search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ராணுவ மரியாதையுடன் பர்வேஸ் முஷாரப் உடல் அடக்கம்- இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு
    X

    ராணுவ மரியாதையுடன் பர்வேஸ் முஷாரப் உடல் அடக்கம்- இறுதிச்சடங்கில் உயர் அதிகாரிகள் பங்கேற்பு

    • இறுதிச்சடங்கில் அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை.
    • ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகள் பங்கேற்றனர்

    கராச்சி:

    பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் (வயது 79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். நீண்ட காலமாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ம் தேதி அவரது உயிர் பிரிந்தது.

    இதையடுத்து அவரது உடல் சிறப்பு விமானம் மூலம் துபாயில் இருந்து பாகிஸ்தானின் கராச்சிக்கு கொண்டு வரப்பட்டது. இன்று கராச்சி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள குல்மகர் போலோ மைதானத்தில் இறுதிச்சடங்குகள் மற்றும் பிரார்த்தனை நடைபெற்றது. அதன்பின்னர் அங்குள்ள ராணுவ கல்லறை தோட்டத்திற்கு முஷாரப் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, முழு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

    இறுதிச்சடங்கில் தற்போதைய அதிபர் ஆரிப் ஆல்வியோ, பிரதமர் ஷெபாஸ் ஷெரீபோ கலந்துகொள்ளவில்லை. அதேசமயம், கூட்டுப் படைகளின் தலைவர் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா, முன்னாள் ராணுவத் தளபதிகள் கமர் ஜாவேத் பஜ்வா, அஷ்பக் பர்வேஸ் கயானி மற்றும் அஸ்லம் பெக் ஆகியோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். ஐஎஸ்ஐ உளவு அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ஷுஜா பாஷா, ஜாகீருல் இஸ்லாம் மற்றும் ஓய்வு பெற்ற பல்வேறு ராணுவ அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    முத்தாகிதா குவாமி இயக்கத்தின் (பாகிஸ்தான்) தலைவர்கள் காலித் மக்பூல் சித்திக், டாக்டர் ஃபரூக் சத்தார், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) தலைவர் அமீர் முகம், பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் தலைவரும், சிந்து மாகாண முன்னாள் ஆளுநருமான இம்ரான் இஸ்மாயில், மத்திய தகவல் துறை முன்னாள் அமைச்சர் ஜாவேத் ஜப்பார் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

    சிந்து மாகாணத்தில் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சி அல்லது ஜமாத்-இ-இஸ்லாமியின் முக்கிய தலைவர்கள் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை.

    Next Story
    ×