என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சீனா
- டாகு எனும் பனிப்பாறையின் 5,382 சதுர அடி பகுதி போர்வையால் மூடப்பட்டுள்ளது
- பனிப்பாறையால் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதும், நீர் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது
புவி வெப்பத்தால் பனிப்பாறைகள் நீராய் உருகுவது தொடர்ந்தால், சில தசாப்தங்களில் அவைகள் காணாமல் போய்விடும் என சுற்றுச்சூழல் வல்லுனர்கள் எச்சரித்து வந்தனர்.
இந்நிலையில், வடமேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் மாகாணத்தில், வேகமாக உருகும் டாகு எனும் பனிப்பாறையின் 5,382 சதுர அடி பகுதியை சுற்றுச்சூழலுக்கு உகந்த துணி என கருதப்படும் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளை (geotextile blankets) பயன்படுத்தி ஒரு குழு மூடியது. இதன்மூலம் சூரியக்கதிரில் இருந்து பாதுகாக்கப்பட்டு, பாறைகள் வெப்பமடைவது குறைந்து உருகுதல் நிற்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மிதமான பனிப்பாறை (temperate glacier) வகையை சேர்ந்தது டாகு பனிப்பாறை. இது திரவ நீர் மற்றும் பனிப்பாறை பனி இரண்டையும் உள்ளடக்கியது. ஆனால் இது தற்போது உடனடியாக உருகும் நிலையை அடைந்துவிட்டது. ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான வாங் ஃபீடெங்க் என்பவரின் கருத்துப்படி, இது வழக்கமான ஆல்பைன் பனிப்பாறைகளை விட வேகமாக உருகுகிறது.
தற்போது நடைபெறும் இந்த முயற்சி, இதற்குமுன் ஒருமுறை சீன அறிவியல் அகாடமி ஆகஸ்ட் 2019-ல் அதே பனிப்பாறையின் 5382 சதுர அடி பரப்பளவில் ஜியோடெக்ஸ்டைல் போர்வைகளால் மூடிய ஒரு வெற்றிகரமான பரிசோதனையின் தொடர்ச்சியாகும்.
அப்பொழுது இரண்டரை மாதங்களுக்கு பிறகு, பாதுகாப்பற்ற பகுதிகளைவிட போர்வையிடப்பட்ட பகுதியில் 3.2 அடி அளவிற்கு தடிமன் கொண்ட பனிக்கட்டி இருப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த முயற்சிக்கு தலைமை ஏற்றுள்ள நான்ஜிங் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியரான ஜு பின் (32 வயது) "பூமி வெப்பமடைந்து கொண்டே இருந்தால், இறுதியில் பனிப்பாறைகளை எப்போதுமே பாதுகாக்க வழியேதும் இல்லை" என எச்சரித்துள்ளார்.
ஜூ தலைமையிலான குழு இம்முறை 93%-க்கும் அதிகமான சூரிய ஒளியை தடுக்கும் திறனைக் கொண்டுள்ள ஒரு புதிய பொருளை கொண்டு தயாரிக்கப்பட்ட போர்வையால் இந்த பரிசோதனையை செய்கிறது. சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்காக, தாவரங்களில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு இயற்கை நார்ச்சத்தான செல்லுலோஸ் அசிடேட் மூலம் இந்த போர்வையின் மேற்பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சிகள் குறித்து மற்றொரு ஆராய்ச்சியாளரான வாங் ஃபெய்டெங், "இந்த போர்வையால் மூடும் முயற்சி பனிப்பாறையின் மேற்பரப்பில் சூரிய கதிர்வீச்சு மற்றும் வெப்ப பரிமாற்றத்தை தடுக்கும் திறனை கொண்டிருக்கிறது. பெரும்பாலான ஆராய்ச்சிகள் இன்னும் பனிப்பாறை உருகுவதை நிறுத்துவதற்கான வழிகளைக் காட்டிலும் உருகுவதற்கான காரணங்களை அறிய கவனம் செலுத்துகின்றன" என தெரிவித்தார்.
இந்தத் திட்டமானது உள்ளூர் சுற்றுலாப் பணியகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான டென்சென்ட் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகியவற்றால் ஆதரிக்கப்படுகிறது.
டாகு பனிப்பாறையினால் அதனை சுற்றி வாழும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு குடிநீர் கிடைப்பதும், நீர் மின் உற்பத்தியும் நடைபெறுகிறது.
இதுமட்டுமின்றி, திபெத் பீடபூமி (Tibetan platueau) பகுதியில் அமைந்துள்ள டாகுவின் கம்பீரமான காட்சிகள் ஆண்டுக்கு 2 லட்சம் சுற்றுலா பயணிகளை ஈர்க்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வேலை செய்யும் தொழிலுக்கு வாழ்வாதாரமாகவும் உள்ளது.
இப்போது புவி வெப்பமடைந்து பனிப்பாறை உருகுவது தொடர்ந்தால், இவை அனைத்தும் சில வருடங்களில் அழிந்து விடும் அபாயம் உள்ளது. உலகெங்கிலும் இதுபோன்ற முயற்சிகள் பல நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
எடுத்துக்காட்டாக 2009 முதல் ரோன் பனிப்பாறை (Rhone Glacier) அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் ஒவ்வொரு வசந்த காலத்திலும் தெற்கு சுவிஸ் ஆல்ப்ஸ் மலைகளுக்கு சென்று அந்த இடத்தை வெள்ளை வெப்பப் போர்வைகளால் போர்த்துகின்றனர்.
2020-ல் இத்தாலியின் ப்ரெசேனா பனிப்பாறை (Presena Glacier) தார்பாலின் கொண்டு மறைக்கப்பட்டு பலனளிக்கப்பட்டது.
திபெத்திய பீடபூமி தற்போதிருக்கும் உயரத்தை அடைய பல கோடி வருடங்கள் ஆன நிலையில், கடந்த 50 வருடங்களில் 15%க்கும் அதிகமாக பனிப்பாறைகளை இழந்திருக்கின்றது. எனவே இது அவசியமான முயற்சி என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
- கடல் உணவுகள், ஸ்காலப்ஸ் மற்றும் ஜப்பானிய சாக் போன்றவை சீன சந்தையில் பரவலாக பிரபலமாக உள்ளன.
- நீர் வெளியிடப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறவில்லை.
ஜப்பானில் சுனாமி மற்றும் நிலநடுக்கத்தால் கடுமையாக சேதமடைந்த புகுஷிமா அணுமின் நிலையம் மூடப்பட்டது.
அதிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை கடலில் திறந்துவிடும் ஜப்பானின் திட்டம் சர்வதேச தரத்தை பூர்த்தி செய்யும் என்று நம்புவதாக தென் கொரியா கூறியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு ஐக்கிய நாடுகளின் அணுசக்தி அமைப்பு (IAEA), பெரும் சர்ச்சைக்குரிய இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ததில் போதுமான அளவு பாதுகாப்பு இருப்பதாக கூறியிருந்தது.
இந்நிலையில், தென் கொரியா, மே மாத இறுதியில் ஆலையில் தானாக செய்த ஆய்வின் அடிப்படையிலும், ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அளித்த மதிப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையிலும் புகுஷிமா அணுமின் ஆலையிலிருந்து பசிபிக் பெருங்கடலில் சுமார் 10 லட்சம் டன்களுக்கு மேல் சுத்திகரிக்கப்பட்ட நீரை வெளியிடுவதில் எந்த ஆபத்தும் இல்லை என்று தென் கொரியா அரசாங்கம் அறிவித்திருக்கிறது.
இந்த திட்டத்தற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் சுங்கத்துறை 10 ஜப்பானிய மாகாணங்களிலிருந்து வரும் உணவுப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களை மேற்கோள் காட்டி, கதிரியக்கப் பொருட்களுக்கான சோதனையை சீனா அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில், டோக்கியோ அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை கடலில் விடத் தொடங்கிய பின்னர், புகுஷிமா மற்றும் தலைநகர் டோக்கியோ உட்பட ஜப்பானின் 10 மாகாணங்களில் இருந்து கடல் உணவுகளுக்கான தடையை நீட்டிப்பது உட்பட "தேவையான அனைத்து நடவடிக்கைகளையும்" எடுப்பதாக சீனாவின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
மேலும், 2011ம் ஆண்டில் புகுஷிமா அணுசக்தி பேரழிவிற்குப் பிறகு, சீனாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட ஜப்பானிய உணவு கதிரியக்க மாசுபாடு பிரச்சினைக்கு சீனாவின் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் அளித்துள்ளன.
கடல் உணவுகள், ஸ்காலப்ஸ் மற்றும் ஜப்பானிய சாக் போன்றவை சீன சந்தையில் பரவலாக பிரபலமாக உள்ளன.
அணுசக்தி காரணமாக சில ஜப்பானிய பிராந்தியங்களிலிருந்து இறக்குமதியை கட்டுப்படுத்தும் பல நாடுகளில் இது இருந்தபோதிலும், கடந்த ஆண்டு ஜப்பானிய கடல் உணவு ஏற்றுமதியில் இது மிகப்பெரிய வாங்குபவராக இருந்தது.
ஜப்பானின் திட்டமிட்ட நீரை விடுவிப்பது கடல்வாழ் உயிரினங்களுக்கும் மனித ஆரோக்கியத்துக்கும் அச்சுறுத்தலாக இருப்பதாக சீனாவும் கடுமையாக விமர்சித்துள்ளது.
நீர் வெளியிடப்பட்டால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீனா கூறவில்லை, ஆனால் அதன் நடவடிக்கையின் "எல்லா விளைவுகளையும் தாங்க வேண்டும்" என்று ஜப்பானை எச்சரித்துள்ளது.
- அமெரிக்க கருவூலத்துறை மந்திரி சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
- OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது.
கம்ப்யூட்டர் செயல்பாடுகளில் மிகவும் முக்கியமான பணியை செய்வது இயங்குதளம் (Operating System). கம்ப்யூட்டர் பாகங்கள் உயிர்பெற்று இயங்குவதற்கு இயங்குதளம் அவசியமானது. இந்த தொழில்நுட்பத்தில் உலகம் முழுவதும் விண்டோஸ், மேக்ஓஎஸ் ஆகியவை ஆதிக்கம் செலுத்திவருகின்றன.
இந்நிலையில், சீன அரசு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் ஓபன் சோர்ஸ் கம்ப்யூட்டர் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது. அமெரிக்காவுடனான போட்டி அதிகரித்துள்ள நேரத்தில், வெளிநாட்டு சார்பைக் குறைக்கும் முயற்சியாக இந்த புதிய சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க கருவூலத்துறை மந்திரி ஜேனட் யெல்லன் சீனாவுக்கு வருவதற்கு முன்னதாக இந்த புதிய இயங்குதளம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஓபன்கிளின் (OpenKylin) என்று அழைக்கப்படும் இந்த இயங்குதளம், உலகம் முழுவதும் பயன்பாட்டில் இருக்கக்கூடிய Windows மற்றும் MacOS அமைப்புகளுக்கு போட்டியாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த மென்பொருளின் முந்தைய பதிப்புகள் சில அரசுத் துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Windows மற்றும் MacOS அமைப்புகளின் செயல்பாடுகளை ரகசியமாக வைத்திருக்கும் மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் போன்று அல்லாமல், OpenKylin பயனர்கள் மென்பொருளின் குறியீடுகளை பெற முடியும். அத்துடன், தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
OpenKylin என்ற பெயர், பழம்பெரும் சீன புராணங்களில் உள்ள ஒரு புராணக்கதையை குறிக்கிறது. இது பிரபலமான ஓபன் சோர்ஸ் லினக்ஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- கல்விமுறை அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
- குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
உலகின் பல்வேறு நாடுகளிலும் பல காரணங்களுக்காக, ஆண்கள் மற்றும் பெண்கள் தற்கொலை செய்து வருவது குறித்து உளவியல் வல்லுனர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அதிலும் 15லிருந்து 35 வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண்களின் தற்கொலைகளின் அளவு அதிகரித்திருக்கிறது. இதற்கான காரணங்கள் ஆராயப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் இருக்கும் கடுமையான கல்வி முறையால் 35 வயதிற்குட்பட்டவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்வதாக செய்தி வெளியாகியுள்ளது.
சீன மாணவ-மாணவியர் எதிர்கொள்ளும் கல்விமுறை அழுத்தத்தை நிவர்த்தி செய்யும் வகையில் ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன்னணி ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர்.
நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையம் நடத்திய ஒரு ஆய்வில், 2010 முதல் 2021 வரை 5-வயது முதல் 14-வயது வரையிலான குழந்தைகளின் தற்கொலைகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10% அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.
இதே போல், 15-வயது முதல் 24-வயது வரையிலான தனிநபர்களிடையே தற்கொலை விகிதம் 2017 வரை 7% சரிவைச் சந்தித்தது. ஆனால் அடுத்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 20% உயர்வை எட்டியுள்ளது.
சீனாவில் வாழ்வில் ஒரு உயர்வான அந்தஸ்து பெற, கல்வியில் பெரும் வெற்றியடைய வேண்டிய கட்டாயம் இருப்பதால், அவர்களின் கவனம் முழுவதும் கல்வியில் நாட்டம் பெறுவதால் அவர்கள் மன நலனை பெரிதும் இது பாதித்துள்ளது. இதை களைய உடனடி கவனம் மற்றும் ஆக்கப்பூர்வமான பயிற்சிகள் தேவை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்களின் தற்கொலைகள் அதிகரிப்பதை தடுக்கும் வகையில், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினருக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு ஆராய்ச்சியாளர்கள் சீன அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
மற்ற நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றனர். மேலும் ஆரம்பகால அறிகுறிகள் மூலம் தற்கொலை நடத்தையை உடனடியாகக் கண்டறியவேண்டும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.
சீனாவில் இளைஞர்கள் நீண்ட காலமாக கடுமையான போட்டிகளை எதிர்நோக்குகின்றனர். கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் மற்றும் பட்டப்படிப்பு முடிந்ததும் நம்பிக்கைக்குரிய வேலை வாய்ப்புகளைப் பெற வேண்டும் என்ற விருப்பம் பெரிதாக மாறி அவர்களுக்கு பெருமளவு அழுத்தத்தை உண்டாக்குகிறது.
கோவிட்-19 தொற்றுநோய் காலம் 3 ஆண்டுகளாக நீடித்ததால், நாடு முழுவதும் ஏற்பட்ட முடக்கம் அழுத்தத்தை மேலும் தீவிரப்படுத்தியது.
வழக்கமாகவே சீனாவில் கல்லூரி வளாகங்கள், மாணவர்கள் அனுபவிக்கும் மன அழுத்தம் மற்றும் நிச்சயமற்ற தன்மையை கூட்டும் விதமாக, பல கட்டுப்பாடுகள் மற்றும் இடையூறுகளை தருகின்றன எனும் கருத்துகள் வலம் வந்தன.
இவையெல்லாவற்றையும் விட வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, இதர சவால்களையும் சேர்த்து, நம்பிக்கையின்மையை அதிகரிக்கச் செய்கிறது.
நாட்டின் வருங்கால தூண்கள் என கருதப்படும் இளம் வயதினர் அதிகளவில் தற்கொலை செய்து கொண்டு இறப்பதை தடுக்க, சீனா விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே உளவியலாளர்களின் கருத்தாக உள்ளது.
- மாடியிலிருந்து குதிப்பதை விட தனது தாயைப் பார்த்தே அதிகம் பயந்தான் என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
- அவனை உள்ளே செல்லும்படி வற்புறுத்தவே அவனது தாயார் தாக்கியதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
சீனாவில் சிறுவன் ஒருவன் தனது தாயிடம் இருந்து தப்பிக்க, 5வது மாடியில் இருந்து குதித்த துயர சம்பவம், சமூக ஊடகங்களில் பரவி பொதுமக்களின் கோபத்தை தூண்டியதுடன், நாட்டில் வலுவான 'குழந்தைகள் பாதுகாப்பு சட்டங்கள்' தேவை என விவாதத்தை கிளப்பியுள்ளது.
இந்த சம்பவம் கடந்த மாதம், கிழக்கு சீனாவில் உள்ள அன்ஹுய் மாகாணத்தில் நடந்திருக்கிறது.
வீட்டினுள் குச்சியால் தாக்கப்பட்ட ஒரு 6-வயது சிறுவன், குடியிருப்பு கட்டிடத்தில் உள்ள வெளிப்புற ஏசி மெஷினில் இருந்து குதித்தான். வீடியோவை பதிவு செய்த நபரும், அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், 'சிறுவனை அடிக்க வேண்டாம்' என்று அந்த தாயிடம் கெஞ்சுவதும், ஆனால் பேசிக்கொண்டிருக்கும்போதே, அச்சிறுவன் திடீரென்று குதிப்பதையும் காண முடிகிறது.
உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவன், அதிர்ஷ்டவசமாக பிழைத்து விட்டான். ஆனால், அவன் உடலில் பல இடங்களில் எலும்பு முறிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.
சிறுவன் விழுந்து விடப்போகிறான் என்ற கவலையால், அவனை உள்ளே செல்லும்படி வற்புறுத்தவே அவனது தாயார் அவனை தாக்கியதாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.
இந்த விளக்கம், மக்களின் கோபத்தை அதிகரித்திருப்பதாக சமூக வலைதளங்களில் வரும் பதிவுகளிலிருந்து தெரிகிறது.
ஒரு சில பயனர்கள், இந்த விளக்கத்தை நம்ப மறுத்துள்ளனர். உண்மையை மூடி மறைக்கும் செயல் என சிலர் பதிவிட்டுள்ளனர்.
"மாடியிலிருந்து குதிப்பதை விட அவன் தனது தாயைப் பார்த்தே அதிகம் பயந்தான்" என ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
"அவனை அடிப்பதை நிறுத்து என மக்கள் கத்துகிறார்கள், ஆனால் அந்த தாயார் நிறுத்தவில்லை" என்று மற்றொரு பயனர் கூறியிருக்கிறார்.
அச்சிறுவனின் குடும்பப்பெயர் யான் என்றும் அவரது தந்தை வேறு நகரத்தில் வேலை செய்வதாகவும், யான் தனது தாயுடன் வசிப்பதாகவும் தெரிய வந்திருக்கிறது.
சீனாவின் பிரபல சமூக வலைதளமான "வெய்போ"வில் (Weibo) சிறுவன் கீழே விழும் வீடியோ 1 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.
- ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது.
சீனாவில் பாம்பு கறி, தவளை கறி போன்றவற்றை உணவாக சாப்பிடுவதை கேள்வி பட்டிருக்கிறோம்.
தற்போது தைவானில் ஒரு ஓட்டலில் முதலையின் கால் வறுவலுடன் வழங்கப்படும் நூடுல்ஸ் பிரபலமாகி வருகிறது. இது தொடர்பாக இனையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் நூடுல்ஸ் நிரம்பிய கோப்பை ஒன்றில் வறுத்த முதலையின் கால் வைக்கப்பட்டுள்ளது.
அந்த உணவு இளம் பெண்ணுக்கு பறிமாற படுகிறது. அதை அந்த பெண் ருசித்து சாப்பிடுவதோடு, இது எனக்கு மிகவும் பிடித்துள்ளது என்கிறார். காட்ஜில்லா ராமென் என பெயரிடப்பட்டுள்ள இந்த உணவு வகையின் விலை இந்திய மதிப்பில் ரூ.3,900 ஆகும்.
- இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
- சீனாவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
சீனாவில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக 1980 முதல் 2015 வரை "ஒரு குழந்தை கொள்கை" நீடித்தது. இதனால் தம்பதியினர் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் தொகை வல்லுநர்கள், இந்த கொள்கை அமல்படுத்தப்பட்டபோதே இதன் விளைவாக, சீனா ஒரு பணக்கார நாடாக ஆவதற்கு முன்பே, "வயதாகி விடும்" என்று எச்சரித்து வந்தனர். அது தற்போது உண்மையாகி வருகிறது.
ஏனெனில், அங்கு தற்போது இளம்வயது பணியாளர்கள் கிடைப்பது அரிதாகி வருகிறது. மேலும், கடன்பட்டுள்ள உள்ளூர் அரசாங்கங்கள் முதியோர்களை கவனிக்க இளம்வயதினர் அதிகம் இல்லாததால், அவர்களுக்காக அதிகம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது.
இந்நிலையில் ட்ரிப்.காம் எனும் இணையதள வர்த்தக குழுமம், வரும் ஜூலை 1 முதல், தனது பணியாளர்கள் குழந்தை பெற்றுக்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் வெகுமதியை அறிவித்துள்ளது. அதாவது, பெற்றுக் கொள்ளும் ஒவ்வொரு குழந்தைக்கும் சுமார் ரூ.5,66,000 ($6,897.69) வழங்கப்போவதாக கூறியிருக்கிறது.
"அதிகளவு முதியோர்கள், குறைந்தளவு இளைஞர்கள்" என்ற ஒரு ஏற்றத்தாழ்வான நிலையுடன் போராடும் சீனாவில் இந்த நிலையை எதிர்கொள்ள செய்வதற்காக பெரிய தனியார் நிறுவனம் செய்யும் முதல் முயற்சியாகும்.
400 மில்லியன் பயனர்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஆன்லைன் பயண முகவர் நிறுவனங்களில் ஒன்றான இந்நிறுவனம், உலகெங்கிலும் உள்ள தனது ஊழியர்களுக்கு பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 5 ஆண்டுகளுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.1,14,000 ரொக்க மானியமாக வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
மேலும் இந்த திட்டத்திற்கு சுமார் 1 பில்லியன் யுவான் செலவாகும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிரிப்.காம் நிர்வாகத் தலைவர் ஜேம்ஸ் லியாங் கூறும்போது, "பல குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று நான் பரிந்துரைத்து வருகிறேன். ஒரு சாதகமான கருவுறுதல் சூழ்நிலையை உருவாக்குவதற்கு, தனியார் நிறுவனங்களாலும் தங்கள் பங்களிப்பை செய்ய முடியும்" என்றார்.
சீனாவில் 2021ல் பிறப்பு விகிதம் 1000 பேருக்கு 7.52 என இருந்த நிலையில், கடந்தாண்டு 1,000 பேருக்கு 6.77 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது.
தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்றும், ஆனால் கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபோதுகூட தம்பதிகள் குழந்தைகளை பெற்றுக்கொள்ள தயங்குகிறார்கள் எனவும் 2021ம் ஆண்டே அதிகாரிகள் தெரிவித்தனர்.
குழந்தை பராமரிப்பு செலவு மற்றும் கல்வி செலவுகள், குறைந்த வருமானம், பலவீனமான சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் பாலின சமத்துவமின்மை ஆகியவற்றை இதற்கான காரணிகளாக இளைஞர்கள் குறிப்பிடுகின்றனர்.
பொருளாதார பின்னணியில் வரும் ஆண்டுகளில் இந்தியாவில் மக்கட்தொகை எவ்வாறு அமையும் என்றும் ஆர்வலர்கள் உன்னிப்பாக கவனிக்கின்றனர்.
- பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, தனது வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
- மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.
சீன நாட்டின் கோடீஸ்வரர்களில் ஒருவர் லியாங் ஷி (56). இவர் அந்நாட்டின் பல்கலைகழகங்களில் சேருவதற்கான கவ்கவ் என்ற பொது நுழைவுத் தேர்வை தொடர்ந்து பலமுறை எழுதியும் தோல்வியடைந்துள்ளார். எனினும் விடா முயற்சியுடன் மிகக்கடினமான இந்த பொது நுழைவுத் தேர்வை 27வது முறையாக எழுதினார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இம்முறையும் லியாங் தோல்வி கண்டிருக்கிறார்.
மொத்தம் 750 புள்ளிகள் கொண்ட இந்த தேர்வில், தேர்ச்சிக்கு தேவையான குறைந்தளவு புள்ளிகள் 424. இதற்கு 34 புள்ளிகள் குறைவாக எடுத்து லியாங் தோல்வியடைந்தார்.
லியாங் ஷி, இந்த தேர்வில் வெற்றி பெற 1983ம் ஆண்டிலிருந்து பல முறை முயற்சி செய்து வருகிறார்.
தனது 16வது வயதில் 1983ம் வருடம் இந்த தேர்வில் முதல் முறையாக தோல்வி கண்ட லியாங், பல வருடங்களாக இந்த தேர்வை வருடாவருடம் எழுதிக்கொண்டே, பல இடங்களில் பல வேலைகளையும் செய்து வந்துள்ளார்.
90களின் மத்தியில் தனது சொந்த மர வியாபாரத்தை தொடங்கிய லியாங், பணக்காரராகி, கட்டுமான பொருட்கள் துறையிலும் கால் பதித்து பெரும் கோடீஸ்வரர் ஆனார்.
இந்த தேர்வுக்கு தன்னை தயார் செய்து கொள்ளும் காலங்களில், குடிப்பழக்கத்திலிருந்தும், தமக்கு பிடித்தமான விளையாட்டுக்களை விளையாடுவதிலிருந்தும் லியாங் விலகி இருப்பாராம்.
இந்த தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை தன்னை பாதித்திருப்பதாகவும், அடுத்த வருடம் மீண்டும் முயற்சிப்பது சந்தேகம் எனவும் லியாங் கூறியுள்ளார்.
சீனாவில் பள்ளி முடித்து கல்லூரிகளுக்கு செல்ல விரும்பும் மாணவர்களுக்கான, பிரபலமான இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது மிகவும் கடினம். இந்த தேர்வை, இவ்வருடம் கிட்டத்தட்ட 1 கோடியே 30 லட்சம் மாணவர்கள் எழுதினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- வாக்னர் படை மாஸ்கோவை நோக்கி திரும்பியதால் பதட்டமான நிலை ஏற்பட்டது
- பெலாரஸ் அதிபர் மத்தியஸ்தராக செயல்பட்டு ஆயுத கிளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்
ரஷிய- உக்ரைன் போரில் ஒரு திருப்பமாக ரஷியாவில் உள்ள தனியார் ராணுவ மற்றும் கூலிப்படை குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில் நடைபெற்ற ஒரு ஆயுதமேந்திய கிளர்ச்சி, அதன் தலைவருக்கும் ரஷிய அரசாங்கத்திற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் விளைவாக குறுகிய காலத்தில் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் ரஷியாவிற்கு எதிரான வாகனர் படை எழுச்சி பற்றிய தனது முதல் அதிகாரப்பூர்வ கருத்துகளில் சீனா, தேசிய ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதில் ரஷியாவை ஆதரிப்பதாக கூறியிருக்கிறது.
அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ள செய்திக்குறிப்பில், "தங்களது நட்பு அண்டை நாடாகவும், ஒரு புதிய சகாப்தத்தின் விரிவான மூலோபாய கூட்டுறவு பங்காளியாகவும், தனது நாட்டின் தேசிய ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் செழிப்பை காப்பதிலும் ரஷியாவை சீனா ஆதரிக்கிறது" என்று தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதி வரை ரஷியாவில் நடைபெற்ற கிளர்ச்சி குறித்து சீனா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை. இந்த விவகாரம் ரஷியாவின் "உள் விவகாரம்" என தெரிவித்து நிறுத்தி கொண்டது.
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒரு பொது மன்னிப்பு ஒப்பந்தத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்ததும், வேறு புகலிடம் தேடி செல்வதற்கு அக்கிளர்ச்சியின் தலைவர் எவ்ஜெனி பிர்கோசினும் ஒப்புக்கொண்டதையும் குறித்து சீனா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
நேற்று சீனாவின் வெளியுறவு மந்திரி கின் கேங்க், பீஜிங்கில் ரஷியாவின் துணை வெளியுறவு மந்திரி ஆண்ட்ரே ருடென்கோவை சந்தித்தார். இருவரும் சீன-ரஷிய உறவுகள் மற்றும் பொதுநலன் சார்ந்த சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் விவாதித்தனர்.
"தனது நாட்டின் நிலைமையை உறுதிப்படுத்த ரஷிய கூட்டமைப்பின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறது" என்று ரஷியா கூறியது.
உக்ரைன் படையெடுப்பிற்குப் பின்னர் ரஷிய-சீன மூலோபாய கூட்டாண்மை நெருக்கமாக வளர்ந்து வருவதால், இரு நாடுகளும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திர தொடர்புகளை அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷிய-உக்ரைன் போரில் சீனா தன்னை ஒரு நடுநிலைக் கட்சி என்று கூறிக்கொள்கிறது. ஆனால், ரஷியாவை கண்டிக்க மறுத்ததற்காகவும், ரஷியாவுடனான அதன் உறவுகளுக்காகவும் மேற்கத்திய நாடுகளால் சீனா விமர்சிக்கப்பட்டது.
- திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கசிவினால் தீ விபத்து
- 7 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்
சீனாவின் வடமேற்கு யின்சுவான் நகரத்தில் இயங்கிவரும் ஃபுயாங் பார்பெக்யு உணவகத்தில் நேற்று எல்.பி.ஜி. (LPG) எனப்படும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு கசிவினால் நடைபெற்ற வெடிவிபத்தில் 31 பேர் பலியாகியுள்ளனர். இதில் 7 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.
10-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் புகை மூட்டத்திற்கு இடையே தீயை அணைக்க போராடி வருவதை சம்பவ இடத்து வீடியோ காட்சிகளில் காண முடிந்தது. சீனாவில் 3-நாள் டிராகன் படகு திருவிழா விடுமுறை கொண்டாடப்பட இருக்கிற நிலையில் இந்த விபத்து அரங்கேறியுள்ளது.
சீன அதிபர் ஜி ஜின்பிங், ''காயமடைந்தவர்களின் சிகிச்சை நடவடிக்கைகளை முடுக்கிவிடவும், முக்கியமான துறைகளின் பாதுகாப்பிற்கு வலிமையூட்டவும், மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும்'' உத்தரவிட்டுள்ளார்.
சீனாவின் அவசரக்கால நிர்வாக மேலாண்மை அமைச்சரவை, 100-க்கும் மேற்பட்ட வீரர்களை 20 வாகனங்களில் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தது. உள்ளூர் அதிகாரிகள், உடனடியாக மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடவும், காயம்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கவும், உயிர் பலிகளை குறைக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க கோரியிருந்தது.
நேற்று நடைபெற்ற தீ விபத்தை கட்டுக்குள் கொண்டுவந்த வீரர்கள், இன்று காலை மீட்பு நடவடிக்கைகள் முடிவடைந்ததாக தெரிவித்துள்ளனர்.
- ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் நடைபெறுகிறது.
- இதில் தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி வெண்கலம் வென்றார்.
பீஜிங்:
ஆசிய சாம்பியன்ஷிப் வாள்வீச்சு போட்டி சீனாவில் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது. பின், 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை இத்தாலியில் நடைபெறுகிறது. இதில் இந்தியாவிற்காக தமிழ்நாடு வீராங்கனை பவானி தேவி பங்கேற்றார். சிறப்பாக விளையாடி காலிறுதியில் உலக சாம்பியனான மிஸாகி யமுராவை வீழ்த்தினார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற அரையிறுதியில் உஸ்பெகிஸ்தான் வீராங்கனையிடம் 14-15 என்ற புள்ளிக்கணக்கில் பவானி தோல்வியடைந்தார். இதன்மூலம் பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை ஒருவர் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வென்று சாதனை படைப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
- இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை தணிக்க அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி சீனா சென்றுள்ளார்.
- மந்திரி ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.
பீஜிங்:
அமெரிக்கா, சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாக இரு நாடுகளும் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வருகின்றன.
இதற்கிடையே, இந்தோனேஷியாவின் பாலியில் கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். அப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரியின் சீன பயணம் குறித்து பேசினர்.
அமெரிக்க வான்வெளியில் சீன உளவு பலூன் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்துக்கு பிறகு வெளியுறவு மந்திரியின் சீன பயணம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஆன்டனி பிளிங்கன் 2 நாள் பயணமாக பீஜிங் வந்துள்ளார். சீன வெளியுறவுத் துறை மந்திரி குவின் காங்கை சந்தித்துப் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்