search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத ராணுவச் சட்டம் உள்ளது- இம்ரான் கான் குற்றச்சாட்டு
    X

    பாகிஸ்தானில் அறிவிக்கப்படாத ராணுவச் சட்டம் உள்ளது- இம்ரான் கான் குற்றச்சாட்டு

    • பதற்றம் நிறைந்த மாகாணங்களில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.
    • தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கடந்த 9ம் தேதி ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராவதற்காக இஸ்லாமாபாத் ஐகோர்ட்டுக்கு வந்தபோது, அவரை துணை ராணுவப்படை ரேஞ்சர்கள் திடீரென கைது செய்து அழைத்துச்சென்றனர். இதையடுத்து இம்ரான் கான் ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ராணுவ நிலைகள் மற்றும் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. போலீசாருடன் பல்வேறு இடங்களில் மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். இதனால் பதற்றமான சூழல் உருவானது. இம்ரான் கானின் பிடிஐ கட்சி தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். பதற்றம் நிறைந்த மாகாணங்களில் சிவில் நிர்வாகத்திற்கு உதவுவதற்காக ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், ராணுவம் குவிக்கப்பட்டதற்கு எதிராக இம்ரான் கான் இன்று உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். பஞ்சாப், கைபர் பாக்துன்க்வா, பலுசிஸ்தான் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில மாகாணங்களில் அரசியலமைப்புச் சட்டம் 245ஐ பயன்படுத்திய ஷெபாஸ் ஷெரீப்பின் அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இம்ரான் கான் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

    அதில், நாட்டின் சில பகுதிகளில் ராணுவச் சட்டம் போன்ற நிலைமை இருப்பதாகவும், தனது கட்சிக்கு எதிரான ஒடுக்குமுறை குறித்து நீதிமன்றம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் இம்ரான் கான் குறிப்பிட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அரசியலமைப்பின் 245வது பிரிவின் கீழ், நாட்டைப் பாதுகாக்க சிவில் நிர்வாகத்திற்கு உதவ ராணுவத்தை அழைக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×