாட்டு உற்பத்தி 6.3% என உயர்ந்திருந்தாலும் பொருளாதார வல்லுனர்கள் எதிர்பார்த்திருந்ததை விட இது குறைவு என தெரிகிறது.

    அதே சமயம் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை ஒரு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. ஜூன் மாதத்திற்கான 16 வயதிலிருந்து 24 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை 21.3 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்றும், அனைவருக்குமான வேலைவாய்ப்பின்மை நகரங்களில் ஜூன் மாதம் 5.2 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டிருக்கிறது.

    "சீனா ஒரு சிக்கலான புவிசார் அரசியல் பின்னணியில் மாறி வரும் பன்னாட்டு பொருளாதார சூழலை சந்தித்து வருகிறது என்றும் வேலைவாய்ப்பின்மை இன்னும் உயரலாம்; ஆனால் ஆகஸ்ட மாதத்திற்கு பிறகு குறையும்" என சீனாவின் தேசிய புள்ளிவிவர ஆணையத்தின் செய்தித்தொடர்பாளர் ஃபூ லிங்ஹுய் தெரிவித்தார்.

    சீனாவின் குறைந்து வரும் வேலைவாய்ப்பின்மை குறித்து கடந்த மே மாதம் கோல்ட்மேன் சேக்ஸ் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோவிட் காலத்திற்கு முன்பு 10% என இருந்த வேலைவாய்ப்பின்மை ஜூன் மாதம் 20.4% என இரட்டிப்பானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இளைஞர்களுக்கு குறைந்தளவே அனுபவம் இருப்பதால், பொருளாதார சுழற்சிகள் நடைபெறும் போதெல்லாம் வேலைவாய்ப்பின்மையில் அவர்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். கல்லூரிகளிலிருந்து பெறும் திறமைகளுக்கும், தொழில்துறைக்கு தேவைப்படும் திறனுக்கும் பெருமளவில் வித்தியாசம் இருப்பதுதான் அடிப்படை காரணமாக அந்த அறிக்கை தெரிவித்திருந்தது குறிப்பத்தக்கது.

    சீன பொருளாதாரத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிக அவசியம் என அந்நாடு கருதுவதால் கல்லூரி படிப்பை முடித்து வெளிவரும் இளைஞர்களுக்கு ராணுவம் உட்பட அரசாங்க நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைக்க பல வழிமுறைகளை உறுதி செய்துள்ளது.

    இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடிக்கும் மேல் (11.58 மில்லியன்) கல்லூரி படிப்பை முடிக்கும் பட்டதாரிகள் வேலைவாய்ப்பை தேடி வெளிவர போகிறார்கள் என்பதால் பொருளாதார வல்லுனர்கள் சீனா இந்த நிலையை எதிர்கொள்ள எடுக்க போகும் நடவடிக்கைகளையும் அது எந்தளவிற்கு பயனளிக்கிறது என்பதையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.

    • விசாரணையில், ஆசிரியை வாங் யுன், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.
    • மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    மத்திய சீனாவில், குழந்தைகளுக்கான உணவில் ரசாயனத்தை கலந்து ஒரு குழந்தையை கொன்று, 24 பேருக்கு பாதிப்பை உண்டாக்கிய முன்னாள் மழலையர் பள்ளி ஆசிரியைக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    வேங் யுன் எனும் 39-வயது ஆசிரியை வாங் யுன், 2019ம் வருடம் மார்ச் மாதம், உடன் பணி செய்யும் ஒரு ஆசிரியருடன் ஏற்பட்ட ஒரு தகராறுக்கு பிறகு சோடியம் நைட்ரைட் எனும் ரசாயனத்தை வாங்கியுள்ளார். மறுநாள் அவர் பணிபுரிந்த மழலையர் பள்ளியில் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட உணவு வைக்கப்பட்ட பாத்திரங்களில் அதனை கலந்து விட்டார்.

    அதன்பின்னர் ஜனவரி 2020 மாதவாக்கில் ஒரு குழந்தைக்கு பல உறுப்புகள் செயலிழந்த நிலையில் பலியானது. இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டது. விசாரணையில், ஆசிரியை வாங், உணவில் கலந்த ரசாயனம்தான், குழந்தைகளின் பாதிப்புக்கு காரணம் என தெரியவந்தது.

    இந்த வழக்கை விசாரித்த ஹெனன் மாகாணத்தின் ஜியாவ்ஜுவோ நகர நீதிமன்றம் கடந்த 2020 ஜனவரி மாதம் அந்த ஆசிரியைக்கு மரண தண்டனை வழங்கியது. மரண தண்டனைக்கான உத்தரவை ரத்து செய்ய கோரி அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதனையடுத்து நேற்று, அதே நீதிமன்றம் அவருக்கு தண்டனையை நிறைவேற்ற அவர் அடையாளத்தை உறுதி செய்தது. பின்பு அவர் தண்டனைக்கான மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

    சமீப காலமாக சீனாவின் மழலையர் பள்ளிகளில் அதிகரித்து வரும் வன்முறை மரணங்களில் இதுவும் ஒன்று என்பதால் இந்த தீர்ப்பை மக்கள் மிகவும் உன்னிப்பாக கவனித்தனர்.

    வருடாவருடம் ஆயிரக்கணக்கான குற்றவாளிகளுக்கு சீனா மரண தண்டனை வழங்கி வருவதாக மனித உரிமைகளுக்கான என்.ஜி.ஓ. அமைப்பான சர்வதேச பொதுமன்னிப்பு சபை தெரிவிக்கிறது.

    • திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய 2வது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையை லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.
    • சீனாவில் தனியார் வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.

    சீனாவைச் சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான லேண்ட்ஸ்பேஸ், உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளி ராக்கெட்டை வெற்றிகரமாக சுற்றுப்பாதையில் செலுத்தியுள்ளது.

    ஜுக்-2 கேரியர் என்ற இந்த ராக்கெட், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இன்று உள்ளூர் நேரப்படி காலை 09:00 மணிக்கு வானில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டிருக்கிறது.

    இந்த வெற்றியின் மூலம் இந்நிறுவனம், குறைந்தளவே மாசுபடுத்தும், பாதுகாப்பான, மலிவான மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய உந்துசக்தியை கொண்டு ஏவுகணை வாகனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை முந்துகிறது.

    இதன் மூலம், மீத்தேன் வாயுவை எரிபொருளாக கொண்டு செலுத்தப்படும் விண்வெளி வாகனங்களை உருவாக்கும் போட்டியில் அமெரிக்காவின் எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் ஜெஃப் பெஜோஸின் நிறுவனமான புளூ ஆரிஜின் நிறுவனம் ஆகியவற்றை சீனா முந்தி விட்டது.

    மேலும், திரவ உந்து ராக்கெட்டை விண்ணில் செலுத்திய இரண்டாவது தனியார் சீன நிறுவனம் என்ற பெருமையையும் லேண்ட்ஸ்பேஸ் பெற்றுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம், எரிபொருளை நிரப்பி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தில் சீனாவின் பீஜிங் டியான்பிங் டெக்னாலஜி எனும் நிறுவனம் ஒரு மண்ணெண்ணெய்-ஆக்சிஜன் ராக்கெட்டை ஏவி வெற்றி கண்டது.

    2014ல் விண்வெளி துறையில் தனியார் முதலீட்டை சீன அரசாங்கம் அனுமதித்ததிலிருந்து சீன வணிக விண்வெளி நிறுவனங்கள் இந்தத் துறையில் ஆர்வமாக செயல்பட்டு வருகின்றன.

    லேண்ட்ஸ்பேஸ் கடந்த டிசம்பர் மாதம் ஜுக்-2 ராக்கெட்டை ஏவும் முயற்சியில் இறங்கி தோல்வி கண்டது. தற்போது இரண்டாவது முயற்சியில் வெற்றி பெற்றுள்ளது.

    • இரண்டு ராக்கெட்டுகளை பயன்படுத்தி நிலவுக்கு மனிதர்களை அனுப்ப திட்டம்
    • இதற்கு முன் ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பி மாதிரிகளை சேகரித்துள்ளது

    2030 வருடத்திற்குள் சந்திரனுக்கு இரண்டு ராக்கெட்டுகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்று சந்திரனின் மேற்பரப்பில் தரையிறங்கும் லேண்டர் (Lander) வாகனத்தை சுமந்து செல்லும். மற்றொன்று விண்வெளி வீரர்களை கொண்டு செல்லும் விண்கலத்தை ஏந்திச் செல்லும்.

    விண்வெளி வீரர்களையும், லேண்டரையும் ஒன்றாக அனுப்பும் அளவுக்கு ஒரு சக்திவாய்ந்த கனரக ராக்கெட்டை உருவாக்குவதில் சீனாவிற்கு நீண்டகாலமாக தொழில்நுட்ப தடை இருந்து வந்தது. இந்த இரட்டை ராக்கெட் திட்டம் மூலம் அது தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இரண்டு ராக்கெட்டுகளும் சந்திரனின் சுற்றுப்பாதையில் நுழைந்து அதன் விண்கலங்கள் நிலைநிறுத்தப்பட்ட பின்னர், விண்வெளி வீரர்கள் லேண்டரில் பயணித்து சந்திரனின் மேற்பரப்பில் இறங்குவார்கள். பின்பு சந்திரனில் தங்கள் அறிவியல் ஆராய்ச்சி பணிகளை முடித்துக்கொண்டு, மாதிரிகளை சேகரித்த பிறகு, சுற்றுப்பாதையில் உள்ள விண்கலத்திற்கு விண்வெளி வீரர்கள் லேண்டர் மூலம் திரும்புவார்கள். அதில் பயணித்து அவர்கள் பூமிக்கு வருவார்கள்.

    சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் போட்டி சமீபத்திய ஆண்டுகளில் தீவிரமடைந்துள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் சந்திரனில் உள்ளதாக கருதப்படும் கனிம வளங்களை குறி வைக்கின்றன.

    சந்திரனில் மனிதர்களுக்கான வாழ்விடங்களை நிறுவுவதன் மூலம், செவ்வாய் போன்ற பிற கிரகங்களுக்கு எதிர்கால விண்வெளி ஆராய்ச்சி குழுவினர் பயணங்களை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

    இதுபோன்ற விண்வெளி பயணங்களில், அனுபவம் மற்றும் தொழில்நுட்பத்தில் அமெரிக்காவை விட சீனா இன்னும் பின்தங்கியே உள்ளது.

    சந்திரனில் இறங்கி ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்பும் சீனாவின் லட்சிய நோக்கங்களை பூர்த்தி செய்ய, அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள், "சூப்பர் ஹெவி லாங் மார்ச் 10" எனப்படும் ராக்கெட், விண்வெளி வீரர்களுக்கான ஒரு புதிய வடிவமைப்புடைய விண்கலம், சந்திரனில் பயணிக்கும் லேண்டர் மற்றும் விண்வெளி வீரர்களின் குழுவோடு சந்திரனில் நடமாடும் ரோவர் ஆகியவற்றை உருவாக்கி வருகின்றனர்.

    2020-ல் சீனா மேற்கொண்ட ஆளில்லா விண்வெளி பயணத்தின் மூலம் சந்திரனில் இருந்து மாதிரிகளை கொண்டு வந்தது. இதன் மூலம், அமெரிக்கா மற்றும் சோவியத் யூனியனுக்கு பிறகு சந்திரனிலிருந்து மாதிரிகளை கொண்டு வந்த 3-வது நாடாக சீனா ஆனது குறிப்பிடத்தக்கது.

    • பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரியில் இறக்கிவிட்டுச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.
    • தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

    சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்திருக்கின்றனர். அவர்களில், 3 குழந்தைகளும் அடங்குவர். மீதமுள்ள பலியானவர்களில் ஒருவர் ஆசிரியர் என்றும் மற்றும் 2 பேர் பெற்றோர்கள் எனவும் கூறப்படுகிறது. இச்சமபவத்தில் மேலும் ஒருவர் காயமடைந்தார்.

    இது தொடர்பாக வூ என்ற குடும்பப்பெயர் கொண்ட 25-வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    உள்ளூர் நேரப்படி காலை 07:40 மணியளவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நர்சரியில் இறக்கிவிட்டுச் செல்லும் போது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    பள்ளியில் கொல்லப்பட்ட நபர்களில் ஒருவரின் கார் இப்போது கத்திக்குத்து நிகழ்த்தியவரின் குழந்தையை மோதியுள்ளது என அடையாளம் தெரியாத சாட்சி ஒருவர் கூறியிருப்பதாக தெரிகிறது. வேறு எந்த விவரமும் கிடைக்கவில்லை.

    சீனாவில் வன்முறை குற்றங்கள் அரிதாக இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக மழலையர் பள்ளி தாக்குதல்கள் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன.

    கடந்த ஆகஸ்ட் மாதம், ஜியாங்சி மாகாணத்தில் உள்ள ஒரு மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்து தாக்குதலில், 3 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சிலர் காயமடைந்தனர்.

    2021ம் ஆண்டு ஜூன் மாதம் மற்றொரு நிகழ்வில், தெற்கு சீனாவில் உள்ள ஒரு ஆரம்பப் பள்ளியில், கத்தியால் தாக்கிய ஒரு நபரால், 37 மாணவர்களும், 2 பெரியவர்களும் காயமடைந்தனர்.

    2021ல் குவாங்சி பகுதியில் உள்ள மழலையர் பள்ளியில் ஒரு சம்பவத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர், மேலும் 16 பேர் காயமடைந்தனர்.

    தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பொதுவாக மனநோயால் பாதிக்கப்பட்டவர்கள் என இந்த சம்பவங்களை ஆராய்பவர்கள் கூறுகின்றனர். அனேகமாக இச்சம்பவங்களில் கத்தியே பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் பெரும்பாலான துப்பாக்கிகள் சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டு அவை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

    ×