search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    ஹமாசின் 150 சுரங்கங்களை குண்டு வீசி அழித்த இஸ்ரேல்
    X

    ஹமாசின் 150 சுரங்கங்களை குண்டு வீசி அழித்த இஸ்ரேல்

    • 100 போர் விமானங்கள் ஒரே சமயத்தில் காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது.
    • காசா எல்லைக்குள் நுழைந்து இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் ஹமாஸ் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    காசா:

    இஸ்ரேல் படையினருக்கும், பாலஸ்தீனத்தில் காசாவை ஆளும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையே போர் தொடங்கி 23 நாட்களை கடந்து விட்டது.

    இந்த சண்டையில் இரு தரப்பிலும் சாவு எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி விட்டது.

    ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் அழிக்கும் வரை ஓயமாட்டோம் என அறிவித்துள்ள இஸ்ரேல் கடந்த 2 நாட்களாக காசா மீது கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன்தினம் காசாவில் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசியது.

    இரவு முழுவதும் சுமார் 100 போர் விமானங்கள் ஒரே சமயத்தில் காசா மீது தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது. இதில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது.

    இதன் தொடர்ச்சியாக இஸ்ரேல் தனது தாக்குதலை நேற்று முதல் அதிகரித்து இருக்கிறது. இஸ்ரேலின் போர் விமானங்கள் இடைவிடாமல் ஹமாஸ் அமைப்பினரின் இலக்குகளை குறி வைத்து குண்டுகளை வீசி வருகின்றது.

    ஹமாஸ் அமைப்பினருக்கு பாதுகாப்பு கேடயமாக அங்குள்ள சுரங்கங்கள் உள்ளன. இங்கு ஏராளமான பதுங்கு குழிகள் இருக்கிறது. இங்கு மறைந்து இருக்கும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் தாக்குதலை சமாளிக்க தயாராக உள்ளனர்.

    இந்த சுரங்கங்கள் தான் இஸ்ரேல் படையினருக்கு பெரும் சவாலாக இருந்து வருகிறது. இஸ்ரேல் மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்த 230 பிணைக்கைதிகளை இந்த சுரங்கத்தில் தான் ஹமாஸ் படையினர் அடைத்து வைத்துள்ளனர்.

    நேற்று நடந்த கடுமையான வான் வெளி குண்டு வீச்சு தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினரின் 150 சுரங்க கட்டமைப்புகள் மற்றும் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

    இதே போல காசா எல்லைக்குள் நுழைந்து இருக்கும் இஸ்ரேல் ராணுவ வீரர்களுடன் ஹமாஸ் படையினர் கடும் சண்டையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் வான் படை கமாண்டர் அசம் அபு ரகபா கொல்லப்பட்டார். இவரது தலைமையின் கீழ் தான் ஹமாஸ் அமைப்பின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், டிரோன்கள், பாராகிளைடர்கள், வான்வெளி கண்காணிப்பு ஆகிய பிரிவுகள் செயல்பட்டு வந்தன.

    கடந்த 7-ந்தேதி இஸ்ரேல் நகரம் மீது பாராகிளை டர்கள், டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அசம் அபு ரகபா மூளையாக செயல்பட்டார். இவரை இஸ்ரேல் உளவு அமைப்பு தீவிரமாக தேடி வந்தது.

    இந்த நிலையில் வடக்கு காசாவின் ரகசிய சுரங்க பாதையில் அவர் பதுங்கி இருப்பதாக தெரியவந்தது. இந்த இடத்தை குறி வைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியது. அதில் கமாண்டர் உள்பட பல ஹமாஸ் அமைப்பினர் இறந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் தரை வழி தாக்குதலை தீவிரப்படுத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இதனால் காசா நகரை அப்படைகள் சுற்றி வளைத்துள்ளன. ரோபோ மற்றும் ரிமோட் மூலம் தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் திட்டமிட்டு உள்ளது. இதனால் போர் இன்னும் உச்சகட்டத்தை எட்டும் என்ற சூழ்நிலை அங்கு நிலவி வருகிறது.

    அதே சமயம் சுரங்கங்களில் பதுங்கி இருக்கும் ஹமாஸ் அமைப்பினரும் பதிலடி தாக்குதல் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×