search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    உலக தடுப்பூசி தினம் - ஒரு பார்வை
    X

    உலக தடுப்பூசி தினம் - ஒரு பார்வை

    • தடுப்பூசி விழிப்புணர்விற்கு டபிள்யு.ஹெச்.ஓ. பல முயற்சிகளை எடுத்து வருகிறது
    • 50 லட்சம் பேர் நோய்களினால் இறப்பதை தடுப்பூசிகள் ஆண்டுதோறும் தடுக்கிறது

    பொதுமக்களுக்கு தடுப்பூசிகளின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்ச்சியை உருவாக்கவும், சரியான நேரங்களில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தவும், அதன் மூலம் பல்வேறு நோய்கள் பரவுவதை தடுக்கும் முயற்சிகளை அதிகரிக்கவும் வருடாவருடம் நவம்பர் 10, "உலக தடுப்பூசி தினம்" என கொண்டாடப்படுகிறது.

    டபிள்யு. ஹெச். ஓ. (WHO) எனப்படும் "உலக சுகாதார அமைப்பு" இந்த நோக்கத்திற்காக உலகெங்கிலும் பல சர்வதேச மற்றும் உள்ளூர் குழுக்களுடன் இணைந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடையே தடுப்பூசிகளின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறது.

    மனிதர்களிடம் தோன்றும் பல்வேறு நோய்களுக்கு எதிராக அவர்களது உடலில் எதிர்ப்பு சக்தியை வளர்க்க, நுண்ணுயிரிகளை கொண்டு பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு பிறகு உருவாக்கப்படுபவை தடுப்பூசிகள். இதனை குறித்த மருத்துவ கல்வி "தடுப்பூசியியல்"; ஆங்கிலத்தில் வேக்ஸினாலாஜி (vaccinology).

    நோய்களை, வரும் முன் காப்பதில் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்பது அனுபவபூர்வமாகவே மருத்துவ உலகில் ஒப்பு கொள்ளப்பட்டுள்ளது.

    தொற்று நோய் பரவலை தடுப்பதிலும் தடுப்பூசிகள் பெரும்பங்கு வகிக்கின்றன.

    2019 டிசம்பரில் தொடங்கி 2020ல் உலகம் முழுவதும் பரவிய கொரோனா பெருந்தொற்று பல லட்சக்கணக்கான உயிர்களை பலி வாங்கியது. இதனை எதிர்கொள்ள இந்தியாவில் பாரத் பயோடெக் (Bharat Biotech) எனும் நிறுவனம் தயாரித்த தடுப்பூசிகள் வரையறுக்கப்பட்ட காலகட்டத்தில் மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டது.



    இந்த தடுப்பூசியை பல உலக நாடுகளுக்கு இந்தியா இலவசமாகவே வழங்கியது. இதன் மூலம் பெருமளவு உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

    உலக சுகாதார அமைப்பின் தரவுகளின்படி ஆண்டிற்கு சுமார் 50 லட்சம் பேர் நோய்களினால் இறப்பதை தடுப்பூசிகள் தடுக்கின்றன.

    ஆபத்தை விளைவிக்கும் நோய்களை தடுப்பதிலும், உலகிலிருந்து அபாயகரமான நோய்களை ஒழிப்பதிலும், நோய் பரவுதலை எளிய முறையில் தடுப்பதிலும் மற்றும் எதிர்கால சந்ததியினரை நோய்களிலிருந்து காப்பதிலும் தடுப்பூசிகள் பெரும் பங்கு வகிக்கின்றன.

    சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை போலியோ (poliomyelitis) எனப்படும் தொற்று நோயால், குழந்தைகள் கை அல்லது கால் செயல் இழந்து, வாழும் காலம் முழுவதும் துன்பத்தில் இருந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வந்தது.



    ஆனால், மத்திய அரசின் தீவிர முயற்சியால் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட இலவச பல்ஸ் போலியோ (pulse polio) தடுப்பூசி திட்டம், அந்த நோயை இந்தியாவிலிருந்தே முற்றிலும் ஒழித்தது குறிப்பிடத்தக்கது.


    2023 உலக தடுப்பூசி தினத்திற்கான கருப்பொருளாக (theme) உலக சுகாதார அமைப்பு "பிக் கேட்ச்-அப்" எனும் தலைப்பை எடுத்து கொண்டுள்ளது.

    தடுப்பூசிகளை செலுத்தி கொள்வதிலிருந்து விடுபட்ட குழந்தைகளை தேடிச்சென்று அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் முக்கிய நோக்கத்தை மையமாக கொண்டு, இந்த கருப்பொருள் இந்த வருடம் பிரச்சார பொருளாக பயன்படுத்தப்படுகிறது.

    Next Story
    ×