search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி- அமெரிக்க உளவுத்துறை தகவல்
    X

    டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி- அமெரிக்க உளவுத்துறை தகவல்

    • டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார்.

    கடந்த 14-ந்தேதி பென் சில்வேனியா மாகாணத்தின் பட்லர் நகரில் டிரம்ப் பிரசாரம் செய்தபோது அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் டிரம்பின் வலது காதில் தோட்டா உரசி சென்றதில் காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இந்த நிலையில் டிரம்பை கொலை செய்ய ஈரானின் சதித்திட்டம் குறித்து அமெரிக்காவிற்கு உளவுத்துறை தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றது.

    இதற்கு அப்போது அதிபராக இருந்த டிரம்ப் உத்தரவிட்டு இருந்தார். இதனால் டிரம்பை கொல்ல ஈரான் சதி செய்துள்ளதாகவும், அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு இந்த தகவல் கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் அட்ரியன் வாட்சன் கூறும்போது, கடந்த நிர்வாகத்தில் இருந்து, முன்னாள் அதிபர் டிரம்ப் நிர்வாக அதிகாரிகளுக்கு எதிராக ஈரானிய அச்சுறுத்தல்களை பல ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம்.

    காசிம் சுலைமானி கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் ஈரானின் முயற்சிகளால் அச்சுறுத்தல்கள் உள்ளன என்றார். மேலும் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய மேத்யூ குரூக்சுக்கும் வெளிநாடு அல்லது உள்நாட்டில் உள்ள சதிகாரர்களுக்கும் இடையே எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று ஈரான் தெரிவித்தது.

    Next Story
    ×