search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேட்கும் திறனைபெற்ற இந்தியர்- முதல் முறையாக மனைவியின் குரலை கேட்டு நெகிழ்ச்சி
    X

    50 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கேட்கும் திறனைபெற்ற இந்தியர்- முதல் முறையாக மனைவியின் குரலை கேட்டு நெகிழ்ச்சி

    • டாக்டர்கள் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என சமிஞ்சையில் கூறினர்.
    • கணவருக்காக போராடி கேட்கும் திறனை பெற்றுத்தந்த தஸ்லிபானுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    அபுதாபி:

    அபுதாபியில் வசித்து வரும் இந்தியர் முகம்மது ஹுசைன் (வயது 52). இவரது மனைவி தஸ்லிபானு. இவர்களுக்கு கடந்த 1995-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இருவரும் அபுதாபியில் வசித்து வந்தனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 2 வயதில் இருந்து செவித்திறனை இழந்த முகம்மது ஹுசைன் அபுதாபியில் டெய்லராகவும், சலவை தொழிலாளியாகவும் பணியாற்றி வந்தார்.

    கொரோனா தொற்று பரவலுக்கு பிறகு அவரது மனைவி தஸ்லிபானுவுக்கு மருத்துவ ஊழியராக வேலை கிடைத்தது. இதனால் அவர்களின் கஷ்டநிலை மாறியது. குடும்பத்தை தஸ்லிபானு முழுவதுமாக கவனித்துக்கொண்டார். ஒரு கட்டத்தில் கணவருக்கு மீண்டும் காது கேட்க வைக்க வேண்டும் என அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

    மருத்துவ ஊழியரான அவர், பைலேட்டரல் காக்லியர் இம்பிளாண்ட் அறுவை சிகிச்சை மூலம் செவித்திறனை கொண்டு வர விரும்பினார். இந்த அறுவை சிகிச்சை உட்காதில் (காக்கிலியா) சிறு மின்னணு உபகரணம் பொருத்தப்பட்டு செய்யப்படுகிறது. அதாவது காதுகளின் உட்புறத்தில் ஒரு முதுகெலும்பு வடிவ எலும்பு செய்யும் வேலையை இந்த சாதனம் செய்கிறது. குறிப்பாக இதில் வெளியில் கேட்கும் ஒலி மின் தூண்டுதலாக மாற்றப்படுகிறது. பிறகு அந்த தூண்டுதல் நரம்பினால் கடத்தப்பட்டு மூளைக்கு எடுத்து செல்லப்பட்டு காது கேட்கிறது. இதில் காதுகளின் வெளிப்புறத்தில் ஒலியை வாங்கும் ரிசீவர் மற்றும் டிரான்ஸ் மீட்டர், மைக்ரோபோன் ஆகியவை பொருத்தப்படுகிறது.

    இதற்கு சிக்கலான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது காதுக்கு பின்னால் உள்ள எலும்பில் சிறிய துளை ஏற்படுத்தப்பட்டு அதில் உபகரணம் தோலின் உள்ளே பொருத்தப்படுகிறது. இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை அபுதாபி தனியார் மருத்துவமனையில் தஸ்லிபானு தனது கணவருக்கு ஏற்பாடு செய்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்த பிறகு டாக்டர்கள் முகம்மது ஹுசைனை திரும்பி நிற்க வைத்து தஸ்லிபானுவை ஏதாவது பேசுங்கள் என சமிஞ்சையில் கூறினர்.


    அதனை அடுத்து தனது செல்லப்பெயரான 'பானு' என அவர் உச்சரித்தார். 50 ஆண்டுகளுக்கு பிறகு முதல் சத்தத்தை கேட்டு அதுவும் தனது மனைவியின் பெயரை கேட்ட முகம்மது ஹுசைன் ஆனந்த கண்ணீர் வடித்து திரும்பி பார்த்தார். இதை கண்ட தஸ்லிபானுவும் ஆனந்த கண்ணீர் வடித்தார். கணவருக்காக போராடி கேட்கும் திறனை பெற்றுத்தந்த தஸ்லிபானுவுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    Next Story
    ×