search icon
என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இது இகுனாடோன்ஷியன் வகையை சேர்ந்தது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
    • கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன

    இங்கிலாந்தின் டார்செட் (Dorset) கவுன்டியில் உள்ள பூலே ஹார்பர் (Poole Harbour) பகுதியில் உள்ள பல தீவுகளில் ஒன்று பிரவுன்சீ தீவு (Brownsea Island).

    இங்குள்ள இயற்கை வனாந்திர பகுதியில் ஒரு டைனோசரின் கால் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இது 140 மில்லியன் வருடங்கள் பழைமை உடையது என தெரிய வந்திருக்கிறது. இதனை இகுனாடோன்ஷியன் (igunodontian) எனும் வகையை சேர்ந்த டைனோசரின் கால் அடையாளம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

    இந்த கால் அடையாளத்தில் 3 விரல்கள் காணப்படுகின்றன. அந்த தீவிலுள்ள பிரவுன்சீ கேஸில் (Brownsea Castle) பகுதியில் ஒரு வனத்துறை அதிகாரி சென்று கொண்டிருக்கும் போது கண்டுபிடித்திருக்கிறார்.

    • பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இல்லத்தில் தீபாவளி விழா நடந்தது.
    • இதில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

    லண்டன்:

    இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் 5 நாள் பயணமாக இங்கிலாந்து சென்றுள்ளார்.

    சமீபத்தில் தீபாவளி பண்டிகை இங்கிலாந்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு தேநீர் விருந்து அளித்தார்.

    இந்நிலையில், தீபாவளி விருந்தில் மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவரது மனைவி கியாகோ உடன் கலந்துகொண்டார்.

    இந்த விருந்து நிகழ்ச்சியின்போது இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் தீபாவளி பரிசாக இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி கையெழுத்திட்ட பேட்டை வழங்கினார்.

    • தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
    • தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    மேற்கு லண்டனில் உள்ள ஹவுன்ஸ்லோவில் உள்ள ஆப்கானிஸ்தானை சேர்ந்த குடும்பம் வசித்து வந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி அன்று இரவு 10.30 மணியளவில் இவர்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் தீடிரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென இரண்டு மாடிகளுக்கும் பரவியது.

    இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். அந்த வீட்டில் சீமா ராத்ரா என்ற பெண் தனது மூன்று குழந்தைகளுடன் இறந்துள்ளார். விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிர் தப்பிய குழந்தைகளின் தந்தை ஆரோன் கிஷன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும், அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு நபரும் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். தீ விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

    தீபாவளி கொண்டாட்டத்தின்போது அப்பகுதியில் அதிகளவில் பட்டாசு சத்தம் இருந்ததாகவும், அதனால் தீ விபத்திற்கு பட்டாசு வெடித்தது காரணமாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    இதுகுறித்து, தலைமை கண்காணிப்பாளர் சீன் வில்சன் கூறுகையில், " இது ஒரு பயங்கரமான சம்பவம். இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள காரணத்தைக் கண்டறிய லண்டன் தீயணைப்புப் படை அயராது உழைக்கும்" என்று கூறினார்.

    • காவல்துறை நடவடிக்கை குறித்து விமர்சனம் செய்த உள்துறை மந்திரி பதவியில் இருந்து நீக்கம்.
    • டேவிட் கேமரூன் கடந்த 2016-ம் ஆண்டு தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

    ஹமாஸ்- இஸ்ரேல் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை ஒழித்துக்கட்டும் நடவடிக்கையாக காசா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

    பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் உலகின் பல்வேறு இடங்களில் பாலஸ்தீனர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக இஸ்ரேலுக்கு ஆதரவாக யூதர்கள் உள்ளிட்ட மக்கள் எதிர்போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இங்கிலாந்தில் இதுதொடர்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது இஸ்ரேலுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். இதை உள்துறை மந்திரியான சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இவர் கருத்திற்கு கடும் விமர்சனம் எழுப்பப்பட்டது.

    இதனால் பிரதமர் ரிஷி சுனக், அவரை கேபினட் மந்திரிசபையில் இருந்து நீக்க முடிவு செய்தார். மந்திரி பதவியில் இருந்து விலக கேட்டுக் கொண்ட நிலையில், அவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.

    இதனால் உள்துறை மந்திரி பதவியில் இருந்து சுயெல்லா நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த ஜேம்ஸ் கிளேவெர்லியை உள்துறை மந்திரியாக நியமித்துள்ளார். அதேவேளையில் முன்னாள் பிரதமர் டுவிட் கேமரூனை வெளியுறவுத்துறை மந்திரியாக நியமித்துள்ளார்.

    57 வயதாகும் டேவிட் கேமரூன், பிரெக்சிட் வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததன் காரணமாக 2016-ல் தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதே வருடம் எம்.பி. பதவியில் இருந்தும் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம் ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக பதவி ஏற்றுக் கொண்டார். அதன்பின் தற்போது முதன்முறையாக உயர் மந்திரிகளை மாற்றியமைத்துள்ளார்.

    • 30 நாட்களுக்கு மேலாக இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடர்ந்து வருகிறது
    • 82 இஸ்ரேல் ஆதரவாளர்களை லண்டன் காவல்துறை கைது செய்துள்ளது

    அக்டோபர் 7 தொடங்கி பாலஸ்தீன காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் போர், 1 மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை தொடர்கின்றன. மேலும், அங்கெல்லாம் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் ஆதரவாக பலர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    1918ல் முதலாம் உலக போரை (World War I) நிறுத்தவும், அமைதி பேச்சுவார்த்தையை துவங்கவும் நவம்பர் 11 அன்று ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதை கொண்டாடும் வகையில் இங்கிலாந்தில் ஆண்டுதோறும் இந்த நாள், "ஆர்மிஸ்டைஸ் தினம்" (Armistice Day) என கொண்டாடப்பட்டு, 11-ஆம் மாதம் (நவம்பர்), 11-ஆம் தேதி, காலை 11:00 மணியளவில் இரண்டு நிமிட அமைதி கடைபிடிக்கப்படும்.

    நேற்று, ஆர்மிஸ்டிஸ் தினத்தின் போது பாலஸ்தீன ஆதரவாளர்கள் பங்கு பெற்ற ஒரு போராட்டம் லண்டனில் உள்ள ஹைட் பார்க் கார்னர் (Hyde Park Corner) பகுதியில் நடைபெற்றது.

    மிக பெரிய அளவில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் சுமார் 3 லட்சம் பேர் ஹமாஸ் அமைப்பினருக்கும், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பினர். "பாலஸ்தீனத்தை விடுதலை செய்", "உடனடி போர்நிறுத்தம் தேவை", "நதியிலிருந்து கடல் வரை பாலஸ்தீனம் சுதந்திரம் பெற வேண்டும்" போன்ற கோஷங்கள் முழங்கப்பட்டன.

    அதில் பங்கு பெற்ற ஆதரவாளர்கள், "உக்ரைன் சுதந்திரத்திற்கு குரல் எழுப்பும் நாடுகள், பாலஸ்தீன சுதந்திரத்திற்கு ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை?" என கேள்வி எழுப்பினர்.

    இவர்களுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி இஸ்ரேல் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அவர்களை லண்டன் நகர் காவல்துறை தடுத்து விட்டது. அவர்களில் 80க்கும் மேற்பட்டோர் லண்டன் பெருநகர காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கடந்த வாரம் நடைபெற்ற போராட்டங்களில் பாலஸ்தீன ஆதரவாளர்களின் அத்துமீறலை காவல்துறை கண்டிக்கவில்லை என இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் விமர்சித்திருந்தார். இஸ்ரேல் ஆதரவாளர்களுக்கு பல கட்டுப்பாடுகளை விதிக்கும் லண்டன் பெருநகர காவல்துறை, பாலஸ்தீன ஆதரவாளர்களின் வன்முறை செயலை கண்டுகொள்ளாமல் விடுவதாக குற்றம் சாட்டினார். இவர் கருத்திற்கு எதிராக கண்டன குரல்கள் எழுப்பப்பட்டது.

    • பேரணிகளில் சில இடங்களில் காவல் கண்காணிப்பை மீறி வன்முறை நடந்தது
    • காசா மக்களுக்கு உதவி கேட்பதாக தெரியவில்லை என சுயெல்லா குற்றம் சாட்டினார்

    இங்கிலாந்தின் உள்துறை மற்றும் பாதுகாப்பு அமைச்சர், இந்திய வம்சாவளியை சேர்ந்த சுயெல்லா பிரேவர்மேன் (Suella Braverman).

    இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா உட்பட மேற்கத்திய நாடுகள் இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளன. ஆனால், இங்கிலாந்து மக்களில் பலர் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கின்றனர்.

    ஹமாஸ் அமைப்பை ஆதரித்து இங்கிலாந்தில் பேரணிகள் நடந்தன. சில இடங்களில் வன்முறையும் நடந்தன. தொடர்ந்து, போராட்டங்கள் நடத்த அனுமதி கோரி ஹமாஸ் ஆதரவினர் காவல்துறையினரிடம் மனு அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்து கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

    அதில் அவர் தெரிவித்ததாவது:

    யூதர்கள் நடத்தும் கவன ஈர்ப்பு பேரணிகள் காவல்துறைக்கு சவாலாக இல்லை. சமூக ஒழுங்கிற்கு சவால் விடும் வகையில் ஹமாஸ் அமைப்பினரை ஆதரிக்கும் பல லட்சக்கணக்கானவர்கள் சாலையில் இறங்கி வன்முறையில் ஈடுபடும் வகையில் நடந்து கொள்வது சிக்கலை உண்டாக்குகிறது. தொடக்கம் முதலே இந்த போராட்டங்கள் சட்ட சிக்கலை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. ஆங்காங்கே நடைபெறும் வன்முறைகளால் மட்டும் அல்ல; அவர்கள் கையில் கொண்டு செல்லும் பதாகைகள் மற்றும் ஆங்காங்கு அவர்கள் ஒட்டும் சுவரொட்டிகளிலும், அவர்கள் எழுப்பும் கோஷங்களிலும், தகாத வார்த்தைகள் மற்றும் அச்சுறுத்தும் வாசகங்கள் இடம் பெறுகின்றன. இதனை கண்டு கொள்ளாமல் விட முடியாது. இது காசா மக்களுக்கு மனிதாபிமான உதவி கேட்கும் கோஷங்கள் அல்ல. ஒரு குறிப்பிட்ட சிலர், தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட எழுப்பும் கோஷங்கள். காவல்துறை உயரதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பாரபட்சமாக நடந்து கொள்வதாக கருத்து நிலவ தொடங்கியுள்ளது. தேச பற்றுடன் போராடுபவர்களிடம் கண்டிப்புடன் நடந்து கொள்ளும் காவல்துறையினர் சட்டத்தை மீறுபவர்களிடம் ஏன் அந்த கண்டிப்பு காட்டவில்லை? இது ஒரு இரட்டை நிலைப்பாடு. இது குறித்து காவல்துறை உயரதிகாரிகளிடம் பேசியுள்ளேன்.

    இவ்வாறு சுயெல்லா தெரிவித்தார்.

    இவரது கருத்து இடதுசாரிகளுக்கு எதிரானது என குற்றம் சாட்டி சுயெல்லாவை, பிரதமர் ரிஷி சுனக் பதவிநீக்கம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கைகள் இங்கிலாந்தில் பலமாக எழுந்துள்ளன.

    • படகு மூலம் வருபவர்கள் இனிமேல் அடைக்கலாம் கோர முடியாது.
    • விண்ணப்பம் செய்ய முடியாத நிலையில், திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இந்தியா பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் சேர்க்கப்படும் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இதனால் இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்தில் குடியேறியவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்திய நாட்டைச் சேர்ந்தவர்கள் சிறிய படகுகள் மூலமாகவும், வேறு வழிகள் மூலமாகவும் வரும் நிலையில், அடைக்கலம் கேட்டால் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. அவர்கள் அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்ய முடியாது. அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள்.

    இந்தியாவுடன் ஜார்ஜியா நாட்டையும் பட்டியலில் சேர்க்க இருக்கிறது. "சட்டவிரோாத குடியேற்றம் சட்டம் 2023"-ன் படி இங்கிலாந்து நாட்டிற்குள் படகுகள் வருவதை நிறுத்த திட்டமிட்டுள்ளது.

    சமீப காலமாக பல்வேறு நாடுகளில் இருந்து இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக நுழைந்து, அடைக்கலம் கேட்டு விண்ணப்பம் செய்கிறார்கள். அவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதை கட்டுப்படுத்த இங்கிலாந்து புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.

    • 63 வயதான தருண் குலாடி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்
    • தேவையற்ற கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு குலாடி முன்னுரிமை அளிக்கிறார்

    அடுத்த வருடம் மே 2 அன்று, இங்கிலாந்து தலைநகரம் லண்டன் நகரில் அந்நகர மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

    இங்கிலாந்தின் லேபர் கட்சியின் சார்பில் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த சாதிக் கான் தற்போது மேயர் பதவியில் உள்ளார்.

    அடுத்த வருட தேர்தலில் போட்டியிட விரும்புவதாக 20 வருடங்களுக்கு மேல் லண்டனில் வாழும் இந்திய வம்சாவளியை சேர்ந்த 63 வயதாகும் தொழிலதிபர் தருண் குலாடி அறிவித்துள்ளார்.

    தனது விருப்பத்தை கடந்த மாதம் இந்தியாவிற்கு வந்திருந்த போதே அறிவித்திருந்த குலாடி, லண்டன் மக்கள் பாதுகாப்புடன் வாழவும், லண்டன் உலகின் முன்னணி நகரமாக தொடர்வதை உறுதி செய்யவும், அங்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கவும் விரும்புவதாக தெரிவித்திருந்தார்.

    மேயர் தேர்தலில் வென்றால் தான் செயல்படுத்த விரும்புவதாக குலாடி பல திட்டங்களை அறிவித்தார்.

    அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    லண்டனில் வாழ்கின்ற குறைந்த வருமான வசதி மற்றும் நடுத்தர வசதி மக்களுக்கு இன்னும் பல வசதிகள் செய்து தரப்படும். லண்டன் நகரில் பல நாடுகளிலிருந்து மக்கள் வந்து வாழ்வதால் இங்கு வாழும் மக்களின் தாயக நாடுகளுக்கு இடையே ஒரு ஆக்கபூர்வமான இணைப்பு உருவாக்கப்படும். நகர வளர்ச்சிக்கான தடைகள் முற்றிலும் நீக்கப்படும். தற்போது அமைக்கப்பட்டிருக்கும் "தூய்மை பகுதி கட்டுப்பாடுகள்", "குறைவான வாகன போக்குவரத்து பகுதி", வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடுகள் ஆகியவை நீக்கப்படும். குற்ற செயல்கள் அதிகம் நடைபெறும் இடங்களில் அதிகளவு காவல் நிலையங்கள் அமைக்கப்படும். சிக்கன விலையில் வீட்டுவசதி மக்களுக்கு கிடைக்க செய்வது முக்கியமாக பரிசீலிக்கப்படும்.

    இவ்வாறு குலாடி அறிவித்துள்ளார்.

    குலாடியை தவிர சூசன் ஹில், ராப் ப்ளாக்கி ஆகியோர் வேட்பாளர்களாக களம் இறங்கியுள்ளனர்.

    • லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.
    • தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

    லண்டன்:

    இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவரது மனைவி அக்ஷதா மூர்த்தி. இவர் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவார்.

    இந்த நிலையில் ரிஷி சுனக் தனது மனைவியுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். லண்டனில் 10 டவுனிங் தெருவில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் இந்திய சமூகத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

    ரிஷி சுனக், அக்ஷதா மூர்த்தி குத்து விளக்கு ஏற்றி வழிபாடு செய்தனர். அப்போது இந்திய சமூகத்தினருடன் ரிஷி சுனக் கலந்துரையாடினார். தீபாவளி கொண்டாட்டத்தையொட்டி பிரதமர் இல்லம் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் கூறும்போது, "பிரதமர் ரிஷி சுனக், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டவுனிங் தெருவில் உள்ள இல்லத்தில் இந்து சமூகத்தினருடன் இணைந்து கொண்டாடினார். இது இருளுக்கு எதிராக ஒளியின் வெற்றியின் கொண்டாட்டமாகும்.

    இந்த வார இறுதியில் கொண்டாடும் தீபாவளியை முன்னிட்டு இங்கிலாந்து மற்றும் உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளது.

    சமீபத்தில் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வந்த ரிஷி சுனக், கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.
    • முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை.

    அனுபவம் வாய்ந்த டிரைவர்கள் கூட ஒரு புதிய நகரத்தில் வாகனத்தை ஓட்டுவதற்கு கொஞ்சம் சிரமப்படுவார்கள். இந்நிலையில் ஒரு மாணவி சோதனை ஓட்டத்திற்காக 1,000 மைல் தூரம் கார் ஓட்டிய சம்பவம் இங்கிலாந்தில் நடந்துள்ளது.

    அங்குள்ள பெர்க்ஷயர் பகுதியை சேர்ந்தவர் எமிலி டாய்ல். 22 வயதான இவர் அங்குள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறார். இவர் கார் டிரைவிங் சான்றிதழுக்கு விண்ணப்பித்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றார். அதைத்தொடர்ந்து சோதனை ஓட்டத்திற்கு விண்ணப்பித்த அவருக்கு அந்த பகுதியில் உள்ள போக்குவரத்து அலுவலகங்களில் முன்பதிவு செய்தார். ஆனாலும் பல முறை முயற்சித்தும் அவரால் குறிப்பிட்ட தேதியை பெற முடியாத நிலை இருந்தது. இதனால் சோதனை ஓட்டத்திற்காக பல இடங்களில் விண்ணப்பித்த அவருக்கு கடைசியாக வடகிழக்கு ஸ்காட்லாந்தில் உள்ள அபர்டின் பகுதியில் தான் சோதனை ஓட்டத்திற்கு அனுமதி கிடைத்தது.

    இதைத்தொடர்ந்து தனது வீட்டில் இருந்து சுமார் 1,000 மைல் தொலைவில் உள்ள அந்த நகரத்திற்கு சென்று சோதனை ஓட்ட தேர்வில் பங்கேற்ற எமிலி டாய்ல் தேர்ச்சி பெற்றார். அதன்பிறகே நிம்மதி அடைந்த அவர் முதல் விஷயமாக தான் பயிலும் பல்கலைக்கழகத்திற்கு கார் ஓட்டி சென்றுள்ளார்.

    இதுகுறித்து அவரது தாயார் ஆட்ரி கூறுகையில், எமிலி சோதனை ஓட்டத்திற்காக பலமுறை முன்பதிவு செய்தும் குறிப்பிட்ட தேதியை பெற முடியவில்லை. முன்பதிவு செயலிகளில் புக்கிங் செய்த போது பலமுறை ரத்து செய்யப்பட்டதால் 1 வருடமாக சோதனை ஓட்டத்திற்கான தேதியை பெற முடியவில்லை. ஆனாலும் எமிலி தீவிரமாக இருந்து சோதனை ஓட்டத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இங்கிலாந்தை சேர்ந்த பிரபலம் ஆண் நண்பர் பெயரை நெற்றியில் பச்சை குத்தியுள்ளார்.
    • இது பொய் என சமூக வலைத்தளங்களில் கருத்து பரிமாற்றம்.

    ஒரு ஆண் தனது தோழி (காதலி) மீது வைத்திருக்கும் அன்பையும், ஒரு பெண் ஆண் நண்பர் (காதலன்) மீது வைத்துள்ள அன்பையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும் பொது நிகழ்ச்சி நடைபெறும் இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த இடம், சிலர் விமான பயணத்தின்போது கூட அன்பை வெளிப்படுத்துவார்கள். தற்போதைய நவீன காலத்தில் செல்போன் மெசேஜ் உள்ளிட்டவைகள் மூலமும் கவரும் வகையில் அன்பை வெளிப்படுத்துவார்கள். உடலில் பல இடங்களிலும் பச்சைக்குத்துவதும் உண்டு.

    ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது ஆண் நண்பர் (காதலன்) பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த பிரபலம் அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக நேர்மறை விமர்சனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் இது போலியானது எனத் தெரிவித்துள்ளார்.

    ஆனால், அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி வீடியோவிற்கு கீழ் "எனது முகத்தில் ஆண் நண்பரின் பெயரை பெற்றுள்ளேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

    "இது அந்த பெண் பின்தொடர்பவர்களை அதிகரிக்கச் செய்யவும், டாட்டூ கலைஞர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் செய்யும் முயற்சி" எனத் தெரிவித்துள்ளார்.

    மற்றொருவர் "டாட்டூ மெஷினில் ஊசி இல்லை எனவும், இது பிராங்க் வீடியோ. ரத்தம் வரவில்லை. அந்த இடம் சிகப்பாக மாறவில்லை" எனத் தெரிவித்துளள்ளார்.

    இன்னொருவர் "அதை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? உங்கள் காதலரின் பெயரை உங்கள் உடலில் வைத்தால். நீங்கள் பிரிந்து விடுவீர்கள், அது உண்மை" என பதிவிட்டுள்ளார்.

    • பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று
    • இதுநாள் வரை நோய்க்கான சிகிச்சைமுறையில் இது பயன்படுத்தப்பட்டு வந்தது

    உலகெங்கும் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்று கேன்சர் (cancer) எனப்படும் புற்று நோய்.

    ஆண்களையும் பெண்களையும் தாக்க கூடிய புற்றுநோயை, வரும் முன் தடுக்கும் மருத்துவ முறைகள் குறித்து முன்னணி உலக நாடுகள் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.

    பெண்களை அச்சுறுத்தும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோயும் ஒன்று.

    இங்கிலாந்தில், வருடாவருடம் சராசரியாக 47,000 பெண்கள் மார்பக புற்றுநோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். சுமார் 3 லட்சம் பெண்களுக்கு இந்நோய் வருவதற்கான மிதமான மற்றும் அதிக சாத்தியக்கூறுகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், பல வருடங்களாக பெண்களின் மார்பக புற்றுநோய் சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டு வந்த அனஸ்ட்ரசோல் (anastrozole) எனும் மருந்தை தற்போது நோய் தடுப்பு மருந்தாகவும் பயன்படுத்த இங்கிலாந்தின் மருந்து மற்றும் உடலாரோக்கிய பொருட்கள் ஒழுங்குமுறை நிறுவனம் (Medicines And Healthcare Products Regulatory Agency) உரிமம் வழங்கியுள்ளது.

    புற்று நோய் சிகிச்சை மருத்துவர்களும், பெண்களும் இந்த அறிவிப்பை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளனர். அனஸ்ட்ரசோல், காப்புரிமை தேவை இல்லாத மருந்து என்பதால் குறைவான விலையில் இதனை இனி பல மருந்து உற்பத்தி நிறுவனங்கள் தயாரிக்க இயலும். அனஸ்ட்ரசோல் மார்பக புற்றுநோய் வருவதை தடுப்பதில் அதிக திறன் உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

    விலை குறைவாக உள்ளதால் இதுவரை லட்சக்கணக்கில் ஏற்பட்டிருந்த நோய்சிகிச்சைக்கான செலவினங்களை இது குறைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தினமும் 1 மில்லிகிராம் (1 mg) அனஸ்ட்ரசோல் மாத்திரையை 5 வருடங்கள் எடுத்து கொண்ட பெண்களில் 50 சதவீதம் பேருக்கு நோய் தாக்குதல் ஏற்படவில்லை என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    "அனஸ்ட்ரசோல் மருந்திற்கு நோய் தடுப்பு சிகிச்சைக்கான அனுமதி வழங்கப்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது. மாதவிடாய் நின்ற பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய்க்கு இதுநாள் வரை இது சிறப்பாக சிகிச்சை மருந்தாக இருந்து வந்தது. இனிமேல் பெண்களுக்கு இந்த நோய் வருவதை தடுக்கவும் இதனை பயன்படுத்த முடியும்" என இது குறித்து இங்கிலாந்தின் சுகாதார அமைச்சர் வில் குவின்ஸ் தெரிவித்தார்.

    ×