search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஆப்கானிஸ்தானை போராடி வென்றது முக்கியமானது: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு
    X

    ஆப்கானிஸ்தானை போராடி வென்றது முக்கியமானது: பந்து வீச்சாளர்களுக்கு கோலி பாராட்டு

    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக போராடி வென்றது முக்கியமானது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    உலகக்கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தானை கடும் போராட்டத்துக்கு பிறகு வீழ்த்தி இந்தியா 4-வது வெற்றியை பெற்றது. கடைசி ஒவரில்தான் இந்தியா வெற்றி பெற்றது. பும்ரா மற்றும் ஷமியின் கடைசி கட்ட ஓவர்கள் சிறப்பாக அமைந்ததால் வெற்றி கிட்டியது.

    இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘அதிக ரன்களை குவிக்க வேண்டும் என்பதற்காக ‘டாஸ்’ வென்றதும் பேட்டிங்கை தேர்வு செய்தேன். ஆனால் அதன் பிறகுதான் ஆடுகளம் மெதுவாக இருந்தது தெரிய வந்தது. இதனால் 260 அல்லது 270 ரன்னை எடுத்தால் நல்ல ஸ்கோர் என்று கருதினேன்.

    ஒரு கட்டத்தில் எனது மனதில் என்ன நடக்குமோ? என்ற சந்தேகம் வந்துவிட்டது. பிட்சின் தன்மையை கருத்தில் கொண்டு ஒன்று, இரண்டு ரன்களை அடிக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆப்கானிஸ்தான் அணியில் 3 சிறந்த சுழற்பந்து வீரர்கள் இருந்தனர். எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியாத வகையில் அவர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். முகமது நபி மிகவும் அபாரமாக வீசினார்.

    எங்களது பந்து வீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இந்த வெற்றியை பெற்று தந்தனர். பும்ரா எந்த நேரத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர். இந்தப்போட்டியில் அவர் சிறப்பாக பந்து வீசினார். முகமது ஷமி கடைசி ஓவரை அபாரமாக வீசினார். விஜய் சங்கரும் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார்.



    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடி பெற்ற இந்த வெற்றி எங்களுக்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு வீரரும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள். உலகக்கோப்பையில் ஆடுவது ஒவ்வொரு வீரருக்கும் பெருமையானதாகும்’’ என்றார்.

    இந்திய அணி 6-வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை வருகிற 27-ந்தேதி சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து 6-வது தோல்வியை தழுவியது. அந்த அணி கடுமையாக போராடிதான் வெற்றியை பறிகொடுத்தது. போட்டியில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரது மனதிலும் இடம் பெற்றுவிட்டனர். அந்த அணி 7-வது ஆட்டத்தில் வங்காள தேசத்தை நாளை எதிர்கொள்கிறது.
    Next Story
    ×