search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • நோய்க்கான பல சிகிச்சை முறைகளிலும் நோயாளிகளுக்கு வலி குறைவதில்லை
    • வலியற்ற கேன்சர் சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன

    உலகெங்கும் உள்ள மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று, கேன்சர் (cancer) எனப்படும் புற்றுநோய்.

    உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படக் கூடிய கேன்சர் நோய்க்கு, நவீன மருத்துவத்தில் பல சிகிச்சை முறைகளும், மாத்திரைகளும், மருந்துகளும் உள்ளதால் நோயை கட்டுக்குள் வைக்க முடிகிறது.

    ஆனால், இத்தகைய சிகிச்சை முறைகளில் நோயாளிகளுக்கு வலி அதிகம் இருப்பது தவிர்க்க முடியாததாக இருந்து வருகிறது.

    கேன்சர் நோய் தீர்க்கும் வழிமுறைகள் மற்றும் வலியற்ற சிகிச்சை முறைகள் குறித்து உலகம் முழுவதும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், இங்கிலாந்தின் "கிழக்கு சஃபோல்க் மற்றும் வடக்கு எஸ்ஸெக்ஸ்" (East Suffolk and North Essex) பகுதியில் தேசிய சுகாதார சேவையின் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் (NHS Foundation Trust) எனும் லாப நோக்கமற்ற அமைப்பு கேன்சர் நோயாளிகளுக்கு பல்வேறு மருத்துவமனைகளில் கேன்சர் நோய்க்கான சிகிச்சை அளித்து வருகிறது.

    இந்த அமைப்பை சார்ந்த மருத்துவர்கள் தங்கள் ஆய்வில் "லைட் தெரபி" (light therapy) எனப்படும் "ஓளி சிகிச்சை" மூலம் கழுத்து மற்றும் தலை (head and neck) கேன்சர் நோயாளிகளுக்கு கீமோதெரபி (மருந்து சிகிச்சை) மற்றும் ரேடியோதெரபி (கதிரியக்க சிகிச்சை) ஆகியவற்றின் பக்கவிளைவாக ஏற்படும் வலி, பெருமளவு குறைவதை கண்டுபிடித்துள்ளனர்.

    பிற தெரபிகளின் பக்க விளைவாக வாய் பகுதியில் ஏற்படும் வலியை "லைட் தெரபி" குறைக்கிறது.

    "ஃபோட்டோ பயோ மாடுலேஷன்" (Photo Bio Modulation) சிகிச்சை எனப்படும் பிபிஎம் (PBM) பெற்று கொண்ட நோயாளிகளுக்கு வலி நிவாரண மருந்துகள் தேவைப்படுவதில்லை என தெரிய வந்துள்ளது.

    சீராக அகச்சிவப்பு ஓளியை (infrared light) வாய் பகுதியில் பாய்ச்சுவதன் மூலம் வாய் புண் மற்றும் வலி குறைந்துள்ளது.

    "பிற சிகிச்சைகளினால் ஏற்பட்ட வாய் புண் குறையாமல் இருந்தது. அதன் காரணமாக திரவ உணவு மட்டுமே உட்கொள்ளும் நிலை இருந்து வந்தது. மேலும், நாவினால் எந்த சுவையையும் அறிய முடியவில்லை. ஆனால், பிபிஎம் சிகிச்சை நிம்மதியான அனுபவத்தை கொடுத்தது" என ஒரு நோயாளி தெரிவித்தார்.

    வரும் மாதங்களில், பிபிஎம் சிகிச்சையின் பரவலான பயன்பாடு குறித்து மேலும் தகவல்கள் வெளிவரலாம்.

    • பிடி டவரை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்
    • பிடி டவர் உரிமையாளர்கள் எம்சிஆர் ஓட்டல்களுக்கு (MCR Hotels) $347 மில்லியனுக்கு விற்றனர்

    இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உலக கட்டிடக்கலை துறையின் சிறப்புகளை உணர்த்தும் பல கட்டிங்கள் உள்ளன.

    அவற்றில் ஒன்று லண்டன் "வெஸ்ட் எண்ட்" பகுதியில் உள்ள 1964ல் உருவாக்கப்பட்ட"பிடி டவர்" (British Telecommunications Tower) எனப்படும் 620 அடி உயர கோபுரம். இந்த கோபுரத்தின் மத்திய பகுதி 581 அடிகள் உயரம் கொண்டது.

    பிடி டவரை 1965ல் அப்போதைய பிரதமர் ஹெரால்ட் வில்சன் திறந்து வைத்தார்.

    அதன் உச்சியில் அமைக்கப்பட்டுள்ள 360 டிகிரி எல்.ஈ.டி. (LED) திரை செய்திகளை ஒளிபரப்புகிறது.

    இந்த கோபுரத்தை தொடக்கத்தில் தொலைக்காட்சி சிக்னல்கள் அனுப்ப பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில், பிடி டவரின் உரிமையாளராக இருந்த பிடி குழுமம் (BT Group), அதனை எம்சிஆர் ஓட்டல்கள் (MCR Hotels) குழுமத்திற்கு $347 மில்லியனுக்கு விற்பனை செய்து விட்டதாக அறிவித்தது.

    மொபைல் போன்கள் தொழில்நுட்பம் பரவலான பிறகு தகவல் தொடர்பில் இந்த கோபுரத்தின் பயன்பாடு குறைய தொடங்கியதால் இதில் பொருத்தப்பட்டிருந்த நுண்ணலை ஏரியல்கள் நீக்கப்பட்டன.


    எம்சிஆர் ஓட்டல்கள் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி டைலர் மோர்ஸ் (Tyler Morse), "இந்த பழமையான கட்டிடத்தை அதன் பெருமை குறையாமல் மேம்படுத்தி புதிய தலைமுறையினருக்கு சுகமான அனுபவத்தை வழங்கும் முயற்சியில் மகிழ்ச்சியாக உள்ளோம்" என கூறினார்.

    பல வருடங்களாக இதனை பொதுமக்கள் நேரடியாக பயன்படுத்த முடியாமல் இருந்து வந்த நிலையில், அவர்களின் நேரிடையான பயன்பாட்டிற்கு இது வருவது உற்சாகம் அளிக்கும் செய்தியாக அந்நகரில் பார்க்கப்படுகிறது.

    ஒரு காலகட்டத்தில் அந்த டவரின் உச்சியில் உள்ள வட்ட மாடத்தில் ஒரு சுழலும் உணவகம் இருந்ததும், அது சுற்றி முடிக்க 22 நிமிடங்கள் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.

    • வகுப்பறையில் செல்போன்கள் எரிச்சலூட்டுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்
    • நல்ல கல்வியை குழந்தைகள் பெற நாம் சூழலை உருவாக்க வேண்டும் என்றார் சுனக்

    இங்கிலாந்து பள்ளிகளில் மாணவர்களும், மாணவிகளும் மொபைல் போன்களை உபயோகிக்க புதிய கட்டுப்பாடுகளை அந்நாட்டு அரசு கொண்டு வந்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கருத்து தெரிவித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:

    முக்கியமான உரையாடலின் போது மொபைல் போன் தொடர்ந்து ஒலிப்பது எரிச்சலூட்டுகிறது.

    பல பள்ளிகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யாமல் உள்ள பள்ளிகளுக்கு உதவ நமது கல்வி துறை புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    பல ஆசிரியர்கள், தங்களால் வகுப்புகளில் கவனம் செலுத்த முடிவதில்லை என புகார் அளித்தனர்.

    மொபைல் போன்கள் வகுப்புகளில் கவனச்சிதறலை தூண்டுகிறது. எங்கெல்லாம் வகுப்புகளில் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளதோ அங்கு மாணவர்களுக்கு கற்றலுக்கான சூழ்நிலை நன்றாக உள்ளது.

    எனவே புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் அவர்களுக்கு உரிமையுள்ள கல்வியை பெற அனைத்து சூழலையும் நாம் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கற்றல் நேரம் குறைவதை தவிர்க்க, கல்வி துறை வகுத்துள்ள புதிய விதிமுறைகளில் ஒன்றாக, குழந்தைகள் பள்ளிக்கு வந்ததும் பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்கவும், அவற்றை நிர்வாகம் பாதுகாப்பாக வைத்து குழந்தைகள் செல்லும் போது திரும்ப வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், பள்ளி முடியும் நேரம் வரை மாணவர்கள் செல்போனை பயன்படுத்துவதை தடுக்க தலைமை ஆசிரியருக்கு அதிகாரம் வழங்கி உள்ளது.

    இங்கிலாந்தில் 12 வயதை எட்டிய 97 சதவீத குழந்தைகளின் கைகளில் செல்போன் உள்ளது.

    கடந்த வருடம், ஐ.நா. சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டிற்கான அமைப்பு (UNESCO) பள்ளிகளில் செல்போன்களை பயன்படுத்த அனுமதிப்பதால், குழந்தைகளின் கல்வி திறன் மற்றும் உடல்நலம் பாதிக்கப்படுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்
    • பாதிரியார் டுப்மேனுக்கு பல ஊர்களில் இருந்து ஆதரவு பெருகி வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், உலக வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. இதை எதிர்த்து உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவியுடன் போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் உயிர்சேதங்களும், கட்டிட சேதங்களும் பலமாக ஏற்பட்டிருந்தும், போர் தீவிரமாக 710 நாட்களை கடந்து தொடர்கிறது.

    ரஷியாவின் வான்வழி தாக்குதலால் உக்ரைன் நாட்டில் சுமார் 40 சதவீத மின் உற்பத்தி நிலையங்கள் சேதமடைந்தன. இதனால் உக்ரைனின் பல பகுதிகளில் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்

    உதவிகள் கேட்டு அமெரிக்க அதிபரை சந்தித்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டு மின்சார உற்பத்தி நிலையங்களை இயங்க செய்யவும் அமெரிக்க உதவியை கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


    இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் நகரத்தில் இருந்து சிறிது தொலைவில் உள்ளது சாஸ்டன் (Sawston) கிராமம்.

    சாஸ்டன் பகுதியில் உள்ள செயின்ட் மேரி தேவாலயத்தில் பாதிரியாராக இருப்பவர், 29 வயதான வில் லயான் டுப்மேன் (Will Lyon Tupman).

    உக்ரைன் மக்கள் இருளில் அவதிப்படுவதை கேள்விப்பட்டு 2022லிருந்தே பாதிரியார் டுப்மேன், பாதி உபயோகப்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மெழுகுவர்த்திகளை சேகரிக்க தொடங்கினார்.

    தங்கள் தேவாலயத்திலும் இருந்த பயன்படுத்தப்படாத மெழுகுவர்த்திகளையும் தனது சேகரிப்பில் இணைத்தார். மேலும், இவரது கோரிக்கைக்கு உதவ பலர் முன் வந்ததால், தங்கள் வீட்டில் இருந்த பாதி எரிந்த நிலையில் உள்ள மற்றும் உபயோகப்படுத்தாத மெழுகுவர்த்திகளையும் அவரிடம் வழங்கினர்.


    இவையனைத்தையும் பாதிரியார் டுப்மேன், அங்குள்ள ஒரு மெழுகுவர்த்தி உற்பத்தி நிலையத்தில் கொடுத்து, உருக்கி, புது மெழுகுவர்த்திகளாக மாற்றினார். அந்த புது மெழுகுவர்த்திகளை உக்ரைன் நாட்டிற்கு அனுப்பி வைத்தார்.

    இந்த அரிய பணியை, பாதிரியார் டுப்மேன் தற்போது வரை தொடர்கிறார். இவரது முயற்சிக்கு அப்பகுதி மக்களிடம் இருந்தும், சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள சர்ச்களிலில் இருந்தும் ஆதரவு பெருகி வருகிறது.

    உக்ரைன் மக்கள் டுப்மேனின் இந்த பெரும் உதவியினால் பயனடைந்துள்ளதால், அவருக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

    • 2022 அக்டோபரில் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் பிரதமரானார்
    • குடிநீர், தேநீர் மற்றும் கலோரி-இல்லா பானங்களை மட்டும் அருந்துகிறார் சுனக்

    உணவில் கவனம் செலுத்தாமல் வாரம் முழுவதும் உழைத்து விட்டு, வார இறுதியில் விருப்பமான உணவு வகைகளை உண்பதும், ஓய்வெடுப்பதும் பெரும்பாலானவர்கள் கடைபிடிக்கும் வழக்கம்.

    ஆனால், இந்திய வம்சாவளியை சேர்ந்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இதற்கு விதிவிலக்காக திகழ்கிறார்.

    2022 அக்டோபர் 25 அன்று இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற ரிஷி சுனக் (43), தனது உடலாரோக்கியம் மற்றும் வாழ்க்கைமுறை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

    அப்போது அவர் தெரிவித்ததாவது:

    வாரந்தோறும் 36 மணி நேரம் விரதம் இருக்கிறேன்.

    ஞாயிற்றுக்கிழமை மாலை 05:00 மணி தொடங்கி செவ்வாய்கிழமை காலை 05:00 மணி வரை எதுவும் உண்பதில்லை. இக்காலகட்டத்தில் நான், குடிநீர், தேநீர் மற்றும் கலோரி இல்லாத பானங்கள் மட்டுமே அருந்துகிறேன்.

    வாரம் ஒரு முறை விரதம் இருப்பது எனக்கு முக்கியமான சுய கட்டுப்பாடு.

    எனக்கு இனிப்பு பண்டங்கள் என்றால் அதிக விருப்பம். இதன் மூலம் விரதம் இருந்த நாட்களைத் தவிர பிற நாட்களில் என் விருப்பம் போல் உண்ண முடிகிறது.

    இவ்வாறு சுனக் கூறினார்.


    மெக்சிகோ நாட்டின் கோக்கோ கோலா பானத்தை மிகவும் விரும்பி அருந்துபவர் சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.

    2009 ஆகஸ்ட் மாதம், இந்தியாவின் மென்பொருள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணியில் உள்ள இன்போசிஸ் நிறுவனத்தை நிறுவிய இந்தியாவின் கோடீசுவரர் என்ஆர் நாராயண மூர்த்தியின் மகள், அக்ஷதாவை சுனக் திருமணம் செய்தார்.

    சுனக்-அக்ஷதா தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர்.

    உண்ணாவிரதம் இருப்பதால் உடலில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் அதிக கொழுப்பு குறைய சாத்தியக்கூறு உள்ளதை ஒப்பு கொள்ளும் மருத்துவர்கள், இத்தகைய பழக்கங்களை ஏற்படுத்தி கொள்ளும் முன் ஒவ்வொருவரும் தக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என எச்சரிக்கின்றனர்.

    • இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.
    • 10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது.

    செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வர்த்தக கப்பல்கள் மீது ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ஏடன் வளைகுடா பகுதியில்இங்கிலாந்தைச் சேர்ந்த எண்ணெய் கப்பலான எம்.வி. மர்லின் லுவாண்டா மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தினர்.

    இதில் கப்பலில் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து இங்கிலாந்து கப்பலில் இருந்தவர்கள், இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலை தொடர்புகொண்டு உதவி கேட்டனர். உடனே ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலில் இருந்து தீயணைப்பு சாதனங்களுடன் மீட்பு குழுவினர் அங்கு அனுப்பப்பட்டனர். தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பலில் 22 இந்தியர்கள் உள்ளனர். கப்பலில் எரிந்த தீயை கடுமையாக போராடி இந்திய மீட்புக்குழுவினர் அணைத்தனர்.

    10 தீயணைப்பு வீரர்கள் அடங்கிய குழு 6 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாக இந்திய கடற்படை தெரிவித்தது. எண்னை கப்பலின் கேப்டன் அபிலாஷ் ராவத் கூறும்போது, இந்திய கடற்படை போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினத்திற்கு நன்றி கூறுகிறேன். இந்த தீயை எதிர்த்து போராடும் நம்பிக்கையை நாங்கள் இழந்துவிட்டோம். தீயை அணைக்க இந்திய கடற்படை எங்களுக்கு உதவ முன்வந்ததற்கு நன்றி என்றார்.

    • சூ வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது
    • 5 வருடங்கள் கூட தான் உயிருடன் இருப்போம் என சூ நம்பவில்லை

    வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள நகரம் ஹவுட்டன் லெ ஸ்ப்ரிங் (Houghton-le-Spring).

    ஹவுட்டனில் வசித்து வருபவர் சூ வெஸ்ட்ஹெட் (Sue Westhead). வெஸ்ட்ஹெட்டிற்கு தற்போது 108 வயது ஆகிறது

    தனது 12-ஆவது வயதில் உடல்நலம் சரியில்லாமல் அவதிப்பட்ட வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரக நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, 25-ஆவது வயதில் டயாலிசிஸ் செய்து கொள்ள தொடங்கினார்.

    நீண்ட சிகிச்சைக்கு பிறகும் அவருக்கு நோய் தீரவில்லை.

    1970களின் தொடக்கத்தில் வெஸ்ட்ஹெட்டிற்கு சிறுநீரகத்துறை சிகிச்சை நிபுணர்கள் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பரிந்துரை செய்தனர்.

    1973ல் வெஸ்ட்ஹெட்டின் தாயார் ஆன் மெட்கால்ஃப் (Ann Metcalf) சிறுநீரகம் தர முன்வந்ததையடுத்து முறையான பரிசோதனைக்கு பின்னர் அறுவை சிகிச்சை நடந்து தாயாரின் சிறுநீரகம், வெஸ்ட்ஹெட்டிற்கு பொருத்தப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை ராயல் விக்டோரியா மருத்துவமனையில் நடந்தது.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும், அடுத்த 5 வருடங்களுக்கு கூட தான் உயிருடன் இருக்க முடியும் என வெஸ்ட்ஹெட் அப்போது நம்பவில்லை.

    ஆனால், 50 வருடங்கள் கடந்தும், எந்தவிதமான சிறுநீரக சிக்கலும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார், வெஸ்ட்ஹெட்.

    இந்த நிகழ்வு, தற்போது வெஸ்ட்ஹெட்டிற்கு உடல்நல மேற்பார்வையும் ஆலோசனையும் வழங்கி வரும் சண்டர்லேண்ட் ராயல் மருத்துவமனையில் கொண்டாடப்பட்டது.

    மிகவும் மகிழ்ச்சியுடன் அங்கு வந்திருந்த வெஸ்ட்ஹெட்டுடன் உரையாடிய அங்குள்ள மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை பணியாளர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் மக்கள் உறுப்பு தானம் செய்ய முன் வர வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

    • புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்
    • மருமகள் கேத்ரீனுக்கு வயிற்று பகுதியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது

    பிரிட்டிஷ் அரச பரம்பரையின் தற்போதைய அரசர், மூன்றாம் சார்லஸ் (King Charles III).

    2022 செப்டம்பர் மாதம் சார்லஸின் தாயார், அரசி இரண்டாம் எலிசபெத் (Queen Elizabeth II) காலமானார்.

    அதை தொடர்ந்து மூன்றாம் சார்லஸ் அரசராக பதவி ஏற்றார். அப்போது அவருக்கு வயது 73.

    சில மாதங்களாக புரோஸ்டேட் சுரப்பி வீக்க பிரச்சனையால் அரசர் சார்லஸ் அவதிப்பட்டு வந்தார்.

    இந்நிலையில், அடுத்த வாரம் இந்நோய்க்கான சிகிச்சைக்காக அரசர் சார்லஸ், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை செய்தி வெளியிட்டது. தற்போது ஆபத்தில்லாத நிலையில் உள்ள இந்நோய்க்காக சிகிச்சை பெறுவார் என தெரிவித்த அந்த அறிக்கையில், சிகிச்சை முறைகள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

    இதை தொடர்ந்து, அரசர் சார்லஸ் பங்கேற்க இருந்த பல நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன.

    50 வயதை கடந்த பெரும்பாலான ஆண்களுக்கு புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் ஒரு பொதுவான நோய் என்றது பிரிட்டன் சுகாதார துறை,

    முன்னதாக, வேல்ஸ் இளவரசி (Princess of Wales) என அழைக்கப்படும் அரசர் சார்லஸின் மருமகள், 42 வயதாகும் கேத்ரீன் (Catherine) இரு வார சிகிச்சைக்காக லண்டன் கிளினிக்கில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என அரண்மனை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    வயிற்று பகுதி நோய்க்காக அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்றது என அறிவித்திருந்த அரண்மனை செய்தி குறிப்பு, நோய் குறித்த விவரங்களை வெளியிடவில்லை.

    • லண்டன் நகர மேயர் பதவிக்காலம் 4 ஆண்டுகளாகும்
    • மூவரை தவிர 8 பேர் மேயர் தேர்தல் களத்தில் இறங்கி உள்ளனர்

    இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் உலகிலேயே அழகான நகரம் என பெயர் பெற்றது.

    மே 2 அன்று லண்டன் நகர மேயருக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    4 வருட பதவிக்காலம் உள்ள லண்டன் மேயர் பதவிக்கு தற்போது மேயராக உள்ள சாதிக் கான் மீண்டும் 3-வது முறையாக போட்டியில் இறங்கி உள்ளார்.

    இந்நிலையில், சாதிக் கானை எதிர்த்து தருண் குலாடி (63) மற்றும் ஷ்யாம் பாடியா (62) எனும் இரு தொழிலதிபர்கள் சுயேட்சையாக களம் இறங்கியுள்ளனர்.

    இந்த இருவருமே இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    "இந்தியா நான் பிறந்த பூமி. எனது வீடு லண்டன். தற்போதுள்ள மேயர், மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டார். மக்கள் நல்வாழ்விற்காக சுதந்திரமான தடையற்ற கொள்கைகளை மக்களின் ஆலோசனையுடன் செயல்படுத்தவே நான் எந்த கட்சியையும் சாராமல் சுயேச்சையாக நிற்கிறேன். அனைவருக்குமான பாதுகாப்பான நகரமாக லண்டனை மாற்றுவேன்" என கூறினார் தருண்.

    தருண், "நம்பிக்கை மற்றும் வளர்ச்சி" (trust and growth) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

    "தற்போது லண்டனின் நிலை என்னை வருத்தமடைய செய்கிறது. இந்த பெருநகரத்தில் வசிப்பவர்களின் வாழ்வு, செயலற்ற ஒரு அமைப்பால் பலியாவது என்னை கவலை கொள்ள செய்கிறது. வரப்போகும் நாட்களில் இரவும் பகலும் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டும். ஆனால் அந்த சவால்களை எதிர் கொண்டு, உலகில் லண்டனுக்கு என முன்னர் இருந்து வந்து தற்போது இழக்கப்பட்டுள்ள முதல் இடத்தையும், தனிப்பட்ட மரியாதையையும் மீட்டு எடுப்பேன்" என கூறினார் ஷ்யாம்.

    ஷ்யாம், "நம்பிக்கைக்கான தூதர்" (ambassador of hope) எனும் தேர்தல் முழக்கத்தை முன்னெடுத்துள்ளார்.

    2024 மார்ச் மாதம், இருவரும் தங்களை ஆதரிப்பவர்களின் கையெழுத்துடனும், டெபாசிட் தொகையுடனும் அதிகாரபூர்வமாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பங்களை தாக்கல் செய்ய வேண்டும்.

    ஏப்ரல் மாதம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

    சாதிக் கான், தருண் மற்றும் ஷ்யாம் ஆகியோரை தவிர, 8 பேர் இந்த மேயர் தேர்தல் களத்தில் உள்ளனர்.

    1947ல் சுதந்திரம் பெறும் வரை இந்தியா, பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அடிமையாக ஆளப்பட்டு வந்தது. இன்று அந்நாட்டின் தலைநகரை ஆள இந்திய வம்சாவளியினர் தீவிரம் காட்டுவதை சமூக வலைதளங்களில் பயனர்கள் சுவாரஸ்யமாக விவாதிக்கின்றனர்.

    • மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.
    • லண்டனில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.

    லண்டன்:

    மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 3 நாட்கள் சுற்றுப்பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 8-ம் தேதி இங்கிலாந்து சென்றடைந்த ராஜ்நாத் சிங், லண்டனில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

    இந்தப் பயணத்தின்போது இங்கிலாந்து ராணுவ மந்திரி கிராண்ட் ஷாப்ஸை சந்தித்து ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளுக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு, ராணுவ தளவாடங்கள் உற்பத்தி, தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்தியா-இங்கிலாந்து உறவுகளை மேம்படுத்துவது, இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஆழமாக்குவது குறித்து இங்கிலாந்து வெளியுறவுச் செயலர் டேவிட் கேமரூனுடன், ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரில் சந்தித்து அவருடன் கலந்துரையாடினார்.

    கடந்த 22 ஆண்டுகளில் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ஒருவர் இங்கிலாந்து செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.
    • கடந்த 22 ஆண்டில் எந்த பாதுகாப்பு மந்திரியும் இங்கிலாந்து சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    லண்டன்:

    இந்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் 2 நாள் பயணமாக இன்று இங்கிலாந்து சென்றடைந்தார். லண்டன் விமான நிலையம் வந்த ராஜ்நாத் சிங்குக்கு ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இங்கிலாந்தில் அந்நாட்டு பாதுகாப்புச் செயலருடன் விரிவான சந்திப்பு நடத்துகிறார். லண்டனில் மகாத்மா காந்தி, டாக்டர் அம்பேத்கரின் நினைவிடங்களுக்குச் செல்லும் அவர், அங்கு புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கடந்த 22 ஆண்டில் எந்த இந்திய பாதுகாப்பு அமைச்சரும் இங்கிலாந்துக்கு சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • பேரா. மைக்கேல் மர்மாட், இங்கிலாந்தின் புகழ் பெற்ற "ஸர்" பட்டம் பெற்றவர்
    • தங்களை காக்க போதுமான வசதி இல்லாததால் 10,62,334 பேர் உயிரிழந்துள்ளனர்

    பல்வேறு உயர்கல்வி ஆராய்ச்சிகளுக்காக செயல்படும் பல்கலைக்கழகமான யுசிஎல் (UCL) எனும் யுனிவர்சிட்டி காலேஜ் லண்டன், இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ளது.

    "ஸர்" (Sir) பட்டம் பெற்ற பேரா. மைக்கேல் மர்மாட் (Prof. Sir Michael Marmot) தலைமையில் "இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஈக்விடி" எனும் உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் இங்கு செயல்படுகிறது.

    இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து பேரா. மைக்கேல் பல தரவுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

    அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    2011-ஆம் வருடத்திற்கு பிறகு இங்கிலாந்தில் அகாலமாக உயிரிழந்தவர்களில் பலருக்கு வறுமை, அரசின் சிக்கன நடவடிக்கைகள், கோவிட் பெருந்தொற்று ஆகியவையே மரணத்திற்கு காரணமாக இருந்தது.

    பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஏழை மக்கள் புற்று நோய், இருதய நோய்கள் மற்றும் பிற நோய்களில் இருந்து தங்களை காத்து கொள்ள முடியாமல் இறக்கின்றனர்.

    2011லிருந்து 2019 வரையிலான காலத்தில் 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் அகாலமாக உயிரிழந்துள்ளனர். அவர்கள் பொருளாதார ரீதியில் வளமையான 10 சதவீதம் பேர் வசிக்கும் இடங்களில் வாழ்ந்திருந்தால் அகால மரணம் ஏற்பட்டிருக்காது.

    2020ல் மட்டும் 1,51,615 அகால மரணங்கள் நிகழ்ந்தன. இதில் பெரும்பாலானவை கோவிட் பெருந்தொற்றால் விளைந்தவை.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து பேரா. மைக்கேல் மர்மாட், "ஏழ்மையாகவும் சுகாதாரமற்றதாகவும் நம் நாடு மாறி வருகிறது. இங்கு பணக்காரகர்ளால் மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடிகிறது. தங்கள் உடல் ஆரோக்கியம் குறித்து மக்கள் கவலைப்படுகிறார்கள்; ஆனால், வசதி குறைவால் அவர்களால் தங்களை காத்து கொள்ள முடியாமல், அவர்களின் ஆயுட்காலம் குறைகிறது. இது அவர்கள் குற்றமில்லை. அரசியல்வாதிகள்தான் பொதுமக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை தர வேண்டும்; ஆனால், அவர்கள் அவ்வாறு செய்வதில்லை" என தெரிவித்தார்.

    "ஹெல்தி லைஃப் இயர்ஸ்" (healthy life years) எனப்படும் ஆரோக்கிய குறைபாடுகள் ஏதும் இன்றி மனிதர்கள் வாழும் காலகட்டத்தின் அளவு குறைந்து கொண்டே வருவதாக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.

    ×