search icon
என் மலர்tooltip icon

    சீனா

    • படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் நடத்திய விசாரணையில் பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    சீனாவின் ஹெபெய் மாகாணம் டச்செங் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் திடீரென தீ பிடித்தது. இதில், பட்டாசுகள் வெடித்து சிதறி அங்கிருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பட்டாசு விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 5 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், பட்டாசு கடை சட்ட விரோதமாக நடத்தி வந்தது தெரியவந்துள்ளது.

    • ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
    • கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது.

    சீனாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா வேரியண்டை கட்டுப்படுத்த அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை அதிகாரிகள் வேகமாக மேற்கொண்டு வருகின்றனர். ஜூன் மாத வாக்கில் புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு உச்சத்தை அடையும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதலே, ஒமிக்ரான் வேரியண்டின் புதிய XBB வகை கொரோனா திரிபு மூலம் அந்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை சுமார் 4 கோடி பேருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. வாரத்திற்கு அதிகபட்சம் 6.5 கோடி பேரை பாதிக்கும் என்று கூறப்படுகிறது.

    சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் ஜீரோ கொவிட் திட்டம் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, அந்நாட்டில் ஏற்படும் மிகப்பெரும் கொரோனா அலை இது ஆகும். முன்னதாக ஏற்பட்ட கொரோனா தொற்றின் போது ஒரே நாளில் அதிகபட்சமாக சுமார் 3.7 கோடி பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதன் மூலம் அந்நாட்டு சுகாதார துறை ஸ்தம்பித்தது.

    புதிய XBB திரிபு ஒமிக்ரான் BA.2.75 மற்றும் BJ.1 ஆகியவற்றின் ஹைப்ரிட் வேரியண்ட் ஆகும். இது BA.2.75 வேரியண்டை விட அதிவேகமாக பரவுவதோடு, நோய் எதிர்ப்பு திறனை வீரியம் கொண்டு அழிக்கும் திறன் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலம் XBB திரிபை கண்டறிய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். புதிய திரிபு வேகமாக செயல்பட்டு ஒருவருக்கு எளிதில் பாதிப்பை ஏற்படுத்தி விடும்.

    கொரோனா தொற்றின் புதிய திரிபு தேசத்தில் மிகப்பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், இதனை எதிர்கொள்ள சீனா தயார் நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியன் வென்றால்.
    • 19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம்.

    உலகக் கோப்பை வில்வித்தை (நிலை 2) போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது.

    இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, தென் கொரியாவின் கிம் ஜோங்ஹோ- ஓ யோயூன் இணையை எதிர்கொண்டது.

    விறுவிறுப்பான இந்த போட்டியில் ஓஜஸ் டீடேல்- ஜோதி சுரேகா வென்னம் ஜோடி 156-155 என்ற புள்ளி கணக்கில் தென்கொரிய இணையை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. கடந்த மாதம் துருக்கியில் நடந்த உலகக் கோப்பை (நிலை 1) போட்டியிலும் இந்திய இணை தங்கம் வென்று இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் காம்பவுண்ட் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பிரதமேஷ் ஜவகர் 149-148 என்ற புள்ளி கணக்கில் 2 முறை உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான நெதர்லாந்தின் மைக் கிளாசருக்கு அதிர்ச்சி அளித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார்.

    19 வயதான பிரதமேஷ் ஜவகர் உலகக் கோப்பை போட்டியில் வென்ற முதல் பதக்கம் இதுவாகும்.

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.
    • சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது.

    உலகக் கோப்பை வில்வித்தை 2ம் நிலைக்கான போட்டி சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவின் அரைஇறுதியில் இந்தியாவின் ஓஜாஸ் டீடேல்-ஜோதி சுரேகா வென்னம் ஜோடி, இத்தாலியின் எலிசா ரோனிர்-எலியா பிரிக்னென் இணையை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டம் 157-157 என்ற புள்ளி கணக்கில் சமநிலையில் முடிந்தது.

    இதைத்தொடர்ந்து நடந்த சூட்-அவுட்டில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்தது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, தென்கொரியாவை சந்திக்கிறது.

    ரிகர்வ் கலப்பு அணிகள் பிரிவில் 2-வது சுற்றில் நேரடியாக களம் கண்ட இந்தியாவின் திரஜ் பொம்மதேவரா-சிம்ரன்ஜீத் கவுர் ஜோடி 2-6 என்ற கணக்கில் இந்தோனேஷியா இணையிடம் தோல்வி கண்டு ஏமாற்றம் அளித்தது.

    • வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீனா-வியட்நாம் எல்லையில் நேற்று நடந்த சாலை விபத்தில் ஒன்பது வியட்நாம் குடிமக்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

    சீனாவின் குவாங்சி ஜூவாங் பிராந்தியம் ஜிங்சி நகரில் உள்ள மலைப்பகுதியில் வேன் சென்றுக் கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்த நிலையில், 3 பேரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவை சேர்ந்த ஓட்டுனர், உதவியாளர், இரண்டு வியட்நாம் பிரஜைகள் ஆவர்.

    சாலை விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது.
    • பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார்.

    பீஜிங் :

    சீன தலைநகர் பீஜிங்கில் சியாகுவோ என்ற காமெடி நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஒரு தியேட்டரில் நிகழ்ச்சி நடந்தது. இதில் பிரபல காமெடி நடிகர் லீ ஹாவ்ஷி கலந்து கொண்டு நடித்தார். அப்போது அவர் சீன ராணுவம் குறித்து அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நிகழ்ச்சியை நடத்திய சியாகுவோ நிறுவனத்துக்கு சுமார் ரூ.16 கோடி அபராதம் விதித்து அந்த நாட்டின் அரசாங்கம் உத்தரவிட்டது.

    இதற்கிடையே இந்த தவறுக்கு மன்னிப்பு கோரிய லீ ஹாவ்ஷி தனது அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்த போவதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அனைத்து நிகழ்ச்சிகளில் இருந்தும் அவரை சஸ்பெண்ட் செய்ததாக சியாகுவோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு அவரது ரசிகர்கள் `இது காமெடியை மேலும் ஒடுக்க வழிவகுக்கும்' என கூறி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    • இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து மூழ்கியது.
    • கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர்.

    சீனாவுக்கு சொந்தமான மீன்பிடி கப்பல் ஒன்று இந்தியப் பெருங்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல் சீனாவை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. அப்போது, இந்தியப் பெருங்கடலின் மையப் பகுதிக்கு அருகே கப்பல் சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து மூழ்கியது.

    இதில், அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 17 மீனவர்கள், இந்தோனேசியாவை சேர்ந்த 17 மீனவர்கள் மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டின் மீனவர்கள் 5 பேர் என 39 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் மாயமாகி உள்ளனர்.

    இதனிடையே மாயமானவர்களை தேடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு மீட்பு குழுக்களுக்கு சீன அதிபர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், சர்வதேச கடல்சார் மற்றும் மீட்பு உதவிகளை நாடி சீன அதிபர் அழைப்பு விடுத்ததை அடுத்து, ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளின் கடற்படைகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
    • முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    பீஜிங்:

    சீனாவில் ஜின்பிங் தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியில் உள்ளது. இங்கு ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கி விசாரணை மேற்கொண்டார். ஊழல் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து ஏராளமான புகார்கள் வந்தது.

    இந்த புகார்களின் அடிப்படையில் ஊழல் வழக்கில் 1 லட்சத்து 10 ஆயிரம் அதிகாரிகள் சிக்கியதாக இந்தோ- பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டில் மாநில அளவிலான அதிகாரிகள், துணை மாநில அதிகாரிகள், ராணுவகமிஷன் உறுப்பினர்கள், டஜன்கணக்கான மந்திரிகள் அலுவலக அதிகாரிகள் என பலர் சிக்கி இருப்பதாக அந்த அறிக்கை தெரிவித்து உள்ளது. இதில் முக்கிய அதிகாரிகளும் அடங்குவர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

    முதல் காலாண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையில் 7 லட்சத்து 76 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில் 2 லட்சத்து 31 ஆயிரம் புகார்கள் தொடர்பானது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

    • சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார்.
    • தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    பீஜிங்:

    செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடுத்த கட்ட புரட்சியாக கருதப்படுவது சாட்ஜிபிடி.

    இங்கு சாட் ஜி.பி.டி. எனும் செயற்கை நுண்ணறிவு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு துல்லியமாக, விரிவாக பதில்களை அளித்து விடும்.

    இது தொழில்நுட்பத் துறையில் புரட்சியை ஏற்படுத்தும் என்று கூறினாலும் அதில் அதிக ஆபத்துகளும் உள்ளன என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் சாட் ஜி.பி.டி.யை தவறாக பயன்படுத்தியதற்காக சீனாவில் முதல் முதலாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    சீனாவின் வடமேற்கு கன்சு மாகாணத்தில் ரெயில் விபத்தில் 9 பேர் பலியான தாக இணையத்தில் போலி செய்தி ஒன்று பரவியது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். போலி செய்தியை பரப்பியதாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஹாங் என்ற குடும்பப் பெயர் கொண்ட சந்தேக நபர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாட் ஜி.பி.டி. மூலம் பொய்யான தகவல்களை தயாரித்ததற்காக கைது செய்யப்பட்டு உள்ளார் என்றனர்.

    தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதை ஒழுங்கு படுத்துவதற்கான விதிகள் சீனாவில் கடந்த ஜனவரியில் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன.

    அதன்பிறகு தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்தியது தொடர்பாக முதல் முறையாக கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஹாங், போலி செய்திகளை உருவாக்கி அவற்றை தனது கணக்குகளில் பதிவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.

    • தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.
    • வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன.

    பீஜிங்:

    தென்சீன கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு தைவான், பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே முதல் ஆசியான்-இந்தியா கடற்படை போர் பயிற்சி தென் சீனக்கடலில் கடந்த 2 நாட்களாக நடந்து முடிந்தது.

    இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, புனே, வியட்நாம் ஆகிய நாடுகள் இணைந்து ஆசியான்-இந்தியா கடல்சார் பயிற்சியை நடத்தின. இதில் அந்நாடுகளின் போர் கப்பல்கள் பங்கேற்றன.

    இந்த நிலையில் தென்சீன கடல் பகுதியில் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சியில் சீன கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடுருவ முயற்சி செய்துள்ளன.

    வியட்நாமின் பிரத்யேக பொருளாதார மண்டல பகுதியை சீன கப்பல்கள் நெருங்கி வந்தன. ஆனால் ஆசியான்-இந்திய கடற்படை பயிற்சிகளை தடுக்கவில்லை. சீன விமானங்களும் அப்பகுதியில் பறந்து உள்ளன.

    இதன்மூலம் ஆசியான்-இந்தியா போர் பயிற்சியை சீன கண்காணிக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்திய பாதுகாப்பு துறை வட்டாரங்கள் கூறும்போது, ஆசியான்-இந்தியா பயிற்சிகளை பாதிக்கும் அளவிற்கு சீன கப்பல்கள் எங்கும் வர வில்லை. எந்த எச்சரிக்கையும் எழுப்புவதற்கு அவசியம் ஏற்படவில்லை. ஆனாலும் சீன கப்பல்கள் கவனமாக கண்காணிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் சாங்கி கடற்படை தளத்தில் நடந்த இப்பயிற்சியில் இந்தியாவின் ஐ.என்.எஸ். டெல்லி மற்றும் ஐ.என்.எஸ் சத்புரா கப்பல்கள் பங்கேற்றன.

    • தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது.
    • சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    பீஜிங்:

    தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் ஒருபகுதியாக சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி தைவானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனையடுத்து தைவான் வான் எல்லைக்குள் சீனா தனது போர் விமானங்களை பறக்க விட்டு அங்கு பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறு அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தார். மேலும் சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கியுள்ளன.
    • நிலநடுக்கத்தால் 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

    சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுன்னான் மாகாணம் பவோஷான் நகரில் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. நிலநடுக்கத்தின்போது சில வினாடிகளுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அதிர்ந்த மக்கள் வீட்டைவிட்டு வெளியேறி அலறியடித்துக் கொண்டு வீதிகளில்தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ×