search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • திருடியவன் பணத்தை எடுத்து கொண்டு பையை டான் நதியில் வீசியுள்ளான்
    • பையில் இருந்த கிரெடிட் கார்டில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டிருந்தது

    வட கிழக்கு ஸ்காட்லேண்டு பகுதியில் உள்ள நகரம், அபர்டீன் (Aberdeen).

    அபர்டீனில் வசிப்பவர் 81 வயதாகும் ஆட்ரி ஹே (Audrey Hay). சுமார் 30 வருடங்களுக்கு முன் இவரது பணியிடத்தில் இவரின் விலை உயர்ந்த கைப்பை திருடு போனது. பறி போன அவர் பையில் அப்போது சுமார் 200 பவுண்ட் பணம் இருந்தது.

    ஆட்ரி காவல்துறையிடம் புகார் அளித்தார். ஆனால், காவல்துறையினரின் தேடலில் கைப்பை கிடைக்கவில்லை.

    திருடியவன் அந்த பையை டான் நதியில் (River Don) வீசி உள்ளான்.

    கடந்த செவ்வாய் அன்று மெய்சி கூட்ஸ் (Maisie Coutts) எனும் 11-வயது சிறுமி தான் வளர்க்கும் நாயுடனும், பெற்றோருடனும் டான் நதிக்கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது கரை ஒதுங்கியிருந்த ஒரு பையை கண்டார். அதில் பேனாக்கள், சில்லறை நாணயங்கள், உதட்டு சாயம், ஆபரணங்கள், சாவி, சில மாத்திரைகள் என பல பொருட்கள் இருந்தன.

    அதில் இருந்த சில கிரெடிட் கார்டுகளில் 1993 வருடம் குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்பையின் மேலே இருந்த சில அடையாளங்கள் மற்றும் உள்ளே இருந்த பொருட்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு உரிமையாளரை தேட தொடங்கினார் அந்த சிறுமி.

    தனது நீண்ட தேடலில் அப்பையின் உரிமையாளரான ஆட்ரியை கண்டு பிடித்தார் மெய்சி. உடனே அவரை தொடர்பு கொண்டு அப்பையை அவரிடமே சேர்த்தார்.


    இது குறித்து ஆட்ரி, "நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இதுதான்" என தெரிவித்தார்.

    "சமூக வலைதளங்களின் தாக்கமும், பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது" என மெய்சியின் தாயார் கூறினார்.

    மெய்சியின் நேர்மைக்கும், உரிமையாளரிடம் பொருளை ஒப்படைக்க அவர் எடுத்த முயற்சிகளுக்கும் சமூக வலைதளங்களிலும், நேரிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

    • புது விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் என அரசு தெரிவித்துள்ளது
    • புதிய விதிகளால் 1,40,000 பேர் வருவது குறைய கூடும் என அரசு கணித்துள்ளது

    இங்கிலாந்தில் கல்வி கற்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வரும் மாணவ மாணவியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக அந்நாட்டு அரசு பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது.

    அதில் முக்கிய அம்சமாக கல்வி கற்க அங்கு செல்லும் மாணவர்கள், இனி பெற்றோர் உட்பட தங்கள் குடும்ப உறுப்பினர்களை தங்களுடன் அழைத்து செல்லவோ, நுழைந்த பிறகு அவர்களை அங்கு வரவழைத்து தங்களுடன் தங்க வைத்து கொள்ளவோ அனுமதி கிடையாது. முதுநிலை ஆராய்ச்சி பட்டங்கள் மற்றும் அரசு நிதியுதவியுடன் பெறப்படும் பட்டங்கள் ஆகியவற்றை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    பிரிட்டிஷ் பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தியர்கள் உட்பட அனைத்து மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த அரசு தீவிரமாக முனைந்துள்ளது.

    புதிய விதிமுறைகள் இம்மாதத்திலிருந்தே அமலுக்கு வரும் எனவும் இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.

    "மக்களுக்கு இங்கிலாந்து அரசு அளித்த வாக்குறுதியின்படி எல்லைகளை பலப்படுத்துவது, அகதிகள் வருகையை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட விஷயங்களில் கடுமையான நடவடிக்கை எடுக்க தொடங்கி விட்டோம். கல்வி கற்க "விசா" பெற்று கொண்டு வரும் பலர், பிறகு இங்கேயே பணி தேடி, இங்கிலாந்திலேயே தங்கி விடுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிமுறை மூலம் சுமார் 1,40,000 பேர் இங்கிலாந்து வருவது குறைய கூடும்" என இங்கிலாந்தின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது அதிகாரபூர்வ எக்ஸ் கணக்கில், "இன்றிலிருந்து இங்கிலாந்தில் கல்வி பயிலும் பெரும்பாலான அயல்நாட்டு மாணவ மாணவியர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களை அழைத்து வருவது முடியாது. 2024 தொடங்கியதுமே இங்கிலாந்து மக்களுக்கு நாங்கள் பணியாற்ற தொடங்கி விட்டோம்" என பதிவிட்டுள்ளார்.

    2019லிருந்து தங்கள் குடும்ப உறுப்பினர்களை இங்கிலாந்திற்கு அழைத்து வரும் மாணவர்களின் எண்ணிக்கை 930 சதவீதம் அதிகரித்திருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    • "இம்மர்சிவ் கேம்ஸ்" விளையாட்டுக்களில் குழந்தைகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்
    • மெய்நிகர் தொழில்நுட்ப விளையாட்டுக்களில் எச்சரிக்கை தேவை என்றார் காவல் ஆணையர்

    சமீப சில வருடங்களாக இணையதளத்தில், "விஆர்" (VR) எனப்படும் மெய்நிகர் உண்மை (Virtual Reality) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயனர்கள் விளையாடும் பல விளையாட்டுக்கள் பிரபலமடைந்துள்ளன.

    வீட்டிற்கு வெளியே செல்லாமல் குழுந்தைகளால் விளையாட முடியும் என்பதால் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இதற்கு தேவையான ஹெட்செட் போன்ற உபகரணங்களை வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர்.

    மெடாவெர்ஸ் (Metaverse) எனப்படும் வளர்ந்து வரும் இத்தொழில்நுட்பத்தில், தொலைதூரத்தில் உள்ள ஒருவருடனோ அல்லது பலருடனோ, அல்லது ஏஐ (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாகவோ, குழந்தைகளால் விளையாட முடிகிறது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் 16 வயது சிறுமி ஒருவர் இதற்கான உபகரணங்களுடன் தனது வீட்டில் இருந்தபடியே "இம்மர்சிவ் கேம்ஸ்" (immersive games) எனப்படும் "மூழ்கடிக்கும் விளையாட்டு" வகைகளில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினார்.

    மெடா (Meta) நிறுவனத்தின் (முன்னர் ஃபேஸ்புக்) "ஹொரைசான் வேர்ல்ட்ஸ்" (Horizon Worlds) எனப்படும் அந்த மெய்நிகர் விளையாட்டில் "அவதார்" (avatar) எனப்படும் அவரை போன்றே தோற்றமுடைய மெய்நிகர் வடிவத்துடன், பல இடங்களில் இருந்து பலர் தங்கள் அவதார் உருவங்களுடன் விளையாடி வந்தனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பிற அவதார்கள் (அதனை இயக்குபவர்களால்) அச்சிறுமியின் அவதார் மீது பாலியல் தாக்குதல் நடத்தியது.

    சிறுமி மீது நேரடியான பாலியல் தாக்குதல் நடக்கவில்லை என்றாலும் மெய்நிகரில் நடைபெற்ற "கூட்டு பாலியல் தாக்குதல்" அச்சிறுமிக்கு உணர்வுபூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதனையடுத்து, அச்சிறுமியின் குடும்பத்தினர், இங்கிலாந்து காவல்துறையிடம் இது குறித்து புகாரளித்தனர். காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.

    இவ்விளையாட்டு தளம் குறித்து முன்னரே இது போன்ற புகார்கள் சில முறை எழுப்பபட்டும், சட்ட நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இச்சம்பவம் குறித்து முழு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள இங்கிலாந்து உள்துறை செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி (James Cleverly), "இது போன்ற தாக்குதல்களை குறைத்து மதிப்பிடாமல் தீவிரமாக நாம் பார்க்க வேண்டியது அவசியம்" என தெரிவித்துள்ளார்.

    "வேலி இல்லாத மெய்நிகர் விளையாட்டுகளில் தாக்குதலை நடத்த இரை தேடும் மிருகங்கள் போல் பல விஷமிகள் அதிகம் வர வாய்ப்புள்ளதால், இவற்றை தடுக்கும் விதமாக சட்டதிட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்" என இங்கிலாந்து காவல் துறை தலைவர் "இயான் க்ரிஷ்லி" (Ian Critchley) தெரிவித்துள்ளார்.

    வெளியில் விளையாட சென்றால் மட்டும்தான் ஆபத்து என எண்ணி வீட்டிற்கு உள்ளே குழந்தைகள், நவீன தொழில்நுட்பங்களை பயனபடுத்தும் போது அவர்களின் விளையாட்டுக்களை பெற்றோர் கண்காணிக்காமல் இருப்பது தவறு என இணையதள வல்லுனர்கள் எச்சரிக்கின்றனர்.

    • உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியது.
    • கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என அதிகாரிகள் கூறினர்.

    லண்டன்:

    உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள் ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன.

    இதற்கிடையே, உக்ரைன் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று முன்தினம் பகலில் தொடங்கி இரவு வரை நீடித்த இந்த தாக்குதலின்போது 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் ஏவப்பட்டன. இதில் பொதுமக்கள் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கீவ் உள்பட 6 நகரங்களைக் குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் விளாடிமிர் புதினை வெற்றி பெற விடமாட்டோம். உக்ரைனுடன் நாங்கள் தொடர்ந்து நிற்போம் என தெரிவித்தார்.

    • கடந்த 14-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.
    • பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர்.

    பாரீஸ்:

    துபாயில் இருந்து மத்திய அமெரிக்காவில் உள்ள நிகரகுவாவுக்கு 303 இந்தியப் பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானம் கடந்த 14-ந் தேதி (வியாழக்கிழமை) பிரான்ஸ் நாட்டின் வெட்ரி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.

    இந்த விமானம் மூலம் மனித கடத்தல் மேற்கொள்ளப்படுவதாக தகவல் வந்ததையடுத்து பிரான்ஸ் அதிகாரிகள் இந்த விமானத்தைத் தடுத்து நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் பேசி வருவதாகவும், இந்திய பயணிகளுக்கு உரிய வசதிகள் வழங்க கேட்டுக் கொண்டுள்ளதாகவும் மத்திய அரசு சனிக்கிழமை தெரிவித்தது.

    மேலும், இப்பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டது. இந்நிலையில், பயணிகளிடம் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், பயணிகள் இன்று முதல் தங்கள் பயணத்தைத் தொடர அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளியானது. பயணிகள் அனைவரும் 3 நாட்களாக விமான நிலையத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். இன்று அந்த விமானம் புறப்பட்டு சென்றது.

    • நவம்பர் 25லிருந்து கருத்தடை மாத்திரைகளை எடுத்து கொள்ள தொடங்கினார்
    • சிடி ஸ்கேன் பரிசோதனையில் மூளைக்கட்டி இருப்பது கண்டறியப்பட்டது

    இங்கிலாந்தின் கிழக்கு மிட்லேண்ட்ஸ் (East Midlands) பிராந்தியத்தில் உள்ளது லின்கன்ஷையர் (Lincolnshire) பகுதி. இங்கு தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தவர், 16-வயதான பள்ளிச்சிறுமி லேலா கான் (Layla Khan).

    சுமார் 3 வாரங்களுக்கு முன்பு லேலாவிற்கு மாத விடாய் கால வயிற்று வலி தொடங்கியது. அவரது தோழிகள் வலியை குறைப்பதற்கு கருத்தடை மாத்திரை எடுத்து கொள்ள ஆலோசனை கூறினார்கள்.

    நவம்பர் 25லிருந்து லேலாவும் கருத்தடை மாத்திரைகளை தினமும் எடுத்து கொள்ள துவங்கினார்.

    டிசம்பர் 5 காலகட்டத்தில் லேலாவிற்கு வயிற்று வலியுடன் தலைவலியும் சேர்ந்து கொண்டது. அந்த வார இறுதியில் அவர் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை வாந்தி எடுக்க தொடங்கினார்.

    இதையடுத்து, அவரது குடும்பத்தினர் க்ரிம்ஸ்பி (Grimsby) பகுதியில் இருந்த ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். "ஸ்டமக் பக்" (stomach bug) என பொதுவாக அழைக்கப்படும் வைரஸ் தாக்குதலில் வரும் இரைப்பை குடல் அழற்சி (viral gastroenteritis) நோயால் லேலா தாக்கபப்ட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இதையடுத்து, மீண்டும் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட லேலாவின் நிலை மறு நாள் மோசமடைய தொடங்கி, வலியில் அலற தொடங்கினார். மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல குடும்பத்தினர் முனைந்த போது நடக்க கூட இயலாமல் குளியலறையில் மயங்கி விழுந்தார்.

    இதையடுத்து, அருகிலிருந்த "டயானா, பிரின்சஸ் ஆஃப் வேல்ஸ்" மருத்துவமனைக்கு லேலாவை அவர் தாயாரும், உறவினரும் காரில் கொண்டு சென்றனர். அங்கு நடத்தப்பட்ட சிடி ஸ்கேன் பரிசோதனையில் லேலாவிற்கு மூளையில் ரத்த கட்டி இருப்பது கண்டறியப்பட்டது.

    டிசம்பர் 13 அன்று, ஹல் ராயல் மருத்துவமனையில் அக்கட்டியை அகற்ற லேலாவிற்கு மூளை அறுவை சிகிச்சை நடந்தது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் துரதிர்ஷ்டவசமாக மூளைச்சாவு அடைந்து விட்டார்.

    குதூகலமாக கிறிஸ்துமஸ் கொண்டாட நினைத்த லேலா குடும்பம் அவரை இழந்த சோகத்தில் தவிக்கிறது.

    லேலாவின் குடும்பத்தினர் அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர். அவை 5 உயிர்களை காத்ததாக லேலாவின் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டது.

    தக்க சமயத்தில் தகுந்த மருத்துவ ஆலோசனையை பெறாமல் பிறர் பரிந்துரையில் மருந்துகள் உட்கொள்வதில் அதிக ஆபத்து உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

    • சிரியா தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
    • உலக அளவில் செலவு குறைவான 10 நகரங்களின் பட்டியலில் சென்னை இடம்பெற்றுள்ளது.

    லண்டன்:

    லண்டனைச் சேர்ந்த பிசினஸ் எகானமிஸ்ட் இன்டலிஜன்ட் யூனிட் என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

    இந்நிலையில், அந்த அமைப்பின் இந்த ஆண்டுக்கான உலகின் செலவு குறைந்த நகரங்களின் பட்டியலில் 2 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன.

    அகமதாபாத் 8-வது இடத்தையும், சென்னை 10-வது இடத்தையும் பிடித்துள்ளன.

    சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் உலகின் மிகவும் குறைவான செலவு நகரங்களின் பட்டியலில் முதலிடத்திலும், ஈரான் நாட்டின் டெஹ்ரான் இரண்டாவது இடத்திலும், லிபியாவின் திரிபோலி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

    • ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.
    • கைதானவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இங்கிலாந்து நாட்டில் உள்ள எசெக்ஸ் பகுதியை சேர்ந்தவர் டேரன் ஸ்டிர்லிங். 58 வயதான இவர் மீது போதைப்பொருள் வினியோகம் செய்த வழக்குகள் உள்ளன. இந்த வழக்குகளில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    இந்நிலையில் சமீபத்தில் ஸ்டிர்லிங் ஆன்லைனில் சட்ட விரோதமான பொருட்களை பரிமாறி கொள்வதற்காக பயன்படுத்தப்படும் என்க்ரோசாட் தளத்தில் தனது 'செல்பி' புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அவர் ஒரு கப்பலில் மேல் சட்டை அணியாமல் இருந்தார். இதற்கிடையே போலீசார் ஸ்டிர்லிங்கை பிடிப்பதற்காக என்க்ரோசாட் தளத்தை கண்காணித்து வந்த நிலையில் ஸ்டிர்லிங் தனது செல்பி புகைப்படத்தை பகிர்ந்ததை கண்ட போலீசார் அதன் மூலம் அவரது இருப்பிடத்தையும் கண்டுபிடித்தனர்.

    அதன்படி கப்பலில் பதுங்கி இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஏராளமான செல்போன்கள் மற்றும் கஞ்சா, நூற்றுக்கணக்கான போதை மாத்திரைகள், சிக்னல் ஜாமர் கருவி ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டி நடைபெற்றது.
    • இதில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியை வீழ்த்தினார்.

    லண்டன்:

    டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் காலிறுதிப் போட்டியில் செர்பிய வீரர் ஜோகோவிச், இங்கிலாந்து வீரர் கேமரூன் நூரியுடன் மோதினார்.

    இதில் ஜோகோவிச் 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

    போட்டியின் போது ஜோகோவிச் விளையாடுகையில் இங்கிலாந்து ரசிகர்கள் டிரம்ஸ் கொட்டி வெறுப்பேற்றினர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச், போட்டிக்கு பிறகு பேசுகையில், வாயை மூடுங்கள், அமைதியாக இருங்கள். விளையாட்டு வீரர்களை மதியுங்கள் என காட்டமாக கூறினார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

    • காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்தேன்.
    • காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக பேசுபொருளாகி இருக்கிறது.

    பிரிட்டனில் நடைபெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் நண்பரின் காரை பயன்படுத்தியதை ஒப்புக்கொண்ட வீரருக்கு தடை விதிக்கப்பட்ட சம்பவம் அரங்கேறி இருக்கிறது. கடந்த ஏப்ரல் 7-ம் தேதி நடைபெற்ற 50 மைல் மாரத்தான் ஓட்டப் பந்தயத்தில் ஜோசியா சக்ரெவ்ஸ்கி கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்தார்.

    இந்த நிலையில், பந்தயத்தின் போது அவர் தனது நண்பரின் காரில் சிறிது தூரம் கடந்து வந்ததை ஒப்புக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தயத்தின் போது தனக்கு காயம் ஏற்பட்டதால், காவலர்களிடம் தகவல் தெரிவித்த பிறகே இவ்வாறு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

    ஓட்டப்பந்தயத்தின் போது காரில் பயணித்து வெற்றி பெற்றதற்காக இவர் ஓட்டப் பந்தயங்களில் பங்கேற்க 12 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான உத்தரவை பிரிட்டனை சேர்ந்த விளையாட்டு ஒழுங்குமுறை கூட்டமைப்பு பிறப்பித்து இருக்கிறது. ஓட்டப் பந்தயத்தின் போது காரில் வந்து பரிசு பெற்ற சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி 1926ல் தயாரிக்கப்பட்டது
    • மெக்ஆலன் இந்த வகை மதுபானத்தை 40 பாட்டில்கள் மட்டுமே தயாரித்தது

    "ஸ்காட்ச் விஸ்கி" என பிரபலமடைந்துள்ள ஸ்காட்லேண்டு நாட்டின் விஸ்கி மதுபானம் உலகெங்கும் பலரால் விரும்பப்படுபவை. இவற்றின் தரத்திற்காகவும் சிறப்பான சுவைக்காகவும், மதுபான பிரியர்கள் ஸ்காட்ச் விஸ்கிக்களை என்ன விலை கொடுத்தாவது வாங்குவது வழக்கம்.

    மிக அரிதான பொருட்களை விற்க விரும்புபவர்களுக்கும் அவற்ற வாங்க விரும்புபவர்களுக்கும் இடையே ஏல முறையில் வர்த்தகம் நடத்தும் உலக புகழ் பெற்ற நிறுவனம், சாத்பீ'ஸ் (Sotheby's). பன்னாட்டு நிறுவனமான சாத்பீ'ஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரை மையமாக கொண்டு உலகின் முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்நிறுவனத்தின் லண்டன் கிளையில், இரு தினங்களுக்கு முன், 1926 வருட மெக்ஆலன் ஆடமி சிங்கிள் மால்ட் விஸ்கி (Macallan Adami Single Malt Whiskey) மதுபானம் சுமார் ரூ.22,48,89,885.00 கோடி ($2.7 மில்லியன்) தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த விஸ்கி, இதுவரை ஏலத்தில் விற்கப்பட்ட மதுபான வகைகளில் முன்னர் கிடைத்த தொகையை விட அதிகமாக ஏலம் விடப்பட்டு புதிய சாதனையை படைத்துள்ளது.

    "இந்த ஒரு விஸ்கியைத்தான் உலகின் மது பிரியர்கள் ஏலத்தில் விற்கவும் விரும்புகின்றனர்; வாங்கவும் போட்டி போடுகின்றனர். இந்த மதுபானத்தின் சிறு துளியை நான் ருசி பார்க்க அனுமதிக்கப்பட்டேன். இது மிகவும் வளமையான விஸ்கி. எதிர்பார்த்ததை போலவே இதில் ஏராளமான உலர் பழங்கள் பயன்படுத்தப்பட்டு அவற்றின் திடம் சிறப்பாக உள்ளது" என இந்த ஏல நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜானி ஃபவுல் (Jonny Fowle) இதன் தரம் குறித்து கூறினார்.

    இந்த விஸ்கி உருவாக்கப்பட்ட காலத்தில் இருந்து சுமார் 60 வருட காலம் கருமையான ஓக் ஷெர்ரி (black oak sherry) பீப்பாய்களில் ஊற வைக்கப்பட்டது. அதன் பிறகு 1986ல் இது பாட்டிலில் அடைக்கப்பட்டது.

    இந்நிறுவனத்தின் தயாரிப்புகளில் இது போன்ற விஸ்கி, மொத்தம் 40 மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது; ஆனால், இவை வெளிச்சந்தையில் விற்பனைக்கு வரவில்லை. இவற்றை தயாரித்த மெக்ஆலன் நிறுவனம் தங்களின் மிக முக்கிய வாடிக்கையாளர்களுக்கே இவற்றை அளித்துள்ளது.

    40 பாட்டில்களையும் வெவ்வேறு வகையில் மெக்ஆலன் நிறுவனம் லேபிள் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    இதனால், வெவ்வேறு காலகட்டங்களில் இவை ஏலத்திற்கு வரும் போது, மிக அதிக தொகையை பெற்று தருகின்றன.

    • சிமர்ஜித்சிங் நங்கபாலுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
    • சிமர்ஜித்சிங் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

    லண்டன்:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனின் தெற்கு மேற்கில் உள்ள ஹவுன்ஸ்லோ பகுதியில் வசித்து வந்தவர் சீக்கிய வம்சாவளியை சேர்ந்த சிமர்ஜித்சிங் நங்கபால் (வயது 17).

    இந்தநிலையில் சிமர்ஜித்சிங் நங்கபாலுக்கும், சிலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. சாலையில் ஏற்பட்ட இந்த தகராறில் கைகலப்பு ஏற்பட்டது.

    இதில் சிமர்ஜித்சிங்கை அக்கும்பல் கத்தியால் சரமாரியாக குத்தியது. ரத்த வெள்ளத்தில் விழுந்த அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிமர்ஜித்சிங் உயிரிழந்தார்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். சிமர்ஜித்சிங் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×