search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்
    X

    ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள்

    இன்று ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் கொடுத்தனர். #aadiamavasai #pitrutharpanam
    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவில் தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படுகிறது. இங்கு மாதந்தோறும் வரும் அமாவாசை அன்று ஏராளமான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பார்கள்.

    இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி கொடுப்பது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதனால் நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக ஆடி, தை மாதங்களில் வரும் அமாவாசை அன்று முன்னோர்களுக்கு திதி கொடுத்தால் நன்மைகள் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

    இதன் காரணமாக இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்திற்கு வருவார்கள். அதன்படி ஆடி அமாவாசையான இன்று ராமேசுவரத்தில் திரளான பக்தர்கள் குவிந்தனர். நேற்று காலை முதலே ரெயில், வேன், பஸ், கார்கள் மூலம் பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    ஆடி அமாவாசையான இன்று அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.

    முன்னதாக கோவிலில் இருந்து ராமர் அக்னி தீர்த்த கடலில் எழுந்தருளினார். பின்னர் தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. அப்போது அங்கு கூடி இருந்த திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.



    கடலில் நீராடிய பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் நீராடினர். இதற்காக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆடி அமாவாசையையொட்டி பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். அக்னி தீர்த்த கடற்கரை, பஸ் நிலையம், ரெயில் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. மேலும் சி.சி. டி.வி. காமிரா மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

    பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு ஊருக்கு திரும்புவதற்கு வசதியாக ராமேசுவரத்தில் இருந்து மதுரை, நெல்லை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் வடமாவட்டங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ரெயில்களிலும் கூட்டம் அலை மோதியது. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ராமேசுவரம் நகராட்சி நிர்வாகம் செய்து இருந்தது.

    இதேபோல் பிரசித்தி பெற்ற விருதுநகர்-மதுரை மாவட்ட எல்லையில் உள்ள சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கசுவாமி கோவிலிலும் ஆடி அமாவாசையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பே மலைக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆடி அமாவாசையான இன்று ஏராளமான பக்தர்கள் சதுரகிரியில் குவிந்தனர்.

    மலைமேல் உள்ள சந்தன-சுந்தரமகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடந்தது. பக்தர்கள் வருகையையொட்டி போலீசார் மற்றும் வனத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். #aadiamavasai #pitrutharpanam
    Next Story
    ×