search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதை
    X

    ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதை

    • ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார்.
    • எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹசீனா பலமுறை கைது செய்யப்பட்டார்.

    நமது அண்டை நாடான வங்காளதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டம் அந்த நாட்டை வன்முறை தேசமாக மாற்றியது. அதன் எதிரொலியாக வங்காளதேசத்தின் நீண்டகால பிரதமர் என்கிற பெருமைக்குரிய ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    அவர், சிறிது நாட்கள் இங்கேயே தங்கி இருந்து பிறகு இங்கிலாந்து செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைவது என்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் இந்தியாவில் 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்துள்ளார்.

    அதன் பின்னணியையும், ஷேக் ஹசீனா கடந்து வந்த பாதையையும் இங்கே காணலாம்.

    1947-ம் ஆண்டு கிழக்கு வங்காளத்தில் ஒரு முஸ்லிம் குடும்பத்தில் பிறந்தவரான ஷேக் ஹசீனாவின் ரத்தத்திலேயே அரசியல் ஊறியுள்ளது. ஏனெனில் 'வங்கதேசத்தின் தந்தை' என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமானின் மகள் தான் இந்த ஷேக் ஹசீனா.

    1971-ல் பாகிஸ்தானுடனான போருக்கு பிறகு சுதந்திர நாடாக உருவெடுத்த வங்காளதேசத்தில் முதல் அதிபராக பதவி வகித்து வங்கதேசத்தை வழிநடத்தினார் ஷேக் முஜிபுர் ரகுமான்.

    அந்த சமயத்தில் ஹசீனா, டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக உருவெடுத்திருந்தார். இளம் வயதிலேயே அரசியலில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தபோதும் தேர்தல் அரசியலில் அவர் இறங்கவில்லை.

    அதிபராக பதவி ஏற்ற 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆகஸ்டு 15, 1975-ல் ஷேக் முஜிபுர் ரகுமானின் ஆட்சியை கவிழ்த்து, அதிகாரத்தை கைப்பற்றியது ராணுவம். அதோடு ஷேக் முஜிபுர் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

    அந்த சமயத்தில் ஹசீனா தனது கணவரை பார்ப்பதற்காக குழந்தைகளுடன் ஜெர்மனி சென்றிருந்தார். அவருடன் அவரது இளைய சகோதரியும் சென்றிருந்தார். இதனால் அவர்கள் மட்டுமே குடும்பத்தில் உயிர் பிழைத்திருந்தனர்.

    அவர்கள் வங்காளதேசத்துக்கு திரும்ப முடியாத சூழல் நிலவிய நிலையில், இந்தியாவில் அப்போது பிரதமராக இருந்த இந்திரா காந்தி, அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினார். அதன்படி ஹசீனா தனது கணவர், குழந்தைகள் மற்றும் சகோதரியுடன் டெல்லி வந்து, 6 ஆண்டுகள் ரகசியமாக வாழ்ந்து வந்தார்.

    பின்னர் 1981-ம் ஆண்டு வங்கதேசத்திற்கு திரும்பி அவரது தந்தையின் அவாமி லீக் கட்சிக்கு தலைவராக பொறுப்பேற்றார்.

    நாட்டில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வர, ராணுவ ஆட்சியை எதிர்த்து பிற அரசியல் கட்சிகளுடன் கைகோர்த்து போராட்டங்களை முன்னெடுத்தார். இதன் மூலம் மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றார்.

    அதன் பலனாக 1996-ல் முதன் முறையாக வங்காளதேசத்தின் பிரதமர் ஆனார். இந்தியாவுடன் நதிநீர் பகிர்வு ஒப்பந்தம் மற்றும் நாட்டின் தென்கிழக்கில் உள்ள பழங்குடி கிளர்ச்சியாளர்களுடன் அமைதி ஒப்பந்தம் போன்றவற்றுக்காக போற்றப்பட்டார்.

    ஹசீனாவின் ஆட்சியில் வங்காளதேசம் வளர்ச்சி பாதையில் சென்றாலும், அவரது அரசு மீது ஊழல் புகார்கள் எழுந்ததுடன், இந்தியாவுக்கு கீழ்ப்படிந்து நடப்பதாக விமர்சனங்களும் எழுந்தன.

    இதனால் 2001-ல், கூட்டணியில் இருந்து பின் போட்டியாளராக மாறிய வங்கதேச தேசியவாத கட்சியின் பேகம் கலீதா ஜியாவிடம் ஆட்சியைப் பறிகொடுத்தார்.

    எதிர்க்கட்சியாக இருந்தபோது ஹசீனா பலமுறை கைது செய்யப்பட்டார். மேலும் அவரை படுகொலை செய்ய முயற்சிகள் நடந்தன. குறிப்பாக 2004-ல் நடந்த கொலை முயற்சியின்போது அவரது காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. அதோடு, ஹசீனாவை வங்காளதேசத்தை விட்டு கட்டாயமாக வெளியேற்றவும் பலமுறை முயற்சிக்கப்பட்டது. எனினும் அதில் இருந்து தப்பினார்.

    பின்னர் 2009-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஹசீனா மீண்டும் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தார். ஹசீனா ஆட்சியின் கீழ் வங்காளதேசம் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் கண்டது. இப்போது வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது வங்காளதேசம்.

    கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் வங்காளதேசத்தின் தனிநபர் வருமானம் 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் வங்காளதேசத்தில் 2.5 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு வங்கதேசத்தில் விலைவாசி உயர்வு அதிகரித்தது, பணவீக்கம் வானளவுக்கு உயர்ந்தது, அன்னிய செலாவணி கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.

    இதற்கு ஹசீனா அரசின் தவறான நிர்வாகமே காரணம் என்று விமர்சகர்கள் குற்றம்சாட்டினர். வங்காளதேசத்தின் முந்தைய பொருளாதார வெற்றி, ஹசீனாவின் அவாமி லீக்கிற்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே உதவியது என்று கூறப்பட்டது. இந்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஹசீனா மற்றும் அவரது அரசு மறுத்தது.

    அரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களோடு சேர்த்து வங்கதேச தேசியவாத கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். ஒரு காலத்தில் பிற கட்சிகளோடு இணைந்து ஜனநாயகத்திற்காக போராடிய தலைவரின் செயல்பாட்டில் பெரும் திருப்புமுனையாக இது பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×