search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    பிரான்சில் சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்: 24 போலீசார் படுகாயம்
    X

    போராட்டத்தின்போது தீ வைத்து கொளுத்தப்பட்ட கார்களையும், அதில் இருந்து கரும்புகை வெளியேறியதையும் படத்தில் காணலாம்.

    பிரான்சில் சிறுவன் கொல்லப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம்: 24 போலீசார் படுகாயம்

    • பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    பாரீஸ் :

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள நாந்த்ரே என்ற இடத்தில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதற்கான சிவப்பு நிற சிக்னல் போடப்பட்டிருந்தது.

    ஆனால் அதனை பொருட்படுத்தாமல் அந்த வழியாக கார் ஒன்று வேகமாக சென்றது. காரை நிறுத்தும்படி போலீசார் கூறியும் அந்த கார் நிற்கவில்லை. இதனால் அந்த காரை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். கார் டிரைவர் மீது துப்பாக்கி குண்டு பாய்ந்ததால் நிலை தடுமாறி ஓடிய கார் சற்று தள்ளி நின்றது.

    இதனையடுத்து கார் அருகே சென்று பார்த்த பிறகு காரை ஓட்டி சென்றது ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், போலீசார் சுட்டதில் அவன் காரிலேயே உயிரிழந்ததும் தெரிய வந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் சிறுவன் கொல்லப்பட்ட நாந்த்ரே பகுதியில் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

    பின்னர் இந்த போராட்டம் தலைநகர் பாரீஸ், நாந்த்ரே, துலூஸ், லில்லி உள்ளிட்ட நகரங்களுக்கும் பரவியது. அப்போது பல இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதன்படி போலீஸ் நிலையங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற அரசுக்கு சொந்தமான பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன.

    மேலும் கார்கள், குப்பைத்தொட்டிகள் போன்றவை தீ வைத்து கொளுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் போர்க்களம் போல காட்சி அளித்து வருகிறது.

    இந்த வன்முறையின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. அப்போது சரமாரியாக கற்களை எறிந்து தாக்கியதில் 24 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதனால் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் போலீசார் கலைத்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் தலைநகர் பாரீஸ், சம்பவம் நடந்த நாந்த்ரே உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது.

    Next Story
    ×