search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹமாஸ் அமைப்பினர் மீது முப்படை தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல்
    X

    ஹமாஸ் அமைப்பினர் மீது முப்படை தாக்குதலுக்கு தயாரான இஸ்ரேல்

    • காசா மீது இன்று 9-வது நாளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.
    • இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, தனது போர் கப்பலை அனுப்பியது.

    டெல்அவிவ்:

    இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையேயான மோதல் நீண்டகாலமாக நீடித்து வரும் நிலையில் தற்போது போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன.

    கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். மேலும் இஸ்ரேலுக்குள் ஊடுருவியும் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். பலரை பிணை கைதிகளாக பிடித்து சென்றனர்.

    இதையடுத்து போர் பிரகடனத்தை அறிவித்த இஸ்ரேல் பதிலடி தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் அமைப் பினர் கட்டுப்பாட்டில் உள்ள காசாமுனை மீது ஏவுகணைகள் வீசப்பட்டன. இரு தரப்பிலும் இதுவரை அப்பாவி பொதுமக்கள் உள்பட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர்.

    ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பிணை கைதிகளை இஸ்ரேல் ராணுவம் மீட்டது. இதையடுத்து போர் தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் ராணுவம் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டது. எல்லையில் 3 லட்சம் வீரர் கள் குவிக்கப்பட்டனர். தரைவழி தாக்குதலுக்கு தயாரான நிலையில் வடக்கு காசாவில் உள்ள 11 லட்சம் மக்கள் உடனே வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் வலியுறுத்தியது.

    இதையடுத்து வடக்கு காசாவில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வெளியேறி தெற்கு காசாவுக்கு சென்றனர். இன்னும் ஏராளமானோர் வெளியேறிக்கொண்டு இருக்கிறார்கள்.

    மக்கள் வெளியேறுவதற்காக இஸ்ரேல் விதித்த காலக்கெடு முடிவடைந்ததையடுத்து எந்நேரத்திலும் தரைப்படை புகுந்து காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மீது போர் தாக்குதல் நடத்தும் சூழல் நிலவி வருகிறது. இதனால் மக்கள் அவசர அவசரமாக வெளியேறி வருகிறார்கள்.

    நேற்று மக்கள் வெளியேறுவதற்காக குறிப்பிட்ட பகுதியில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. இந்த நிலையில் இன்று 2-வது பாதுகாப்பான வழிதடத்தை இஸ்ரேல் அறிவித்துள்ளது. சாலா ஏ-தின் சாலை பகுதிகளில் தாக்குதல் நடத்த மாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் இஸ்ரேலின் முப்படைகளும் போருக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது. காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேலின் தரைப்படை, தரைவழி கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளும் தயாராக இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    முப்படைகளும் காசாவில் உள்ள எல்லையில் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள். தாக்குதலுக்கான உத்தரவு கிடைத்ததும் முப்படைகளும் தங்களது தாக்குதல்களை தீவிரப்படுத்தும் நிலையில் உள்ளன.

    இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, "வடக்கு காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேறியவுடன் இஸ்ரேல் குறிப்பிடத்தக்க ராணுவ நடவடிக்கைகளை தொடங்கும். பொதுமக்கள் வெளியேறுவதில் கவனம் செலுத்த வேண்டியதும் முக்கியமான விஷயம். எனவே நாங்கள் அவர்களுக்கு காலக்கெடுவை மிகவும் தாராளமாக கொடுத்துள்ளோம் என்பதை காசாவில் உள்ளவர்கள் அறிவது மிக முக்கியம். அவர்களுக்கு போதுமான எச்சரிக்கை வழங்கி உள்ளோம்.

    அவர்களிடம் நாங்கள் கூறுவது ஒன்றுதான். உங்களது பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள். தெற்கு பகுதிக்கு உடனே செல்லுங்கள். உங்களது உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள். ஹமாஸ் விரிக்கும் வலையில் விழாதீர்கள்" என்றார்.

    இதன் மூலம் வடக்கு காசாவில் உள்ள பொதுமக்கள் வெளியேறியதை உறுதி செய்தவுடன் தாக்குதலை தொடங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. நேற்று முன்தினம் இஸ்ரேல் விதித்திருந்த காலக்கெடு நேற்று இரவுடன் முடிந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் குடும்பம் குடும்பமாக வெளியேறி உள்ளனர்.

    இதனால் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேலின் முப்படைகளும் தாக்குதலை எந்த நேரத்திலும் தொடங்கலாம். இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் மும்முனையில் இருந்து தாக்குதல் நடத்தியதை விட அதிபயங்கர தாக்குதலை நடத்த இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.

    இதற்கு முன்னோட்டமாக நேற்று இஸ்ரேல் ராணுவம் காசாவுக்குள் புகுந்து சிறிய அளவிலான தாக்குதலை நடத்தியது.

    ஏற்கனவே இஸ்ரேல் ராணுவத்துக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தையும் ராணுவம் திரும்ப பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு போர் முனைக்கு சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். எல்லை பகுதிக்கு சென்ற அவர் ராணுவ வீரர்களிடம் கூறும்போது, "வரும் நாட்களில் வர இருக்கும் சம்பவங்களுக்கு நீங்கள் தயாரா? இன்னும் நிறைய சம்பவங்கள் வர போகிறது" என்று ராணுவ வீரர்களிடம் அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவம் காசா மீது தாக்குதலை தொடங்கியதாக தகவல் வெளியானது. ஆனால் அதுபற்றி இஸ்ரேல் ராணுவம் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அதே வேளையில் காசா மீது இன்று 9-வது நாளாக இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது.

    இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அமெரிக்கா, தனது போர் கப்பலை அனுப்பியது. இந்த நிலையில் 2-வது விமானம் தாங்கி கப்பலை மத்திய தரைக்கடலுக்கு அனுப்பி உள்ளது.

    இது தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறும்போது, கிழக்கு மத்திய தரை கடல் பகுதிக்கு 2-வது போர் கப்பலை அனுப்ப பென்டகன் உத்தரவிட்டு உள்ளது.

    அமெரிக்க போர்க்கப்பல்கள் காசாவில் சண்டையிடுவதற்கோ அல்லது இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளில் பங்கு பெறுவதற்கோ அல்ல ஈரான் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத்தினரின் நடவடிக்கைகளை தடுப்பதற்காக அனுப்பப்பட்டுள்ளது.

    மேலும் மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு போர் விமானங்கள் மற்றும் தரை வழி தாக்குதல் ஜெட் விமானங்களை அனுப்புவதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.

    இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஜோபைடன் இஸ்ரேல் பிரதமருடன் தொலைபேசியில் பேசினார். அதே போல் பாலஸ்தீனத்தின் மேற்குகரை அதிபர் அப்பாசுடனும் பேசினார். அப்போது, காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்தார். மேலும் பொதுமக்களை காப்பதற்கான உதவிகள் அளிக்கப்படும் என்றும் கூறினார்.

    காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த உள்ள நிலையில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

    சவூதி அரேபியாவின் அழைப்பின் பேரில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கை மற்றும் மோசமடைந்து வரும் நிலைமைகள் குறித்து கூட்டத்தில் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    வடக்கு காசாவில் இருந்து மக்கள் பெரிய அளவில் இடம் பெயர்வது மிகவும் தீவிரமான மனிதாபிமான ரீதியிலான பாதிப்புக்கு வழி வகுக்கும் என்று ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது.

    உலக சுகாதார அமைப்பு கூறும்போது, "வடக்கு காசாவில் உள்ள ஆஸ்பத்திரிகளில் இருந்து நோய்வாய்ப்பட்ட மற்றும் காயம் அடைந்தவர்களை வெளியேற்றுவது அவர்களுக்கு மரண தண்டனை அளிப்பதற்கு சமம். நோயாளிகள், சுகாதார பணியாளர்களை கட்டாயமாக வெளியேற்றுவது மனிதாபிமான மற்றும் பொது சுகாதார பேரழிவை மேலும் மோசமாக்கும் என்று தெரிவித்துள்ளது.

    Next Story
    ×