search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹிஸ்புல்லா வேட்டையில் இஸ்ரேல்.. லெபனானில் ஒரே நாளில் 105 பேர் பலி.. நஸ்ரல்லா உடல் மீட்பு - அப்டேட்ஸ்
    X

    ஹிஸ்புல்லா வேட்டையில் இஸ்ரேல்.. லெபனானில் ஒரே நாளில் 105 பேர் பலி.. நஸ்ரல்லா உடல் மீட்பு - அப்டேட்ஸ்

    • ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட தலைவர்கள் 20 பேர் இஸ்ரேல் தாக்குதலில் பலி
    • நஸ்ரல்லாவின் உடலில் நேரடி காயங்கள் ஏதும் இல்லை என்று தெரியவந்துள்ளது.

    லெபனான் தாக்குதல்

    பாலஸ்தீன போருக்கு எதிராக லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திவந்த ஹிஸ்புல்லா அமைப்பை ஒழித்துக்கட்ட இஸ்ரேல் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த வாரம் ஹிஸ்புல்லாவினரின் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் உள்ளிட்ட தொலைத்தொடர்பு கருவிகள் வெடித்துச் சிதறியதால் 35 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 4000 லெபனானியர்கள் படுகாயமடைந்தனர்.

    தலைவர் கொலை

    தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக லெபனானில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 1000த்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த வெள்ளிக்கிழமை தலைநகர் பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைமையகம் உட்பட பல்வேறு கட்டடங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் அவரது மகள் ஜைனப் உயிரிழந்தனர்.

    வேருக்கு தீ

    ஹிஸ்புல்லாவை வேரோடு அழிக்கச் சூளுரைத்துள்ள இஸ்ரேல் அவ்வமைப்பின் முக்கிய கமாண்டர்களையும் வரிசையாகக் கொலை செய்து வருகிறது.நேற்றைய தினம் ஹிஸ்புல்லா உயர்மட்ட கமாண்டர் நபில் கவுக் தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது. மேலும் ஹிஸ்புல்லாவின் உயர் மட்ட தலைவர்கள் ஃபுவாட் ஷுகுர் [ Fuad Shukr], இப்ராகிம் அகில் [Ibrahim Aqil] உட்பட 20 பேரை இஸ்ரேல் கொலை செய்துள்ளது.

    அல்லாடும் மக்கள்

    இஸ்ரேலின் இந்த தொடர் தாக்குதலால் லெபனானில் போர்க்கள சூழல் உருவாகியுள்ளது. 118,000 வரையிலான மக்கள் தங்கள் இடங்களை விட்டு வெளியேறி வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடற்கரையோரங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் பலர் அண்டை நாடான சிரியாவுக்குள் செல்ல எல்லைப் பகுதியில் குவிந்துள்ளனர்.

    ஒரே நாள்

    இந்நிலையில் யாருக்கும் அவகாசம் கொடுக்காமல் இஸ்ரேல் தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் லெபனான் தலைநகர் பெய்ரூட், சிடோன் [Sidon] உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 105 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பிரான்ஸ் அமைச்சர் வருகை

    ஒட்டுமொத்தமாக உயிரிழப்பு படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை 6000 த்தை கடந்துள்ளது இன்றைய தினமும் இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து வரும் நிலையில் பிரான்ஸ் நாட்டின் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பேரோட் லெபனான் வருகை தந்துள்ளது சர்வதேச அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

    லெபனானில் இருந்த பிரஞ்சுக்காரர்கள் சிலர் இஸ்ரேல் தாக்குதலில் கொள்ளப்பட்டதை அடுத்து அவரின் இந்த வருகை நிகழ்ந்துள்ளது. இன்றய தினம் அவர் லெபனான் பிரதமர் நஜிப் மிகாத்தி - யை சந்திக்க உள்ளார். மேலும் லெபனானுக்கு பிரான்ஸ் சார்பில் மனிதாபிமான முறையில் வழங்கப்படும் 11.5 டன்கள் உதவிப் பொருட்களை மேற்பார்வையிட உள்ளார்.

    நஸ்ரல்லாவின் உடல்

    இதற்கிடையே பெய்ரூட்டில் உயிரிழந்த தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் உடலை ஹசிபுல்லாவினர் மீட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நஸ்ரல்லாவின் உடலில் நேரடி காயங்கள் ஏதும் இல்லை எனவும், குண்டுவெடிப்பின்போது அதிர்ச்சியினால் ஏற்பட்ட அழுத்தத்தால் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×