search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரான்ஸ் கலவரம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும்: ஹாலண்டே சொல்கிறார்
    X

    பிரான்ஸ் கலவரம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவும்: ஹாலண்டே சொல்கிறார்

    • 17 வயது சிறுவன் போலீசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டதை அடுத்து கலவரம்
    • கலவரத்தை பயன்படுத்தி கடைகள் சூறையாடப்பட்டன

    பிரான்ஸ் நாட்டில் இரு வாரங்களுக்கு முன் நேஹல் மெர்சவுக் என்ற 17 வயது சிறுவன் தனது காரை நிறுத்தாமல் சென்றதாக கூறி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவன் பலியானான். இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது.

    சில மணி நேரங்களில் அந்நாடு முழுவதும் பெரும் கலவரம் வெடித்து, வன்முறை அதிகரித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்து தரப்பினரும் போராடி, தற்போது நிலைமை சீரடைந்து அமைதி திரும்புகிறது.

    இதற்கிடையே, பிரான்ஸில் 2012 முதல் 2017 வரை அதிபராகவும் முன்னாள் சோசலிஸ்ட் கட்சியின் தலைவராகவும் இருந்த பிராங்கோய்ஸ் ஹாலண்டே, பிரான்ஸ் நாட்டில் நடந்த கலவரங்கள் போல் பிரிட்டன் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடக்கலாம் என எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு காவல் அதிகாரியால் அந்த சிறுவன் கொல்லப்பட்டதன் மூலம் இந்த கலவரம் தூண்டப்பட்டதாக கூறப்பட்டது. ஆரம்பத்தில் இது தூண்டப்பட்டிருந்தாலும், பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளால் இது மோசமடைந்தது என்பதே உண்மை.

    சமூக ஊடகங்களால், மிக வேகமாக ஒரு "டோமினோ விளைவு" (ஒரு நிகழ்வின் தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்வுகள் ஒரு சங்கிலி போல் உருவாகி ஏற்படுத்தும் மொத்த விளைவு) ஏற்பட்டு கலவரம் பரவியது. சமூக ஊடகங்கள் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுவதால், இதுபோன்ற கலவரங்களுக்கு எல்லைகள் கிடையாது.

    இவை எந்த நாட்டிலும் உருவாகி வேறொரு நாட்டிற்கும் பரவலாம். தற்போது இந்த கலவரம் காரணமாக எங்களை (பிரான்ஸ்) சற்று கேலியுடன் பார்க்கும் பிற நாட்டவர்கள், அவர்கள் நாட்டிலும் இதுபோன்று நடக்கலாம் என்பதை உணர வேண்டும். கலவரங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள், பாரிஸ் நாட்டின் லியோன் மற்றும் மார்செய்ல்ஸ் நகரங்களில் மட்டும் பரவவில்லை.

    அவை பிரிட்டன், ஜெர்மனி மற்றும் அமெரிக்கா போன்ற பிற நாடுகளின் பெருநகரங்களிலும் பரவுகின்றன. சாதாரண நேரங்களில் வாங்க முடியாத பொருட்களை பலர் கலவர நேரங்களில் எளிதாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தெருக்களில் இறங்கி வன்முறையில் ஈடுபடுகின்றனர்.

    பணவீக்கம் மற்றும் கோவிட் லாக்டவுன் காரணங்களால் பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளதால், சில இளைஞர்களிடையே இந்த வெறி அதிகரித்திருக்கிறது.

    இவ்வாறு ஹாலண்ட் கூறினார்.

    நேஹலின் இறுதிச்சடங்கை தொடர்ந்து 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசி காவல்துறை ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்கியது.

    அந்த சிறுவன் தன் மீது மோதும் விதமாக காரை ஓட்டியதால் அவரை துப்பாக்கியால் சுட நேர்ந்ததாக அதிகாரி கூறியதாக காவல்துறையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால், இந்த நிகழ்வுகளின் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி அது தவறான தகவல் என்பது உறுதியானது.

    2011-ல் 29 வயதான மார்க் டுக்கன் என்பவரை இங்கிலாத்தின் டோட்ட்ன்ஹாம் பகுதியில் காவல்துறையினர் சுட்டுக்கொன்றதையடுத்து லண்டன் மற்றும் பிற நகரங்களில் தொடர்ந்து கலவரம் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×