search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    எங்களுக்கு எதிராக நடுவர்கள் செயல்பட்டனர்- பிராத்வெய்ட் குற்றச்சாட்டு
    X

    எங்களுக்கு எதிராக நடுவர்கள் செயல்பட்டனர்- பிராத்வெய்ட் குற்றச்சாட்டு

    உலகக்கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுடனான ஆட்டத்தில் எங்களுக்கு எதிராக நடுவர்கள் செயல்பட்டனர் என வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் குற்றம்சாட்டினார்.
    நாட்டிங்காம்:

    உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

    இந்த ஆட்டத்தில் நடுவர்கள் கிறிஸ் கப்பானி (நியூசிலாந்து), ருச்சிரா பாலியாகுருகே (இலங்கை) ஆகியோரின் தீர்ப்புகள் சர்ச்சையை கிளப்பின. அவர்கள் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக நடந்து கொண்டது போலவே தெரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் புயல்வேக பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்லுக்கு (21 ரன்) பேட்டில் படாத பந்துக்கு நடுவர் கப்பானி விரலை உயர்த்தினார். இதே போல் ஸ்டம்பை விட்டு விலகிச் சென்ற பந்துக்கு எல்.பி.டபிள்யூ. வழங்கினார். இரண்டு முறையும் கெய்ல் டி.ஆர்.எஸ். முறைப்படி அப்பீல் செய்து தப்பினார். கெய்ல் ஆட்டம் இழப்பதற்கு முந்தைய பந்தை மிட்செல் ஸ்டார்க் கிரீசுக்கு வெளியே காலை வைத்து நோ-பாலாக வீசியதை நடுவர் கண்டுகொள்ளவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மிகுந்த எரிச்சலுக்கு உள்ளானார்கள்.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நடுவர்கள் எங்களுக்கு எதிராக செயல்பட்டனர் என வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் கார்லோஸ் பிராத்வெய்ட் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:

    இதை சொல்வதால் எனக்கு அபராதம் விதிக்கப்படுமா என்பது தெரியாது. ஆனால் நடுவர்களின் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருந்தது. நாங்கள் எங்களுக்குரிய டி.ஆர்.எஸ். வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டி இருந்தது. ஏனெனில் ஒவ்வொரு முறையும் எங்களது காலுறையில் (பேடு) பந்து படும்போதெல்லாம் அவுட் என்று நடுவர் விரலை உயர்த்துகிறார்.

    ஆனால் ஆஸ்திரேலியா பேட்டிங்கின் போது அவர்களது காலுறையில் பந்து படும்போது எல்.பி.டபிள்யூ. கேட்டு முறையிட்டால் நடுவர் கையை தொங்கப் போட்டு விடுகிறார். அதற்கு நாங்கள் டி.ஆர்.எஸ். வாய்ப்பை பயன்படுத்தி எப்போது ரீப்ளேயை பார்த்தாலும் பந்து ஸ்டம்பை விட்டு விலகிச்செல்கிறது. அதே சமயம் நாங்கள் பேட்டிங் செய்யும் போது இதைச் செய்தால் பந்து ஸ்டம்பை தாக்குகிறது. நான் ஒன்றும் தொழில்நுட்பத்தை அறியாதவன் அல்ல. ஆனாலும் இது ஏன் நடக்கிறது என்பது புரியவில்லை.

    இந்த போட்டியில் மட்டுமல்ல, சில ஆண்டுகளாகவே இது போன்ற பிரச்சனைகளை பார்த்து வருகிறேன் என தெரிவித்தார்.
    Next Story
    ×