search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை
    X

    திருப்பதி கோவிலில் பவுர்ணமி கருட சேவை

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இரவு பவுர்ணமியையொட்டி கருட சேவை நடைபெற்றது. இதில் திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி இரவு தேவஸ்தானம் கருட சேவையை நடத்தி வருகிறது. பிரம்மோற்சவ நேரத்தில் நடைபெறும் கருட சேவையை திருமலைக்கு வந்துகாண முடியாத பக்தர்கள் பவுர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். நேற்று பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடந்தது.

    கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு உற்சவ மூர்த்திக்கு ஆரத்தி எடுத்து வணங்கினர். இதில் அர்ச்சகர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.



    ஏழுமலையான் கோவில் மட்டுமின்றி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய வஸ்திரங்கள் அடுத்த மாதம் 4-ந்தேதி இணைய தளம் மூலம் ஏலம் விடப்பட உள்ளன.

    இதில் புதிய, பழைய, சிறிது பழுதடைந்த வஸ்திரங்கள் 226 லாட்கள் உள்ளன. அவற்றில் பட்டுச் சேலைகள், பட்டு உத்திரியங்கள், பாலியஸ்டர், பருத்தி வேட்டிகள், உத்திரியங்கள், டர்க்கி டவல் துண்டுகள், லுங்கிகள், சால்வைகள், படுக்கை பிரிப்புகள், தலையணை உறைகள், ஆயத்த ஆடைகள், உண்டியலுக்கு சுற்றப்படும் துணிகள், ரவிக்கைத் துணிகள் ஆகியவை அடங்கும்.

    இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள், திருப்பதியில் உள்ள தேவஸ்தான சந்தை அலுவலகத்தை 0877-2264429 என்ற தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு விவரங்கள் அறியலாம்.
    Next Story
    ×