search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டேரா ராணுவ தளத்தில் தற்கொலை படை தாக்குதல் - 20க்கும் மேல் உயிரிழப்பு
    X

    டேரா ராணுவ தளத்தில் தற்கொலை படை தாக்குதல் - 20க்கும் மேல் உயிரிழப்பு

    • 2022 ஆண்டை விட 2023ல் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன
    • பாகிஸ்தானின் குற்றச்சாட்டுகளை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது

    2021ல் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறியதும், அந்நாட்டின் அதிகாரம் பயங்கரவாத அமைப்பினரான தலிபான் வசம் வீழ்ந்தது.

    இதை தொடர்ந்து, அந்நாட்டின் பல பயங்கரவாத அமைப்புகள், ஆப்கானிஸ்தான் நாட்டையொட்டி உள்ள பாகிஸ்தான் எல்லை பிராந்தியங்களில் பாகிஸ்தானுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.

    குறிப்பாக, தெஹ்ரிக்-ஏ-தலிபான் பாகிஸ்தான் (TTP) எனும் தலிபானின் உள்ளூர் அமைப்பு பாகிஸ்தானுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது.

    2023 ஜனவரி மாதம் பாகிஸ்தானின் கைபர்-பக்துன்க்வா பிராந்திய பெஷாவர் நகரில் உள்ள மசூதி வளாகத்தில் இந்த அமைப்பினர் நடத்திய தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உட்பட 100க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 2023 முற்பகுதியில் நடைபெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்கள் மற்றும் வெடிகுண்டு சம்பவங்கள் 2022ல் நடைபெற்றதை விட 80 சதவீதம் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    பயங்கரவாத அமைப்புகளை ஆப்கானிஸ்தான் ஊக்குவித்து புகலிடம் அளிப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால், இதை ஆப்கானிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்நிலையில், இன்று கைபர்-பக்துன்க்வா பிராந்தியத்தில், டேரா இஸ்மாயில் கான் நகரிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டராபான் (Daraban) டவுனில் ராணுவ தளத்தில் உள்ள காவல்நிலைய கேட்டின் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றிய ஒரு வாகனத்தை செலுத்தி வந்து வெடிக்க செய்து, பெரும் சேதத்தினை விளைவித்தனர். இத்தாக்குதலின் போது பல ராணுவ வீரர்கள் உறங்கி கொண்டிருந்தனர் என தெரிகிறது.

    தற்போதைய தகவல்களின்படி உயிரிழப்பு எண்ணிக்கை குறைந்தபட்சம் 23 வரை உள்ளதாக தெரிகிறது. மேலும் 34 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் டேரா இஸ்மாயில் கான் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராணுவ தளத்தில் 3 அறைகள் பலத்த சேதமடைந்துள்ளதால், இடிபாடுகளை நீக்கும் போது உயிரிழந்தோர் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என தெரிகிறது.

    தெஹ்ரிக்-ஏ-ஜிஹாத் பாகிஸ்தான் அமைப்பினர் இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளதாக தெரிகிறது.

    இதுவரை இந்த தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

    Next Story
    ×