search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
    X

    நெல்லையப்பர் கோவிலில் இன்று தேரோட்டம் - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

    பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    தென் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவாலயம், ஆசியாவின் மிகப்பெரிய சிவாலயம், தமிழகத்தின் 3-வது பெரிய தேரை கொண்ட கோவில் என்ற பல்வேறு சிறப்புகளை உடையது நெல்லையப்பர் கோவில். இந்த கோவில் 14 ஏக்கர் நிலப்பரப்புடையது. அகஸ்தியர் கருவூர் சித்தர் உள்ளிட்ட பல சித்தர்கள் வழிபட்ட ஸ்தலமாகும். இந்த கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாக்களில் ஆண்டுதோறும் ஆனிப்பெருந்திருவிழா கோலாகலமாக நடைபெறும். ஆனி திருவிழாவையொட்டி தேரோட்டமும் நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான ஆனிப்பெருந்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு தினமும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவை யொட்டி தினமும் காலை மற்றும் இரவில் சுவாமி, அம்பாள், பரிவார மூர்த்திகளுடன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்தனர்.

    விழாவின் 8-ம் திருவிழா வான நேற்று மாலை சுவாமி கங்காளநாதர் தங்க சப்பரத்தில் வீதிஉலாவும், இரவு சுவாமி தங்க கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் தங்ககிளி வாகனத் திலும் வீதி உலா நடந்தது. நள்ளிரவு 12 மணிக்கு தேரடி கருப்பசாமி கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அலங்கார படைப்பு தீபாராதனையும், அன்னதானமும் நடந்தது.

    இதை தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-வது நாளான இன்று காலை நடந்தது. இதையொட்டி அதிகாலை மேளதாளம் முழங்க சுவாமி, அம்பாள் தேரில் எழுந் தருளினர். தாமரை மலர் மாலை உள்ளிட்ட மாலைகள் சுவாமி, அம்பாளுக்கு அணிவிக்கப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தன. தேரோட்டத்தை காண காலை 6 மணி முதலே பக்தர்கள் நெல்லை டவுன் ரத வீதிகளில் குவிய தொடங்கினார்கள்.



    காலை 9.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் சுவாமி தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். அவருடன் எம்.பி.க்கள் பிரபாகரன், முத்துக்கருப்பன், ஏ.எல்.எஸ். லட்சுமணன் எம்.எல்.ஏ.ஆகியோரும் சேர்ந்து வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    “ஓம் நமசிவாய, தென்னாடு டைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி“ என்று பக்தர்கள் பக்தி கோ‌‌ஷங்கள் எழுப்பி, தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு மேளதாளம்,, பஞ்சவாத்தியங்கள் முழங்கின. யானை ஊர்வலமாக சென்றது. ஒரு வடத்தை பெண்களும், மீதி 3 வடங்களை இளைஞர்களும், பெரியவர்களும் பிடித்து இழுத்தனர். தேருக்கு பின்னால் இளைஞர்கள் தடி போட்டனர். தேர் காலை 11 மணிக்கு வாகையடி முனையை வந்தடைந்தது. பகல் 12 மணி அளவில், சந்தி பிள்ளையார் கோவில் திருப்பத்தை தேர் கடந்தது.

    அங்கிருந்து சற்று நேரத்தில் தேர், லாலாசத்திரம் முக்கு பகுதியை வந்து சேர்ந்தது. பின்னர் வடக்கு புறமாக உள்ள போத்தீஸ் கார்னருக்கு சுவாமி தேர் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. தொடர்ந்து காந்திமதி அம்பாள் தேரை பக்தர்கள் இழுத்தனர். இதற்கிடையே சுவாமி தேரை நிலைக்கு கொண்டு வந்து நிறுத்தும் பணியை பக்தர்கள் மேற் கொண்டனர்.



    அதன் பின்னர் அம்பாள் தேர் இழுக்கப்பட்டு நிலைக்கு கொண்டு வரப்படுகிறது. முன்னதாக விநாயகர் தேர், சுப்பிரமணியர் தேர்கள் இழுக்கப்பட்டன. இறுதியாக சண்டிகேசுவரர் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. தேரோட்டத்தையொட்டி நெல்லை மாவட்டத்துக்கு இன்று விடுமுறை விடப் பட்டிருந்தது. இதனால் தேரோட்டத்தை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர். 4 ரதவீதிகள் முழுவதும் காணும் இடமெல்லாம் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. விழாவையொட்டி 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்தனர். மேலும் ஊர்க்காவல் படையினர், பட்டாலியன் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்.

    விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் மகேந்திர குமார் ரத்தோட் துணை போலீஸ் கமி‌‌ஷனர்கள் சுகுணாசிங், பெரோஸ்கான், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், இந்து அறநிலையத்துறை இணை ஆணையாளர் பரஞ்சோதி, கோவில் நிர்வாக அதிகாரி ரோஷினி, பேஸ்கால் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தேரோட்டத்தையொட்டி நெல்லையப்பர் கோவில் முன்பு மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் பக்தர்களின் வசதிக்காக 4 ரதவீதிகளிலும் 18-க்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. லாரிகள் மூலமும் குடிநீர் வசதி செய்யப்பட்டு இருந்தது. மேலும் 8 இடங்களில் தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தன. ரதவீதிகளில் உள்ள கட்டண கழிப்பிடங்களில் பக்தர்கள் கட்டணமில்லாமல் பயன்படுத்த வசதி செய்யப் பட்டிருந்தது.

    தேரோட்டத்தை பார்க்க வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சாமிதரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக மெயின் வாசல் வழியாக செல்கின்ற பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியே சென்றனர். கோவிலுக்கு செல்கின்ற பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் வாசல் வழியாக சோதனைக்கு பின்னர் அனுமதிக்கப்பட்டனர். தேரோட்ட விழாவையொட்டி நெல்லையில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. பக்தர்களின் வாகனங்கள், முக்கியபிரமுகர்களின் வாகனங்கள் செல்ல தனித்தனி இட வசதிகள் செய்யப் ஜீபட்டிருந்தன. நெல்லை நகர் பகுதிகளில் வியாபாரிகள் கடைகளை அடைத்து தேரோட்டத்தில் பங்கேற்றனர்.

    Next Story
    ×