search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: இந்தியாவின் அதிரடி தொடருமா?
    X

    ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்: இந்தியாவின் அதிரடி தொடருமா?

    லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன.
    12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெற்று வருகிறது. கடந்த 30-ந்தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 10 நாடுகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ‘ரவுண்டு ராபின்’ முறையில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணிக்கும் 9 ஆட்டம் இருக்கும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளுடன் அரை இறுதிக்கு தகுதிபெறும்.

    விராட் கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டியில் வெற்றியுடன் கணக்கை தொடங்கியது. முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை நாளை (9-ந்தேதி) எதிர்கொள்கிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

    தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்தது போல இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். இந்திய அணி தனது அதிரடியை நீட்டித்துக் கொள்ளவும் ஆர்வத்தில் உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்த தொடரில் சிறப்பாக ஆடி வருவதால் சவாலாக இருக்கும்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச்சு முக்கிய பங்கு வகித்தது. சுழற்பந்து வீரர் யசுவேந்திர சாஹலும், வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் நேர்த்தியாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதேபோல புவனேஷ்வர் குமாரும், குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

    ரோகித் சர்மா சதம் அடித்து சிறப்பான இன்னிங்சை வெளிப்படுத்தினார். அதிரடி பேட்ஸ்மேனான அவர் மீதான எதிர்பார்ப்பு நாளைய ஆட்டத்திலும் இருக்கிறது. இதேபோல டோனி, ஹர்திக் பாண்டியா ஆகியோரும் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், தவான், கேதர் ஜாதவ் போன்ற பேட்ஸ்மேன்களும் முத்திரை பதிக்க கூடியவர்கள்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆடுகளத் தன்மையை பொறுத்து மாற்றம் செய்யப்படலாம்.

    ஆஸ்திரேலிய அணி தான் மோதிய 2 ஆட்டத்திலும் வென்று மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸை 15 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    இந்தியாவை வீழ்த்தி அந்த அணி ‘ஹாட்ரிக்‘ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சம பலத்துடன் திகழ்கிறது.



    பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் பந்து வீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக பந்து வீச்சாளரான நாதன் கவுல்டர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

    லண்டனில் நேற்று பெய்த மழையால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது. இந்த வார இறுதி வரை மழை வாய்ப்பு இருப்பதால் நாளைய ஆட்டம் பாதிக்குமா? என்ற அச்சமும் இருக்கிறது. பாகிஸ்தான் - இலங்கை அணிகள் கார்டிப் மைதானத்தில் நேற்று மோத இருந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழையால் ரத்து செய்யப்பட்டது.

    இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவிடம் மோதிய ஆட்டத்தில் 35 ரன்னில் தோற்று இருந்தது. இதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் முழு திறமையை பயன்படுத்த வேண்டும். உலகக்கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலியா 8-3 என்ற அளவில் முன்னிலையில் இருக்கிறது.
    Next Story
    ×